Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாஞ்சில் நாட்டு வாழ்க்கையும் நாவூற வைக்கும் உணவுகளும்!

"வாங்க மக்களே..." என்று அன்பாக அழைப்பதில் ஆகட்டும்.. வியர்வை உலரும் முன்பாக தேன் கலந்த  தண்ணீர் தந்து உபசரிப்பதில் ஆகட்டும்.. விருந்தோம்பல் பண்பில் நாஞ்சில்  மக்களுக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு. பசிக்கு மட்டுமன்றி, ருசிக்கும், ரசனைக்கும் உரியதாக உணவைக்கருதும் நாஞ்சில் நாட்டு மக்கள் முகக்குறிப்பில் பசி உணர்ந்து அள்ளிக்கொடுக்கும் பண்பு கொண்டவர்கள். 

நாஞ்சில் நாடு- குமரி

இன்றைய குமரி, அக்காலத்தில் ஆய்நாடு, நெங்கநாடு, படப்பநாடு, வள்ளுவநாடு, குறுநாடு, புறத்தாநாடு, நாஞ்சில்நாடு எனப் பல குறுநாடுகளாகப் பிரிந்து கிடந்தது. கிழக்கே ஆரல்வாய்மொழி, மேற்கே ஆளூர் பன்றி வாய்க்கால், வடக்கே கடுக்கரை மலை, தெற்கே மணக்குடி காயல்.. இதுதான் நாஞ்சில் நாட்டின் எல்லைகள். நாஞ்சில் குறவன், நாஞ்சில் பொருநன், நாஞ்சில் வள்ளுவன், பெரிய வீட்டு முதலியார் உள்ளிட்டோர் ஆண்ட இப்பகுதி, பிற்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் பிடிக்குள் சென்றது. வடக்கிலும் கிழக்கிலும் மலைவளமும், மேற்கே நிலவளமும், தெற்கே கடல்வளமும் அமையப்பெற்ற  இந்நிலத்துண்டில்தான் தமிழரின் பண்பாடு துளிர்த்தது என்கிறார்கள் மானுடவியல் அறிஞர்கள்.

 
 1956ல் நாஞ்சில்நாடு உள்ளடங்கிய குமரிமாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டாலும், மொழி, உணவு, பண்பாடு, கலை, பண்டிகைகள், சடங்குகள் என அனைத்திலும் திருவிதாங்கூரின் பண்புகளே ஒட்டியிருக்கிறது. தீபாவளி அளவுக்கு ஓணம் பண்டிகையும், விஷூ பண்டிகையும் களைகட்டுகின்றன. விருந்தோம்பல் மற்றும் உணவுப்பண்பாட்டிலும் பெரிய வேறுபாடுகள் இல்லை.
வடக்கு மலையில் உற்பத்தியாகி எல்லைவரை தவழ்ந்தோடும் பழையாறு நதியின் புண்ணியத்தில் எக்காலமும் பசுமைபூத்துக் கிடக்கிறது நாஞ்சில்நாடு. பிரிவினைக்கு முன்பு நாஞ்சில்நாடுதான் திருவிதாங்கூரின் நெற்களஞ்சியம். இங்குமட்டுமே விளையும் குண்டுச்சம்பா அரிசிக்கு கேரளமாநிலமே மயங்கிக் கிடக்கிறது. தென்னை, வாழை, பரந்து விரிந்த நெல்வயல்கள்.. கிழக்குப்புறத்தில் அடர்ந்த பனைமரங்கள். கட்டிச்சம்பா, பூவன்சம்பா, கிச்சடி சம்பா, வாசரமுண்டா, பூம்பாலை என 60க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல்ரகங்கள் விளைகின்றன. வாழையில் மட்டும் நேந்திரன், பேயன், பாளையங்கொட்டன், மொந்தன், சிங்கன், துளுவன், செந்துளுவன், நெய்த்துளுவன், ரசகதலி, மட்டி, பச்சைப்பழம் என 15க்கும் மேற்பட்ட வகைகள்.. நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்க்கையில் இருந்து நேந்திரம் பழத்தைப் பிரிக்கமுடியாது. நேந்திரங்காய் வற்றல், நேந்திரம்பழப் பாயாசம், பழம்பொறி, சர்க்கரை வரட்டி, புளிச்சேரி என அதன்மூலம் ஏகப்பட்ட பதார்த்தங்கள் செய்கிறார்கள். வீட்டுக்குவீடு நேந்திரம்பழத் தார் உண்டு. திடீர் விருந்தினர்கள் வந்தால் நேந்திரம்பழ கவனிப்புதான். இதை ஏத்தங்காய் என்கிறார்கள்.

