Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இடைத்தேர்தல் களமான ஆர்.கே.நகரின் தேவைகள் என்ன? சி.மகேந்திரன் பேட்டி

இடைத்தேர்தல் மகேந்திரன்


முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியாக இருந்த ஆர்.கே.நகர், அவர் இறந்து விட்டதால் இப்போது இடைத்தேர்தல் நடக்க உள்ளது. 2015-ம் ஜூன் மாதம் இடைத்தேர்தல் நடந்தபோது ஜெயலலிதா தொகுதி மக்களுக்காக ஏகப்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்தார். அவற்றில் எதையெல்லாம் நிறைவேற்றினார்கள். ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி.மகேந்திரனிடம் பேசினோம்.

“ஆர்.கே.நகரில் ஜெயலலிதா இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார். தொகுதியில் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?”

“நம்முடைய ஜனநாயகம் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு உதாரணமாக ஆர்.கே. நகர் தொகுதி இருக்கிறது. சென்னையின் முக்கியமான பகுதியாக இருக்கும் ஆர்.கே.நகர் அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. அடித்தள மக்களுக்கான வாழ்வாதாரங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஒவ்வொரு முறையும் தேர்தலில் வாக்குறுதிகள் கொடுக்கின்றனர். ஆனால், நிறைவேற்றுவதில்லை"

“ஆர்.கே.நகரின் முக்கியமான பிரச்னை என்று எதைக் கருதுகிறீர்கள்?”

“கொடுங்கையூர் குப்பை மேடுதான் தொகுதியின் முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. சென்னை மாநகரம் முழுவதும் சேரும் குப்பைகளை இங்கு மலை போல குவித்து வைத்திருக்கிறார்கள். விஷக்கிருமிகள் கொண்ட மருத்துவ கழிவுகளைக் கொட்டுகிறார்கள். ரசாயனக் கழிவுகளை இங்குதான் கொட்டி வைக்கின்றனர். குப்பைகளை அடிக்கடி எரிப்பதால் அந்தப் பகுதியைச் சுற்றி வசிக்கும் ஆர்.கே.நகர் தொகுதி வாசிகளுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. கொடுங்கையூர் குப்பை மேட்டை அகற்றி நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கைகள் வைத்து வருகின்றோம். இடைத்தேர்தல் நடந்தபோது இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகக் கூறினார்கள். ஐ.ஐ.டி தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மூலம் ஆய்வு செய்து நிரந்தரத் தீர்வு செய்வதாகக் கூறினார்கள். ஆனால், அதை செயல்படுத்தவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை."

“போக்குவரத்துப் பிரச்னையைத் தீர்க்க பாலம் கட்டியிருப்பதாக சொல்கின்றனரே?”

“ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் குறுகிய தெருக்களாக இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. கொருக்குப் பேட்டையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக  பாலம் கட்டப்பட்டு வந்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில்தான் அதைத் திறந்தார்கள். ஆனால், இன்னும் அது முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. முழுமையாக போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும்"

“தொகுதியில் வேறு என்ன பிரச்னைகள் இருக்கின்றன?”

“ஆர்.கே.நகர் தொகுதியின் மிகப்பெரிய சீரழிவு, அங்கு அதிக அளவு டாஸ்மாக் கடைகள் இருப்பதுதான். 2015 ஜூன் மாதம் இடைத்தேர்தல் முடிவடைந்த உடன் 2 மதுக்கடைகளை மூட வைத்தோம். இருந்தும் பல இடங்களில் பள்ளிகளுக்கு அருகிலேயே மதுக்கடைகள் இருக்கின்றன. அந்த மதுக்கடைகளை எல்லாம் மூட வேண்டும். தமிழகத்திலேயே ஆர்.கே.நகர் தொகுதியில்தான் முதன் முறையாக குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் தொடங்கப்பட்டன. பல குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் சரி செய்ய வேண்டும். அதே போல தொகுதியின் பல்வேறு இடங்களில் பாதாளச் சாக்கடை முறையாக இல்லை. அவற்றையும் சரி செய்ய வேண்டும்.”

“தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் என்ன வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகிறீர்கள்?”

“தொகுதியில் பெரிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும். சிறுதொழில்கள் இருக்கின்றன. சுகாதார வசதிகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியமான கட்டமைப்பு வசதிகளை ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்படுத்த வேண்டும். இதுதான் இன்றைக்கு அந்தத் தொகுதிக்கு அத்தியாவசியமான தேவை என்று கருதுகின்றேன்.”

“வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?”

“ஆர்.கே.நகர் தொகுதிக்குள் இருக்கும் இளைஞர்கள் வறுமை, ஏழ்மை காரணமாக கஷ்டமான சூழலில் இருக்கின்றனர். இவர்கள் மூலமாகத்தான் தொகுதி முழுக்கவும் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் நடைமுறையை ஒரு சடங்காகவே மாற்றி விட்டனர். கோவில் திருவிழா போல, தேர்தல் திருவிழாவில் பணம் கொடுப்பதையும் விழா போன்ற கொண்டாட்டமாகக் கருதுகின்றனர். செல்போனுக்கு டாப் அப் செய்கின்றனர். பால் பாக்கெட் வாங்க பணம் கொடுக்கின்றனர். பெட்ரோல் போடுவதற்கு டோக்கன் தருகின்றனர். இதையெல்லாம் தடுக்க வேண்டும் என்றால், தொகுதியில் உள்ள இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.”

- கே.பாலசுப்பிரமணி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close