Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரம்ப்பின் வாதத்துக்கும் தமிழக பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதற்கும் உள்ள தொடர்பு இதுதான்!

டொனால்ட் ட்ரம்ப்

 

மெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அண்மையில்,“உலகமயமாக்கலால் நாம் பெற்றதைவிட இழந்ததே அதிகம். நம் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றன... அதோடு நம் வேலைவாய்ப்புகளும். உலகமயமாக்கலால் நம் பொருளாதாரம் சிதைகிறது. உலகமயமாக்கலை மீள்வாசிப்பு செய்யவேண்டிய சூழலில் இருக்கிறோம்” என்றார். இது ஏதோ குளுகுளு அறையில் உட்கார்ந்துகொண்டு அமெரிக்க அதிபர் பேசிய பேச்சு; இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று சுலபமாக கடந்துசென்றுவிட முடியாது. ஆம், அவரது உரைக்கும் நமக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இன்னும் கூர்மையாகச் சொல்லவேண்டுமென்றால், பன்னிரண்டாம் வகுப்பில் 1,120 மதிப்பெண்கள் பெற்ற சேலத்தைச் சேர்ந்த சுதர்சன், பொறியியலைத் தேர்ந்தெடுக்காமல்  கலைப் பிரிவில் ஏதோ ஒரு படிப்பை தேர்ந்தெடுத்ததற்கும் தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 20 கல்லூரிகள், தங்கள் கல்விநிலையத்தை மூட அனுமதிக்க வேண்டும் என்று  அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிடம் விண்ணப்பித்ததற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 

 “உலகமயமும் பொறியியல் கல்லூரிகளும்”

இந்தியச் சந்தையானது தொண்ணூறுகளில், உலகமயமாக்கலுக்குப்பின் திறந்துவிடப்பட்டபின்னர், எங்கு திறமை கொட்டிக்கிடக்கிறதோ, எங்கு சல்லிசான விலையில் ஊழியர்கள் கொட்டிக்கிடக்கிறார்களோ, அந்தப் பகுதியை நோக்கி நிறுவனங்கள் படையெடுத்தன. அமெரிக்க நிறுவனங்கள் ஆசியாவுக்கு வந்தன அல்லது அமெரிக்கா தன் வேலைகளை ஆசியாவுக்கு அவுட்சோர்சிங் கொடுத்தது. நம்மவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. வேலைவாய்ப்பு என்றால் ஏதோ சாதாரண வேலையும், சம்பளமும் இல்லை. இந்த வேலைவாய்ப்பு என்ற பதத்தைக் கொஞ்சம் ஊடுருவிப் பார்த்தோமென்றால், அவ்வளவு பளபளப்பாக இருந்தது. உண்மையில் நமக்கு பொறியியல் பிடிக்கிறதா, நம் பிள்ளைக்குப் பொறியியல் வருமா என்றெல்லாம் கிஞ்சித்தும் கவலைகொள்ளவில்லை. எல்லோரும் அந்த வேலைக்காக ஏங்கினார்கள்... அந்த படிப்பைப் படித்தார்கள். 

சாமானிய மக்களை எந்த அளவுக்கு ஈர்த்ததோ, அதைவிட அதிகமாக கல்வியை வணிகமாக மட்டும் பார்த்தவர்களை இந்த மாற்றம் ஈர்த்தது. ஆம், 30 ஏக்கர் நிலமும், பெரும் பணமும் வைத்திருந்தவர்கள் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கினார்கள். எங்கும் புற்றீசல்போல இந்திய நிலங்களில் பொறியியல் கல்லூரிகள் படரத் தொடங்கின.  32 மாவட்டங்கள் உள்ள மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கிறதென்றால்... இது எந்த வீச்சில் பரவியது என்று நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரே இடத்தில் இரு பொறியியல் கல்லூரிகள் என மண்ணிற்கு வெளியே இதன் கிளைகள் கட்டங்களாய் வானம் நோக்கி எழுந்தன.  உலகமயம் என்னும் ஒரு மந்திரச் சொல், நிலச்சுவான்தாரர்களையும், சாராய முதலாளிகளையும் கல்வித் தந்தை ஆக்கியது. 

 “தரமற்ற கல்லூரிகளும் உதிர்ந்த பளபளப்பும்”

பொறியியல் மாணவர்கள்

பொறியியல் துறை என்பது அழிவற்ற துறைதான். எப்போதும் அதற்கான தேவை இருக்கத்தான் செய்யும். புதிய ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் எப்போதும் இந்தப் பூவுலகுக்குத் தேவைதான்.  வேலைவாய்ப்பு என்பதே சிக்கலாக இருக்கும் இந்தியச் சூழலில், நம்மவர்கள் ஆய்வுக்காகக் கல்விகற்பது, புதிய கண்டுபிடிப்புகளுக்காகக் கல்வி கற்பது என்பது அரிதினும் அரிது. சந்தையில் எந்தக் கல்விக்குத் தேவை  இருக்கிறதோ, அந்தக் கல்வியைத்தான் நம் பிள்ளைகள் படிப்பார்கள். பெற்றோர்களும் அதைத்தானே தேர்ந்தெடுக்கத் தூண்டுவார்கள். அப்படி ஒரு தூண்டுதலில் நம் பிள்ளைகள் தேர்ந்தெடுத்த பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில்  எந்த உள்கட்டமைப்பு வசதியும் இல்லை. திறமையான ஆசிரியர்களும் இல்லை. தங்கள் நிலத்தை விற்று, இதுபோன்ற கல்லூரிகளில் படிப்பை முடித்து வெளியே சென்றவர்களின் வேலை கேள்விக்குறியானது.  பல லட்சங்களைச் செலவுசெய்து பொறியியல் படித்தவர்கள், சேவைத்துறையில் கடைசிவரிசையில் நிற்கும் பி.பி.ஓ.க்களில்  எட்டாயிரத்துக்கும் பத்தாயிரத்தும்  பணிக்குச் சேர்ந்தார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாய உலகத்தின் பளபளப்பு உதிரத்தொடங்கியது. உண்மையில் பொறியியல் மீதும் புது கண்டுபிடிப்புகள் மீதும் விருப்பம் கொண்டவர்கள், முன்னேறிச் செல்லச்செல்ல.... இன்னொரு பெருங்கூட்டம் சாரை சாரையாக கீழே விழுந்தது.

