Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ஹவாலா” தினகரன் தான் ஆர்.கே.நகர் வேட்பாளரா? - அறப்போர் இயக்கத்தின் சாட்டை!

 தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவருகின்றன. இதில், அ.தி.மு.க-வின் வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆர்.கே.நகர் ஃபீவர்... தமிழகத்தைத் தொற்றிக்கொண்டிருக்கையில், அறப்போர் இயக்கம் டி.டி.வி.தினகரனின் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ''குற்றப் பத்திரிகையில் சேர்க்கவேண்டிய தினகரனை, ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்போகிறோமா'' என்ற கேள்வியுடன் தொடங்கும் அந்த வீடியோவில், ''அ.தி.மு.க-வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தினகரன் யார்...'', ''அவருடைய, உண்மையான முகம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா...'' எனப் பல கேள்விகளுடன் நீள்கிறது, அந்த வீடியோ.

''குற்றப் பத்திரிகையில் சேர்க்கவேண்டியவர்!''

சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன்தான் இந்தத் தினகரன். சசிகலா செய்த பல ஊழல்களிலும் தினகரனுக்கு பங்கு உள்ளது. எடுத்துக்காட்டாக, முறைகேடாகச் சம்பாதித்த பணத்தை... 'நமது எம்.ஜி.ஆர்' நாளிதழ் மற்றும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் வங்கிக் கணக்குகளில் அவர்கள், எப்படிக் கோடியாகக் கோடியாகச் சேர்த்தார்கள் என்பதை அந்த வீடியோ தெளிவாக விளக்குகிறது. அது, 'நமது எம்.ஜி.ஆர்' நாளிதழின் வங்கிக் கணக்கில் மட்டும், 15 கோடி ரூபாயை டெபாஷிட் செய்திருந்ததாகத் தெரிவிக்கிறது. மேலும், ''அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவர் மட்டும் அல்ல... தினகரனும் பங்குதாரர்'' என்று நீதிபதி குன்ஹா தெரிவித்த தீர்ப்பையும் அந்த வீடியோ சுட்டிக்காட்டி நகர்கிறது.

இந்த இரண்டு வங்கிக் கணக்குகளில் இருந்துதான் கோடிக்கணக்கான பணம் எடுக்கப்பட்டு, அதை 32 பினாமி நிறுவனங்களுக்கு மாற்றி... அதன்மூலம் மூவாயிரம் ஏக்கர் நிலம் வாங்கப்பட்டிருப்பதாகவும் அது தெரிவிக்கிறது. மேலும் அதில், ''தினகரனை மட்டும் சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்காமல், காவல் துறை ஏன் விட்டுவிட்டது'' என்ற கேள்வியும் எழுகிறது. காவல் துறை நடவடிக்கை எடுத்திருந்தால், தினகரனும் நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்திருப்பார் என்றும், மக்களும் அவரைக் களத்தில் சந்தித்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்ககாது என்றும் தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி... லஞ்சம், ஊழல் மூலமாகச் சேர்த்த பணத்தை, வெளிநாட்டுக்கு எடுத்துச்சென்று சொத்து சேர்த்தவரும் இந்தத் தினகரன்தான் என்று பட்டியலிடுகிறது.

ஜெயலலிதாவும் தினகரனும் பங்குதாரராக இணைந்து, 280 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஹோட்டலை... லண்டனில் வாங்கிய விவகாரத்தில், லஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்புத் துறை வழக்குப்பதிவு செய்ததையும் அந்த வீடியோ சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், தினகரன் தன்னுடைய சிங்கப்பூர் மற்றும் துபாய் நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளில் இருந்து, லண்டனைச் சேர்ந்த நைனேஷ் தேசாய் என்பவருக்கு 56 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்துதான் இந்த ஹோட்டலை வாங்கினார் என்பதை ஆவணங்களை வைத்துக் கோடிட்டுக் காட்டுகிறது. ''சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு பகுதியாக இருந்த இதனை, நிரூபிக்க வேண்டும் என்றால்.. ஒன்பது பேரை லண்டனில் இருந்து வரவழைக்க வேண்டியுள்ளது. அதனால், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் தாமதமாகும்'' என்ற அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, அந்த வழக்கில் சேர்க்கப்பட்ட இந்தப் பகுதியை மட்டும் திரும்பப்பெற்றதாக வீடியோ சொல்கிறது.

