Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ.500 கோடி வரி கட்டாமலேயே அதானிக்கு சலுகையா? - ஒரு புலனாய்வும் மறுப்புக்கு மறுப்பும்

அதானி குழுமம்

பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதானியின் தொழில்குழுமத்துக்கு ரூ.500 கோடி அளவுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக இ.பி.டபிள்யு. எனப்படும் எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி வார இதழில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அதன் பிறகு அரசுத் தரப்பில் மவுனம் மட்டும் பதிலாக இருந்துவந்தநிலையில், அனுகூலம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதானி குழுமத்தின் சார்பில் இ.பி.டபிள்யு. பத்திரிகைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

கடந்த ஜூன் 17-ம் தேதி அன்று வெளியான இ.பி.டபிள்யு. இதழில் வெளியான அந்தப் புலனாய்வுக் கட்டுரையில், ” சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னுற்பத்தித் திட்டங்களில், அடிக்கடி விதிகளை மாற்றியமைக்கட்டுள்ளது. இதன் மூலம் அதானி மின்சார நிறுவனமானது ரூ.500 கோடி அளவுக்கு சுங்கவரியைத் திரும்பப் பெறுவதற்கு வர்த்தகம் மற்றும் தொழில் துறை வழிவகுத்தது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதியில், அதானி நிறுவனத்தின் முந்த்ரா மின்சார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது தலா 330 மெகாவாட் திறன் கொண்ட நான்கு மின்நிலையங்களையும் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து மின்நிலையங்களையும் கொண்டதாகும். இவற்றின் மூலப்பொருளான நிலக்கரியை இறக்குமதி செய்தபோது சுங்கவரியைச் செலுத்தியதாக அதானி நிறுவனம் கூறுகிறது.

 இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சுங்கவரி செலுத்தியிருந்தால், அதைத் திரும்பப்பெற முடியும் என விதிகள் மாற்றியமைக்கப்பட்டன. அதை வைத்து, ரூ.506 கோடியைத் திரும்பத் தருமாறு அதன் மின்சார நிறுவனம் கேட்டது. இதில், அதானி மின் நிறுவனமானது வரியையே செலுத்தவில்லை என்பதுதான் இ.பி.டபிள்யு. வைக்கும் குற்றச்சாட்டு. 

இதற்கான ஆவணங்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளன என்றும் இ.பி.டபிள்யு.வின் புலனாய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கேள்வி கேட்டு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும் கடிதம் அனுப்பியதாகவும் அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றும் இ.பி.டபிள்யு. குறிப்பிட்டிருந்தது. 

அரசுத் தரப்பிடமிருந்து எந்த பதிலோ விளக்கமோ மறுப்போ வராதநிலையில், அந்தக் கட்டுரையால் அதானி குழுமத்துக்கு அவதூறு ஏற்பட்டுள்ளதாகவும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இபிடபிள்யு-வுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது, அதானி நிறுவனம். 


ஆனால் மன்னிப்பு கேட்காத இபிடபிள்யு பத்திரிகை, அதானி குழுமத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பிய வழக்காடல் நிறுவனத்துக்கு தன் பதிலை அனுப்பியிருக்கிறது. 

அந்த பதிலில், “ இபிடபிள்யு பத்திரிகையில் அதானி குழுமம் தொடர்பாக வெளிவந்த  இரண்டு கட்டுரைகளும், முழுக்க உண்மையானவை மட்டுமல்ல சான்றுகளையும் கொண்டிருக்கிறது; பொதுநலன் அடிப்படையிலேயே இக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன; இதை வெளியிடுவதற்கு இபிடபிள்யு பத்திரிகைக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமை உண்டு” என்று மிகவும் அழுத்தமாக இபிடபிள்யு பத்திரிகை தெரிவித்துள்ளது. 

மேலும், “ முன்னரே ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக, உச்ச நீதிமன்றமே அதானி குழுமத்தை கடுமையான வார்த்தைகளில் கடிந்துகொண்டது; ஏற்றுமதியையே செய்யாமல் அந்தத் திட்டத்தின் பயனை அனுபவிக்கப் பார்த்தனர் என்பதையும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அந்தப் புலனாய்வுக் கட்டுரையானது முழுக்க சான்றாதாரங்களின்படியும் நீதித்துறையின் உத்தரவுகளுக்கு உட்பட்டுமே எழுதப்பட்டது” என்றும் இபிடபிள்யு பத்திரிகையின் சார்பில், உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சந்திரசூர் பட்டாச்சார்யா அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close