Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"இரட்டை இலை அதிகாரப் போட்டி... சிக்கலில் டி.டி.வி தினகரன்"

தினகரன்

அ.தி.மு.க-வில் ஆட்சி அதிகாரப் போட்டியின் சூடு தணிவதற்குள்... அடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது. 'இரட்டை இலை சின்னம் யாருக்கு' என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், சசிகலா தரப்பும் மோதிக்கொள்ளும் நிலைமை உச்சத்தை எட்டியுள்ளது. இதில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்... ''அ.தி.மு.க-வில் தொடர்ந்து ஐந்தாண்டுகள் உறுப்பினராக இருந்தவர்கள்தான் கட்சியின் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும்'' என்று கட்சி விதிகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளனர்.

இலை அதிகாரப் போட்டி!

இந்த மனுவைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், இதற்குப் பதில் அளிக்குமாறு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு சசிகலா பதில் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அதற்குப் பதில் அளித்திருந்தார். ''ஏற்கெனவே அ.தி.மு.க நிர்வாகிகளாக இருப்பவர்கள் மட்டுமே இதற்குப் பதில் அளிக்க வேண்டும்'' என்று சொல்லி, தேர்தல் ஆணையம் அவர் அளித்த பதிலை நிராகரித்துவிட்டது. இதனையடுத்து, சிறையில் உள்ள சசிகலாவிடம் கையெழுத்துப் பெற்று 70 பக்கம் கொண்ட பதிலை தினகரன் மீண்டும் அனுப்பினார். ''சசிகலாவின் பதிலுக்கு மார்ச் 14-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்'' எனத் தேர்தல் ஆணையம் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் 61 பக்கம் கொண்ட விளக்கத்தைத் தற்போது கொடுத்துள்ளனர். இதைப் பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், ''இதன் முடிவை வருகிற மார்ச் 20-ம் தேதிக்குள் அறிவிக்கும்'' என அந்த வட்டாராங்கள் கூறுகின்றன.

விஜயன் ''தேர்தல் ஆணையத்தால், சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்கப்பட்டால், தினகரனும் செல்லாதவராக ஆகிவிடுவார்'' என்கிறார் வழக்கறிஞர் விஜயன். மேலும் அவர், ''நடந்துமுடிந்த தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுடைய தேர்தல்களின்போது வேட்புமனுப் படிவத்தில் பொதுச் செயலாளர் கையெழுத்திட வேண்டும். அதன் காரணமாக மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்ட மனுத் தாக்கல் விவகாரம் சர்ச்சைக்குள்ளானது. துணைப் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது. அதைவைத்து மனுத் தாக்கல் செய்யக் கூடாது. அந்த வகையில், சசிகலாவிடமும் கையெழுத்து வாங்கித்தான் மனுத் தாக்கல் செய்ய வேண்டிய நிலை தினகரனுக்கு ஏற்படும். இப்படிப்பட்டச் சூழலில் சசிகலாவை நியமித்தது செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தால், அது தினகரனுக்கு மிகப் பெரிய சிக்கலை உண்டாக்கும். அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடாத நிலை ஏற்படும். அதனால், தினகரன் விவகாரத்தை அரசியல் களத்தில் உள்ளவர்கள்தான் பேச வேண்டும்'' என்றார்

சிங்கப்பூரில் சிக்குவாரா?

''அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிங்கப்பூர் குடியுரிமைவாதி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட தினகரனுக்கு, இதுதொடர்பாக ஏதாவது சிக்கல் எழுமா'' என்று நாம் கேள்வி எழுப்பியபோது, '''நிரந்தரக் குடியுரிமை பெற்றவராக இருந்தாலும் அவர் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், அந்த நாட்டின் குடிமகன் என்றால் அவர் போட்டியிட முடியாது. குடியுரிமை பெறுவதற்கு ஒரு குறிப்பிட்டத் தொகை கட்டினால் போதும். யார் வேண்டுமானாலும் அதைப் பெற முடியும். ஆனால், தினகரன் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதாகத்தான் தெரிகிறது. இதில், எந்தப் பிரச்னையும் வர வாய்ப்பில்லை. மேலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தினகரன் தாக்கல் செய்துள்ள ஆவணத்தை இந்தியப் பிரஜையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது'' என்றார்.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமியிடம் பேசினோம். ''இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு  கோபால்சாமி பன்னீர்செல்வம் கேட்டு வருகிறார். இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தில் இருப்பதால், உண்மையான அ.தி.மு.க யார் என அவர்கள் அறிவிப்பர். மேலும், இரண்டு தரப்பிலும் வாதங்கள் சரியான முறையில் இருந்து... சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை என்றால், ரிட்டர்னிங் அதிகாரி முன்புவர வாய்ப்புள்ளது. இதில், சரியான முறையில் எந்தத் தரப்பின் வாதங்கள் வைக்கப்படுகிறதோ... அந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் போகும்.

இதேபோன்று உத்தரப்பிரதேசத்தில், அகிலேஷ் - முலாய் சிங் இடையிலான சைக்கிள் சின்னம் ஒதுக்குவதில் போட்டி எழுந்தது. அப்போது இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வந்தபோது,  சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. இருந்தாலும், அதைத் தேர்தல் ஆணையம் முறையாக ஆய்ந்து... சின்னம் யாருக்கு என்பதை ஒதுக்கி உத்தரவிட்டது. இங்கும் அதேபோல் சின்னத்தை ஒதுக்குவதற்கு ஏற்றச் சூழல் இருந்தால்,தேர்தல் ஆணையம் அதன் முடிவை அறிவிக்கும்'' என்றார்.

முதலமைச்சர் நாற்காலியில் அமருவதற்கு நகர்த்தப்பட்ட காய்களைவிட, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்... அ.தி.மு.க-வுக்குச் சின்னம் ஒதுக்கும் விவகாரம் புழுதியைக் கிளப்பும் எனத் தெரிகிறது. இதில் அதிகமான சிக்கல் ஆளும் தரப்புக்குத்தான் என்று விபரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

- கே.புவனேஸ்வரி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close