நாஞ்சில் நாட்டு உணவுகள்


புளிச்சேரி, எரிச்சேரி, ஓலன், தோரன், இஞ்சிக்கறி, அவியல், தீயல், கிச்சடி என வேறெங்கும் கிடைக்காத பல சிறப்புணவுகள் இங்குண்டு. உபசரிப்பு, விருந்தோம்பல் பண்பில் உணவு இயல்பை விட அதிகம் ருசிக்கின்றது.


நாஞ்சில் நாட்டின் முக்கிய பொருளாதாரப் புலம் பனைமரங்கள்தாம். வீட்டுக்குவீடு பதநீர் இருப்பு வைத்திருப்பார்கள். சீனி, வெல்லத்துக்கெல்லாம் வேலையில்லை. இனிப்பென்றால் பதநீரில் தயாராகும் கருப்பட்டிதான்.
பதநீரில் கூழ்பதநீர், பயத்தம்கூழ் பதநீர், அண்டிப்பருப்புப் பதநீர், புளிப்பதநீர் என  10க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. பானையில் பதநீரைக் கொட்டி வேடுகட்டி வைத்திருப்பார்கள்.  கூழ்பதநீர் ஜெல்லி மாதிரி இருக்கும். நெடுநாட்கள் கெட்டுப்போகாது. அதேபோல கருப்பட்டியிலும் பலவகை உண்டு. எல்லா வீடுகளிலும் அடுப்புக்கு மேல் கருப்பட்டிப் பிறை என்று ஓர் அறை இருக்கும். அதற்குள் கருப்பட்டியை வைத்துவிடுவார்கள். அடுப்பு வெப்பத்தில் நன்றாக வெந்து மேல்பகுதி கருத்துப்போயிருக்கும். உடைத்தால் உள்ளே மஞ்சள் நிறத்தில்  மகுந்து விழும். சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். அதற்குப் பெயர் வெட்டக்கருப்பட்டி. வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு கூழ்பதநீரும், வெட்டக்கருப்பட்டியும் தந்து உபசரிப்பார்கள்.  இந்தப்பகுதியில் கிடைக்கக்கூடிய தேன் ரொம்பவே அபூர்வமானது. நிறைய மருத்துவ குணங்கள். எல்லோரின் வீட்டிலும் தேன்குடுவை இருக்கும். அதேபோல் வீட்டுக்கு வீடு சக்கைப்பழம் (பலாப்பழம்), மாம்பழம் விளையும். அந்தப்பழங்களை வெட்டி தேன்விட்டுக் கொடுப்பார்கள்.  

நாஞ்சில் நாடு


நாஞ்சில் நாட்டு உணவில் சுவைக்கு இணையாக சத்தும் நிறைந்திருக்கும். மேல்தோல் நீக்கப்படாத சம்பா அரிசியில்தான் சாதம் வடிப்பார்கள். சாதம் வேகும்போது ஊரே மணக்கும். கன்னிப்பூ, கும்பப்பூ என இரண்டு சாகுபடி. இடைப்பட்ட காலங்களில் உளுந்து, சிறுபயிறு என தானியங்களை விதைத்து  அறுவடை செய்து இருப்பு வைத்துக்கொள்வார்கள்.  சிறு தானியங்களும் பெருமளவு பயன்படுத்துகிறார்கள். உளுந்தங்கஞ்சியும் சிறுபயறு கஞ்சியும் நாஞ்சில்நாட்டின் முக்கிய உணவுகள். இந்தக் கஞ்சிகளுக்கு தொடுகறி கானா சம்மந்தி, பொறிகடலை சம்மந்தி. சம்மந்தி என்றால்  துவையல். சிலபேர் கருப்பட்டியையே தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள். 
 நாஞ்சில்நாடு முக்கியமான தேங்காய் உற்பத்தி மண்டலம். எல்லா உணவுகளிலும் தேங்காய்ப் பயன்பாடு இருக்கும். ஆனால், எண்ணெய்ப் பயன்பாடு குறைவு. மிளகாயும் குறைவாகவே பயன்படுத்துவார்கள். நல்லமிளகு, குறுமிளகுதான். அதேபோல இனிப்புகளுக்குக் கருப்பட்டி. அதேபோல அப்பமும் மிக முக்கிய உணவு. தோசைபோலவே இருக்கும் இதில் தேங்காய்ப்பால் அல்லது கடலைக்கறி, கிழங்குக்கறி சேர்த்து சாப்பிடுவார்கள். அவியல் இல்லாமல் ஒரு சாப்பாடும் கிடையாது. சேனை, வழுதலங்காய், புடலை, வாழைக்காய், பூசணிக்காய், முருங்கைக்காய் என்று அத்தனை காய்கறிகளையும் போட்டு தேங்காய் அரைத்து ஊற்றி அவிப்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். அச்சுமுறுக்கு, முந்திரிக்கொத்து, மனோகலம், உப்பேரி, கருப்பட்டி அதிரசம், சுத்துமுறுக்கு, அரிசி சீடை.. இவையெல்லாம் இந்த மண்ணுக்குரிய பதார்த்தங்கள். அதேபோல ரசவடையும் முக்கியமானது.  