வெளிநாட்டுச் சொத்துக்களை வாங்கிக் குவித்தார்!

“1988-ம் ஆண்டுவரை காசில்லாமல் இருந்த தினகரனுக்கு, 56 கோடி ரூபாய் பணம் எங்கிருந்து வந்ததது'' என்று கேள்வி எழுப்பும் அந்த வீடியோ, ''சொத்துக் குவிப்பு வழக்கு தாமதமாகும் என்ற காரணத்தால்தான்... தினகரன், இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்றும், தவறான வழியில் சம்பாதித்த பணத்தை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்றார்'' என்றும் அது சொல்கிறது. தன்னுடைய சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் இருந்து 42 கோடி ரூபாய் பணத்தை எடுத்து... அதை, கறுப்புப் பணத்தைப் பதுக்குவதற்கான நிறுவனங்களில் தினகரன் டெபாஷிட் செய்ததையும் அந்த வீடியோ அம்பலப்படுத்துகிறது. இந்தப் பணப் பதுக்கல் வழக்கில்தான் அமலாக்கப் பிரிவு 85 கோடி ரூபாய் அபராதம் விதித்தது மட்டுமல்லாமல்... அந்தப் பணத்தை, வட்டியோடு இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவு போட்டதையும் குறிப்பிடுகிறது. அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின்படி, தினகரன் ஒருவருடம்  சிறையில் அடைக்கப்பட்டதையும், அதற்கு அவர், ''தன்னைச் சிறையில் அடைத்தது தவறு'' என்று கூறி வழக்குத் தொடர்ந்ததையும் அந்த வீடியோ சொல்கிறது. உச்ச நீதிமன்றம்வரை போன இந்த வழக்கில், ''தினகரனை, போபிஷா சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தது சரிதான்'' என்று நீதீமன்றம் கூறியதையும் அது நினைவுப்படுத்துகிறது. தமிழர்களின் பணத்தைச் சுரண்டி, கோடிக்கணக்கில் வெளிநாட்டில் பதுக்கிய இவரையா ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தேடுக்கப் போகிறீர்கள்'' என்று ஜெயராம் வெங்கடேசன் கேள்வியுடன் அந்த வீடியோ நிறைவுபெறுகிறது. 

சசிகலா குடும்பம்  அதிகாரத்துக்கு வரக்கூடாது ..?

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், "ஒட்டுமொத்த தமிழகத்தையும் சசிகலா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்தார். ஆனால், அவருடைய திட்டம் நடக்காமல் போய்விட்டது. தற்போது தினகரனை வைத்து காய்களை நகர்த்தி வருகிறார். அந்த வகையில், தினகரனை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெறவைத்து முதலமைச்சர் பதவியில் அமரவைப்பதற்கான வேலை போய்க்கொண்டிருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு அறப்போர் இயக்கம்,சசிகலாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகத் தொடர்ந்து, அவர்களுடைய ஊழல்களை வெளியிட்டு வருகிறது. அதன் காரணமாகவே ஆர்.கே.நகர் மக்கள், தினகரனைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளோம்" என்றார்.

இரட்டை இலைச் சின்னம் பெறுவதில் சிக்கல், சிங்கப்பூர் குடியுரிமை விவகாரம் போன்றவை தினகரனுக்குத் தலைவலியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ''சொத்துக்குவிப்பு வழக்கில் தப்பித்துக்கொண்ட குற்றவாளியான தினகரனுக்கா வாக்களிக்கப் போகிறீர்கள்'' என்று சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்துள்ளது, அறப்போர் இயக்கம்.

- கே.புவனேஸ்வரி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close