Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நல்ல பணத்தைதான் வாங்குகிறோமா? வங்கிகளின் வலுக்கும் சந்தேகங்கள்!

ழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, 20 நாட்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், இன்றுவரை வங்கிகளில் போதிய பணம் இல்லை. ஏ.டி.எம்-கள் பணம் இல்லாததால் இழுத்து மூடப்பட்டுள்ளன. ரூபாய் நோட்டு விவகாரத்தில், மத்திய அரசின் நாளொரு அறிவிப்பும் பொழுதொரு கட்டுப்பாடுகளும் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது, சம்பள தேதியும் வந்து விட்டது. அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் பணத்தை எப்படி எடுக்கப் போகிறார்கள்? ஏற்கெனவே, அன்றாடச் செலவுகளுக்குப் பணம் எடுக்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள். வங்கிகள் இவர்களுக்கு சம்பளப் பணத்தை எப்படி கொடுக்கப் போகிறது?

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் தாமஸ் பிராங்கோ, மத்திய அரசு மீதும், இந்திய ரிசர்வ் வங்கி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார்.

"நவம்பர் 8-ம் தேதியில் இருந்து மத்திய அரசு வெளியிடும் அறிவிப்புகள் அனைத்தும் குளறுபடியாகவே உள்ளது. இரண்டு நாட்களில் ஏ.டி.எம் மையங்கள் செயல்படும் என்று சொன்னார்கள், செயல்பட்டதா? புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய் பணத்தை வைக்க, ஏ.டி.எம்-களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அதைச் செய்யாமல் இரண்டு நாட்களில், ஏ.டி.எம் இயங்கும் என குறிப்பிட்டது, எந்தமுன் யோசனையும் இல்லாமல் வெளியிட்ட அறிவிப்பு என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். அதைவிட  நாள்தோறும் வெளியிடும் குளறுபடியான அறிவிப்புகளால், மக்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் இடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கிகளில் பணம் இல்லையெனில், இழுத்து மூடுங்கள்!

20 நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு, வங்கிகளில் போதுமான பணம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார். ஆனால் இன்றுவரை வங்கிகளுக்கு போதிய பணம் வந்து சேர்ந்தபாடில்லை. ரிசர்வ் வங்கியில் இருந்து வரவேண்டிய பணத்தின் அளவும் அதிகரிக்கவில்லை. இந்த நிலையில் அழிக்க வேண்டிய பணத்தை தற்போது பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறோம். இப்படிப் பல பிரச்னைகளை வங்கிகள் சந்தித்து வருகின்றன. ஏதோ, வங்கி ஊழியர்கள்தான் பணம் தர மறுக்கிறார்கள் என்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. பணம் இல்லாத வங்கிகளை எதற்கு திறந்து வைத்திருக்கிறீர்கள்? என மக்கள் கேட்கிறார்கள். தமிழகத்தில் சில இடங்களில் ஏ.டி.எம் மையங்களை பொதுமக்களே இழுத்து மூடிய சம்பவமும் நடந்துள்ளது.

தனியார் வங்கிகளில் பணம் உள்ளது? பொதுத்துறை வங்கிகளில் ஏன் பணம் இல்லை? என்று பொதுமக்கள் இப்போது கேட்கத் தொடங்கியுள்ளனர். அதற்கேற்ப ரிசர்வ் வங்கியும் தனியார் வங்கிளுக்கு அறிவிப்பு வந்த நாளில் இருந்து 6,100 கோடி ரூபாய்  பணப் பட்டுவாடா செய்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு 4,500 கோடி, ஆக்சிஸ் வங்கிக்கு 700 கோடி, எச்.டி.எப்.சி வங்கிக்கு 900 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 27 பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த தொகையின் அளவு வெறும் 7,700 கோடி ரூபாய் மட்டுமே.

அதிக பணப்பரிமாற்றம் பொதுத்துறை வங்கிகளில் தான் நடக்கிறது. எனவே பணப்பட்டுவாடாவை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கி மிகப்பெரிய  தவறை செய்து வருகிறது. எதற்காக தனியார் வங்கிளுக்கு அதிகப் பட்டுவாடா? மத்திய அரசின் இந்த நடவடிக்கை எங்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. தனியார் வங்கிகளின் சேவையை ஊக்குவித்து, மக்களை அந்த வங்கிகளின் பக்கம் திருப்பவே இப்படிச் செய்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வாராக் கடனில் கவனம் செலுத்த முடியவில்லை!