நாஞ்சில் நாட்டு உணவுகள்


இன்னுமொரு முக்கிய உணவு மீன். மீனை வறுக்கமாட்டார்கள்.  குழம்புதான். அதிலும் `புளிமுளம்'  என ஒரு குழம்பு உண்டு. அயிரை, சாலை, நெய்மேனி, குதிப்பு, பண்ணா, கொழுவுச்சாலை மீன்களில் மட்டும்தான் செய்யமுடியும். அதேபோல, கட்டா, விலைமீன், பாறை, சீலா மீன்களை வைத்து `அவித்த கறி' என்று ஒன்று செய்வார்கள். நான்கு நாள் சுடவைத்து சுட வைத்துச் சாப்பிடலாம். 
அருகில் உள்ள கேரள உணவையும், நாஞ்சில் நாட்டு உணவையும் தனித்து அடையாளம் காண்பது சிரமம். பல ஐட்டங்கள் இரண்டு பகுதிக்கும் பொதுவானவை. கேரளமக்கள் விருந்து நிகழ்வுகளுக்கு நாஞ்சில் நாட்டுச் சமையல்காரர்களைத்தான் விரும்பி அழைக்கிறார்கள்.

 
`இனிப்பு, காரம், புளிப்பு என்று அருஞ்சுவைகளும் அடங்கியது நாஞ்சில் நாட்டு உணவு. பதார்த்தங்களை இலையில் வைத்தால் வண்ணங்களால் கோலம் போட்டது போல இருக்கும். தும்பு இலை விருந்து என்று ஒன்றுண்டு.  சுபகாரியங்களில் தும்பு இலையில் பரிமாறினால்தான் பெருமை. கிழிசல், வாடல், கசங்கல், இலசல், முற்றல், கோணல் இல்லாத நடுத்தர வாழையிலைதான் தும்பு இலை . ஏத்தங்காய் வற்றல், உப்பேறி, இஞ்சிப்புளி, நார்த்தங்காய்க் கறி, மாங்காய்க்கறி,  வெள்ளரிக்காய் கிச்சடி, பீட்ரூட் கிச்சடி, பாகற்காய் கிச்சடி, பைனாப்பிள் கிச்சடி, அவியல்,  துவரன். ஓலன், எரிசேரி,  பப்படம், ரசகதலிப் பழம், சாதம், பருப்பு, நெய், சாம்பார், புளிச்சேரி,   ரசம், சம்பாரம். உள்ளித்தீயல், பாயசம் என நாஞ்சில் நாட்டு விருந்து மலைக்க வைத்துவிடும். உணவு வகைகளைப் பார்த்தாலே பசியடங்கிப் போகும்.

 
நாஞ்சில் நாட்டில் 30க்கும் மேற்பட்ட பாயச வகைகள் உண்டு. நேந்திரம் பாயசம், சக்கைப் பாயசம், அடைப் பாயசம், பால்பாயசம், சிறுபருப்புப் பாயசம், கடலைப்பருப்புப் பாயசம், சேனைப்பாயசம், தடியங்காய்ப் பாயசம், சேமியாப் பாயசம், கோதுமைப் பாயசம்.. அடைப் பாயாசத்தில் மட்டி வாழைப்பழம் பிசைந்து  சாப்பிடுவார்கள்.  பால் பாயாசத்தில் போளி, பூந்தி சேத்துச் சாப்பிடுவார்கள். 
நேந்திரம் பழத்தை மாவில் தோய்த்து எண்ணெயில் பொறித்தெடுக்கும் பழம்பொறி, புட்டுப்பயிறு, அரிசிக்களி, உளுந்தங்காடி, நெய்யப்பம், பலாப்பழக் களி, உன்னியப்பம், சுக்குப்பால், மெழுகுபுரட்டி, கருப்பட்டி அதிரசம் என நாஞ்சில் நாட்டுக்கே உரித்தான பதார்த்தங்கள் நிறைய உண்டு. 


தொல் மானுடம் உதித்த பூர்வீக பூமியான நாஞ்சில் மண்ணில் வாழ்வதே சுகம். அம்மண்ணின் உணவுகள்  அந்த வாழ்க்கையை இன்னும் உன்னதமாக்குகின்றன. "செவிக்கு இசையும், கண்ணுக்குச் சிற்பமும், ஓவியமும், மனதுக்குக் காமமும் போல் நாவிற்கும் மூக்கிற்கும் சமையல்.." என்பார் நாஞ்சில்நாடன். அப்படியானதுதான் நாஞ்சில் நாட்டு உணவு ..!

வெ.நீலகண்டன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close