Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிரமாகும் மருத்துவர்கள் போராட்டம்... அடுத்து என்ன...?

மருத்துவர்கள்

மிழகம் முழுவதும் மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக நோயாளிகளுக்கு அளிக்கப்படும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த நிலையில், 'நோயாளிகள் பாதிக்கப்பட்டதற்கு எந்த வகையிலும் மருத்துவர்கள் காரணம் அல்ல' என்று அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

மருத்துவப் பட்ட மேற்படிப்பில் 50 சதவிகித  இடஒதுக்கீடு, நீட் தேர்வில் இருந்து விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த 19 -ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் வலுத்து வருகிறது. அரசு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அறுவை சிகிச்சை நிறுத்தி வைப்பு 

அது மட்டுமன்றி முதல்வர் மருத்துவக் காப்பீட்டு திட்டம் , மருத்துவ முகாம்கள் போன்றவையும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் இந்தப் போராட்டத்தால் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியின் உறவினர் ஒருவர் இதுகுறித்துப் பேசும்போது, "இன்று செய்ய இருந்த அறுவை சிகிச்சை இன்னும் தொடங்கவில்லை. இது தொடர்பாக  செவிலியர்களை சந்தித்துக் கேட்டபோது  அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. ஒரு சிலர், 'மருத்துவர் வருவார். வந்ததும் ஆபரேஷன் தொடங்கிவிடலாம்' என்று கூறுகின்றனர். ஆனால், இதுவரை எந்த மருத்துவரும் வரவில்லை. ஏதாவது  ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தோடு இருக்கிறேன்" என்றார்.

மருத்துவர்கள் போராட்டம்

நோயாளிகள் அவதிக்கு மத்திய அரசுதான் காரணம் 

இது குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் பேசுகையில், "மருத்துவப் பட்ட மேற்படிப்பில்  50 சதவிகித இடஒதுக்கீடு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.போராட்டம் காரணமாக நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு  மருத்துவர்கள் எந்த வகையிலும் காரணமாக இருக்க முடியாது. மத்திய அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். எங்களுடைய நியாயமான இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்தப்  போராட்டம் தொடரும்" என்றார். 

முழு மனதோடு போராடவில்லை...

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் பேசுகையில், "மருத்துவர்கள் முழு மனதோடு இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. நோயாளிகள் குறித்த கவலை எங்களுக்கும் உள்ளது.அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் ஒத்தி வைக்கப்படுகிறது.அவசர சிகிச்சைப் பிரிவில் எந்தத் தடையும் இல்லை.வழக்கம்போல் நோயாளிகளுக்கு  சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், மருத்துவர்களே தேதி கொடுத்துள்ள சில அறுவை சிகிச்சைகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது கவலைக்குரிய விஷயம்தான். எங்களுக்கு வேறு வழியில்லை.போராட்டம் நடத்தி எங்களுடைய உரிமைகளைப் பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.முதுநிலை மருத்துவப் பட்ட மேற்படிப்புகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைத்துவிட்டால், இந்தப் போராட்டத்தை நாங்கள் திரும்பப் பெற்று விடுவோம்" என்றார்.   

போராட்டத்தில் பங்கேற்றுள்ள  மருத்துவ மாணவர்கள்

மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம்  நடத்தி வருவதால்,அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது.அதோடு உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகள் சிலருக்கும் அறுவை சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் நாராயண பாபுவை தொடர்புகொள்ள முயற்சிதோம்.தொடர்பு கொள்ள முடியவில்லை. 

மருத்துவர்களின் இந்தப் போராட்டத்தை மத்திய -மாநில அரசுகள் அரசியல் ஆதாயமாகப் பார்க்கக்கூடாது.போராட்டத்துக்குப் பின்னால் உயிரைக் கையில் பிடித்து துடித்துக் கிடக்கும் ஆயிரமாயிரம் ஜீவன்களின் வலியை கருத்தில் கொள்ளவேண்டும்' என்பதே அனைவருடைய  விருப்பமும்!

 

படங்கள் :சீனிவாசலு 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close