பொறியியல்மாணவர்களுக்கு பொறியியல் துறை மீதான நாட்டம் குறையத் தொடங்கியது. மாணவர்களுக்கு மட்டுமல்ல, கல்வியை வணிகமாக மட்டும் பார்த்து பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கிய கல்வித்தந்தைகளுக்கும். சேவை மனப்பான்மையில் இங்கு யாரும், கல்வி நிலையத்தைத் திறக்கவில்லைதானே...? லாபம் மட்டுமே குறிக்கோள். அந்த லாபத்தில் விரிசல் விழத் தொடங்கியதும் கல்வித்தந்தைகள் தங்கள் குழந்தைகளைக் கொல்லத் தொடங்கினார்கள். ஆம், கல்வி நிறுவனத்தை மூடத் தொடங்கினார்கள். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 507 கல்வி நிலையங்களை மூட  அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அனுமதித்திருக்கிறது. இதில் பெரும்பாலானவை பொறியியல் கல்லூரிகள். 2016 - 2017 காலகட்டத்தில் மட்டும் 92 கல்வி நிலையங்கள், தங்கள் நிலையத்தை மூட அனுமதி கோரியிருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 2013 - 2017 வரை, 20 பொறியியல் கல்லூரிகள், தங்கள் கல்லூரியை மூட அனுமதி கோரியிருக்கின்றன. 

 “ட்ரம்ப் இசத்தின் காலம் இது”

நம் பொறியியல் மாணவர்களுக்கு வேலை கிடைக்காமல் போனதற்கு, தரமற்ற கல்லூரிகள், விருப்பமில்லாமல் வேலைக்காக மட்டும் குறிப்பிட்ட படிப்பைத் தேர்ந்தெடுத்தது போன்றவை காரணங்களாக இருந்தாலும், இதற்கு முதன்மையான காரணம் ‘ட்ரம்பிசம்’ மற்றும் உலகமயத்தின் வீழ்ச்சி!  உலகமயம் எவ்வளவு வேகமாக வளர்ந்ததோ, அவ்வளவு வேகமாக வீழவும்  தொடங்கியிருக்கிறது. ஆம், உலகமயத்தால் நம் வேலை வாய்ப்புகள் வெளியே செல்கின்றன.  'அமெரிக்கர்கள் வேலைவாய்ப்புகளை இழக்கிறார்கள்' என்ற கோஷம் எழத் தொடங்கிவிட்டது. அமெரிக்கா மட்டுமல்ல... கடந்த 5 ஆண்டுகளாக இந்தக் கோஷம் அரபு நாடுகள் உள்பட எங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. மேற்கத்திய நிறுவனங்கள் கொஞ்சம்கொஞ்சமாக ஆசிரியர்களை வேலைக்கு எடுப்பதை குறைத்துக்கொள்ளத் தொடங்கின.  அப்படியே எடுத்தாலும், மிகக் குறைந்த ஊதியத்துக்கு மட்டுமே எடுக்கிறது.  அமெரிக்காவிலுள்ள இந்திய நிறுவனங்கள், அமெரிக்கர்களுக்குத்தான்  முன்னுரிமை கொடுக்க வேண்டும்; ‘மண்ணின் மக்களுக்கே வேலை’ என்ற கோஷம் எழத் தொடங்கிவிட்டது.   
ட்ரம்பிசத்தின் இந்தப் பாதையில் உலகம் பயணிக்கத் தொடங்கிவிட்ட இந்தச் சூழலை, பொறியியல் கல்வியின் வீழ்ச்சியோடு கொஞ்சம் பொருத்திப்பார்த்தால், இந்தியக் கல்வித்துறை எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். கல்வி என்பது நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவும், நம் அறிவை விரிவாக்குவதற்காகவும் இருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், சந்தையின் தேவைக்காக மட்டும் கல்வியைத் தேர்ந்தெடுத்தால், சந்தையின் வீழ்ச்சியோடு நம்முடைய வீழ்ச்சியும் தொடங்கும். இப்போது இந்திய பொறியியல் துறையில் அந்த வீழ்ச்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. நிச்சயமற்ற இந்திய பொறியியல் துறையின் எதிர்காலத்தோடு, தம் எதிர்காலத்தைப் பொருத்திக்கொள்ள நம் மாணவர்கள் விரும்பவில்லை. மாணவர்கள் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். கல்லூரிகளும் மூடப்பட்டுவருகின்றன. ட்ரம்பிசம் இன்னும் உச்சத்துக்குச் செல்லும்போது நிச்சயம் இன்னும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் மூடப்படும். 

உலகமயத்தை வரவேற்று, ஒட்டுண்ணிப் பொருளாதாரத்தில் திளைத்த இந்திய அரசியல்வாதிகள், கொள்கை வடிவமைப்பாளர்களும், இந்திய வீழ்ச்சியைப் புரிந்துகொள்ளாமல், டிரம்பிசத்தை ஆய்வுக்கு உட்படுத்தாமல், இனி பொறியியல் கல்வித்துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சிந்திக்காமல், கைகட்டி ஓரமாக நின்று வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் அரசுகள், நம் மாணவர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம், இது!

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close