வாராக்கடன்களை வசூல் செய்யும் வேலைகளை வங்கிகள் செய்யவே இல்லை. பணம் கொடுக்கும் வேலையை மட்டுமே வங்கிகள் செய்து வருகின்றன. இதனால் வாராக்கடன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இந்த ஒரு வருடத்தில் வாராக் கடன் தொகை 80 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 13 ஆயிரம் கோடி ரூபாய் நவம்பர் 8-ம் தேதிக்கு பிறகு கூடியுள்ளது. இது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. வாராக்கடனை வசூலிக்க மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட எதுவும் அமலாகவில்லை. தற்போது ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டு மாதம் கழித்து நீங்கள் கடனை  கட்டினால் போதும் என்று சொல்லியுள்ளது. இதனால் ஒழுங்காக கடன் கட்டி வருபவர்களும் கட்டவில்லை. எனவே, வங்கிகளுக்கு  வரும் மார்ச் மாதம் இது, மிகப்பெரிய சுமையாக இருக்கப் போகிறது. இதன் காரணமாக வங்கிகளின் பணம் கையிருப்பு குறைந்து, தனியார் மயத்தை நோக்கி, வங்கிகளைக் கொண்டு செல்வதே மத்திய அரசின் நோக்கமாக அமையும்.

வெளிப்படையான அறிவிப்பு தேவை !

வங்கிகளுக்கு எவ்வளவு பணம் வரப்போகிறது? என்பது எதுவும் தெரியவில்லை. இன்னும் எவ்வளவு தேவை என்பதும் தெரியவில்லை. டாஸ்மாக் போன்ற அன்றாடம் பணம் கட்டும்  ஊழியர்களை தொடர்பு கொண்டு பணத்தை வங்கிகளில் கட்டுங்கள் என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் வங்கிகளுக்கு விநியோகிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்பதை மாநில வாரியாக வெளிப்படையாக ரிசர்வ் வங்கி அறிவிக்க வேண்டும். அதேபோன்று அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து வங்கியின் புழக்கத்தில் இருந்த தொகை எவ்வளவு?  வெளியில் இருந்த தொகை எவ்வளவு? என்பதை வெளியிட வேண்டும். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 14.6 லட்சம் கோடி. அதில் 60 சதவீதம் வங்கிக் கிளைகளில் இருந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது (8 லட்சம் கோடி) 60 சதவீதம் திரும்பி வந்துள்ளது என்கிறார்கள். அப்படி என்றால் 120 சதவீதம் அல்லவா? எங்கே கோளாறு? நாங்கள் கள்ளப் பணத்தை தான் வாங்குகிறோமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.எனவே இதுகுறித்த வெளிப்படையான அறிவிப்பை மாநில வாரியாக மத்திய அரசு வெளியிட  வேண்டும். அதேபோன்று அதானி, அம்பானி போன்றோருக்கு இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட பணத்தின் தொகை எவ்வளவு? போன்ற விளக்கங்களையும் அரசு தர வேண்டும்.

தற்போது மாதச் சம்பளதாரர்கள் பணம் எடுப்பதற்காக, வங்கிகளையும் ஏ.டி.எம்-களையும் நாடுவார்கள். இவர்களுக்கு பணம் கொடுப்பதற்கு ரிசர்வ் வங்கி போதுமான பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். சம்பளத்தையும், ஓய்வூதியத்தையும் வழங்க ஒரு கிளைக்கு ஒரு கோடியில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. ஆனால் வங்கிக் கிளைகளில் உள்ள கையிருப்பு 10 முதல் 20 லட்சம் ரூபாய் வரைதான் உள்ளது.

அக்டோபர் 30-ம் தேதி வரை பொதுத்துறை வங்கிகளில் 15 ஆயிரம் கோடி ரூபாய் இருந்தது. ஆனால் நேற்றைய (29.11.2016) நிலவரப்படி, மூவாயிரம் கோடி ரூபாய்தான் உள்ளது. குறைந்தபட்சம் 10 ஆயிரம் கோடி ரூபாய் ஓய்வூதியத்துக்கும், சம்பளத்துக்கும் தமிழகத்தில் தேவைப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்றார் தாமஸ் பிராங்கோ.

- கே. புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