Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயிகள் தற்கொலை - இந்திய அரசு பொய்க் கணக்கு காட்டுகிறதா? #VikatanDataStory

விவசாயத் தற்கொலை

விவசாயிகள் தற்கொலையில் அரசின் கவனம் பெரிதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எப்போதும் இருக்கும் ஒன்று.  நாட்டில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்னமும் நாட்டின் மக்கள் தொகையில்  55 சதவிகித பேருக்கு விவசாயம் தான் வாழ்வாதாரமாக உள்ளது. இந்திய ஜி.டி.பி.யில் சுமார் 14 சதவிகிதப் பங்களிப்பு விவசாயம் மூலம் கிடைக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்துவருவதாலும், வறட்சி காரணமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. 

2015ம் ஆண்டில் மொத்தம் தற்கொலை செய்துகொண்ட 1 லட்சத்து 33 ஆயிரத்து 623 பேரில் 12602 பேர் (அதாவது 9.4 சதவிகிதம்) விவசாயத் தொழிலைச் சேர்ந்தவர்கள். அதில் விவசாயிகள் 8007 பேர் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் 4595 பேர்.  2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் மொத்தத் தற்கொலையில் விவசாயிகளின் சதவிகிதம் 9.4 ஆக இருந்தாலும், தற்கொலை செய்துகொண்ட நபர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 2 சதவிகிதம் கூடியுள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிட்ராவில் 3030 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு அடுத்தபடியாக தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் முறையே 1358 மற்றும் 1197 பேர் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை

(2015 கணக்கெடுப்பின்படி)

load
வி.தொ - விவசாயத் தொழிலாளர்கள்

விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் எந்தக் காரணங்களால் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இதே தகவலைத்தான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. 2015ம் ஆண்டு வரையிலான தகவலைத்தான் அரசு தனது தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலை NCRB இணையதளத்தில் அரசு 2015ம் ஆண்டு விவசாயிகள் தற்கொலை என்ற பிரிவின் கீழ் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளபடி  விவசாயிகள் தற்கொலைக்கு காரணங்களாக

 38.7 சதவிகிதம் கடன் சுமை,

19.5 சதவிகிதம் விவசாயம் சார்ந்த பிரச்னைகள்,

11.7 சதவிகிதம் குடும்பப் பிரச்னைகள்,

10.5 சதவிகிதம் உடல் நலமின்மை,

4.1 சதவிகிதம் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது,

2 சதவிகிதம் திருமணப் பிரச்னைகள்,

ஏழ்மை மற்றும் சொத்துப் பிரச்னை தலா 1.1 சதவிகிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மீதமுள்ள 11.3 சதவிகிதக் காரணங்கள் என்ன என்று அரசு தெரிவிக்கவில்லை. அதனைக் கணக்கில் மற்றவை என்ற பிரிவில்கூட காட்டவில்லை. இதேபோல் விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலையிலும் 8.5 சதவிகிதம் பேர் எந்தக் காரணத்துக்காக இறந்தார்கள் என்ற கணக்கு காட்டப்படவில்லை. மேலும், அதில் காரணம் தெரியாத பிரிவில் 6.1 சதவிகிதம் பேர் கணக்கு காட்டப்பட்டுள்ளனர். 

விவசாயத் தற்கொலை

சில தற்கொலைகளை அரசு விவசாயிகள் தற்கொலைகளாக ஏற்கவில்லை என்ற குற்றச்சாட்டும் விவசாயிகள் மத்தியில் உள்ளது. அரசு வெளியிடும் தகவல்களே உண்மை நிலவரத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றால், விவசாயிகள் தற்கொலையில் அரசு எந்த மாதிரியான நிலைப்பாடை எடுக்கும் என்ற கேள்வி எழுகிறது. இது 2015ம் ஆண்டுக்கான தகவல். இதைவிடவும் 2016ல் விவசாயி தற்கொலைகள் அதிகம் என்பதே யதார்த்தம். உண்மையான தகவல்களை அரசு அளிக்காமல் போனால் விவசாயிகளின் பிரச்னை கடைசி வரை கேள்விக்குறியாகவே இருக்கும். 

அரசு வெளியிட்டுள்ள தகவலைக் காண க்ளிக் செய்யவும்

அரசு இந்தத் தகவல்களை அடிப்படையாக வைத்துதான் விவசாயிகளுக்கான சலுகைகளையோ, மானியங்களையோ நிர்ணயிக்கும். இதில் இவ்வளவு தவறுகள் இருந்தால் அவர்களுக்குரிய தீர்வு எப்படிக் கிடைக்கும்? அவர்களின் உண்மை நிலவரம் எப்படி அரசுக்கும், பொதுமக்களுக்கும் தெரியவரும்? இந்தக் கணக்குகளில் மொத்த விவசாயி தற்கொலையில் 19.8 சதவிகிதம் பேரை அரசு கணக்கில் காட்டவில்லை. அதாவது 2500 பேர் ஏன் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதை அரசு கணக்கிலேயே காட்டவில்லை என்றால் அரசு இங்கு மறைப்பது என்ன? அவர்களது கணக்கில் வராத இவர்கள் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணி என்ன? விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் தர வேண்டிய அரசு, அவர்களைக் கணக்கில் காட்டாமல் விடுவது எவ்வளவு பெரிய தவறு?! பாராளுமன்ற வாசலில் போராடியவர்களையே வெளியில் வந்து பார்க்கவில்லை, இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயியைக் கண்டுகொள்ளாமல் போனால் என்ன தவறு என நினைத்துவிட்டதா?  

இந்தியாவின் முதுகெலும்பை இனியாவது கவனிக்குமா இந்திய அரசு?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close