Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மண்ணெண்ணெய், அரிசி, சர்க்கரை போடாமல், வெறும் ரேஷன்கடையை மட்டும் திறப்பார்களா?

ரேஷன்கடை

“மக்களுக்கான உணவை உத்தரவாதப்படுத்த வேண்டும்'' என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் பெரும்பாலான மக்களுக்கு ரேஷன்கடைகளில் அரிசி இல்லை என்று சொல்வது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமையை கேள்விக் குறியாகவும், கேலிக் கூத்தாகவும் ஆக்கி இருக்கிறது.  

முரண்படும் பி.ஜே.பி

அரசின் முடிவுக்குக் காரணம் என்ன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜிடம் கேட்டோம். “2014-ம் ஆண்டு லோக்சபாத்  தேர்தலின்போது, தேர்தல் அறிக்கை வெளியிட்ட பி.ஜே.பி., அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். பொது விநியோகத்திட்டம் என்பது  தேசிய பாதுகாப்புக்கு இணையானது என்றும் சொல்லி இருக்கிறார்கள். பொது விநியோகத்திட்டம் எந்த மாநிலத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப் படுகிறதோ அந்த மாநிலத்தின் நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படும் என்றும் பி.ஜே.பி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், இப்போது மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி தமிழகத்தில் தற்சமயம் ரேஷன் பொருட்கள் பெற்று வருபவர்களில் 50.5 சதவிகிதம் பேர் மட்டும்தான் இனிமேல் பொருட்கள் பெற முடியும்  என்று சொல்கிறார்கள். இப்போதே அரிசி, கோதுமை. மண்ணெண்ணைய், சர்க்கரை எல்லாவற்றிலும் அளவைக் குறைத்து விநியோகிக்கிறார்கள்.  இப்போது ‘அந்தியோதையா  அன்னயோஜனா’வின் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் சர்க்கரை கிலோவுக்கு 18.50 ரூபாய் என்று மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்த வரம்பில் வராதவர்களுக்கு மத்திய அரசு மானியம் கொடுப்பதில்லை. ஏற்கெனவே நிதி இல்லாமல் தள்ளாடி வரும் தமிழக அரசால் நீண்ட நாட்களுக்கு எல்லோருக்கும் மானிய விலையில் சர்க்கரை கொடுக்க முடியாது. மண்ணெண்ணெயைப் பொறுத்தவரை தமிழகத்தில் முன்பு 59,750 கிலோ லிட்டர் கொடுத்தனர். இது கடந்த  ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து  17,940 கிலோ லிட்டர் ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில மாதங்கள் கழித்து இதையும் இல்லை என்று சொல்லி விடுவார்கள்" என்றார்.  

எப்படி கணக்கீடு நடந்தது?

தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர்கள் சமேளனத்தின் பொதுச்செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, “ரேஷன் பொருள்கள் வாங்குபவர்களில் முன்னுரிமை இல்லாதவர்கள், முன்னுரிமை உள்ளவர்கள் என்று கணக்கீடு செய்ததாகத் தமிழக அரசு சொல்கிறது. எப்படி இந்தக் கணக்கீடு செய்தார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்குப்பதில் ஸ்மார்ட் கார்டுகளும் கொடுத்து விட்டார்கள். இதன் பின்னர், திடீரென உணவுப் பாதுகாப்புச் சட்டம் குறித்த அரசு உத்தரவை வெளியிடுகிறார்கள். இப்போதுதான் அரசு உத்தரவு வருகிறது. அதற்கு முன்பு எப்படி முன்னுரிமை இல்லாத குடும்பங்களின் எண்ணிக்கையைக் கணக்கு எடுத்தார்கள்.

Ration shop

முன்னுரிமை பெற்றவர்கள்  99 லட்சம் பேர் என்றும், முன்னுரிமை இல்லாதவர்கள் 96 லட்சம் பேர் என்றும் சொல்கிறார்கள். ஆனால், என்ன வகையான வரம்பு வைத்து இவர்களைப் பிரித்தார்கள் என்று கேட்டால், உணவுத் துறையில் பதில் அளிக்க மறுக்கிறார்கள். இந்த வரம்பு பிரிப்பதற்கான தகுதிகள் என்று இப்போதுதான் அரசு உத்தரவில் குறிப்பிடுகிறார்கள். முன்பே ஸ்மார்ட் கார்டு கொடுத்து விட்டார்கள்.  
பொருட்களை குறைத்து விட்டனர்

ஒரு குடும்பத்தில் 10 பேர் இருந்தால் 50 கிலோ அரிசி, 8 பேர் இருந்தால் 40 கிலோ அரிசி தரப்படும் என்று சொல்கின்றனர். ஆனால், இப்போதே ரேஷன் கடைகளில் 15 கிலோ அரிசி 5 கிலோ கோதுமைதான் தருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை மத்திய அரசு தனது அரிசி ஒதுக்கீட்டில் 60,000 மெட்ரிக் டன் அரிசியை  குறைந்து விட்டது.  தமிழக அரசின் பட்ஜெட்டில், உணவுத் துறைக்கு கடந்த ஆண்டு ஒதுக்கீட்டைப் போல இந்த ஆண்டும் 5,500 கோடி ரூபாய்தான் ஒதுக்கி இருக்கிறார்கள். இப்போது கூடுதல் செலவை எப்படி ஈடுகட்டப்போகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தல் நெருக்கடிக்காக, ரேஷன் பொருட்கள் குறைக்கப்படுவதை வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள். ரேஷனில் மண்ணெணெய், அரிசி, சர்க்கரை போட முடியாது என்றால், வெறும் ரேஷன் கடையை எப்படி நடத்துவார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close