Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிச்சைக்காரர்களையும் விட்டு வைக்காத சென்னை விஷ ஊசி கொலையாளி! - பகீர் தகவல்கள்!

சென்னையில் அடுத்தடுத்து விஷ ஊசி மூலம் கொல்லப்பட்ட  உத்திரமேரூர் ஶ்ரீதர், மடிப்பாக்கம்  ஹென்றி,  ஜான் பிலோமினன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில்,  குற்றவாளியாக போலீசில் சிக்கி,  இப்போது ரிமாண்டில் இருக்கிறார் ஸ்டீபன்.

தங்க நகை வியாபாரம், ரியல் எஸ்டேட் , வங்கி லோன் வாங்கித் தருதல் என்று பல தொழில்களில் ஈடுபட்டு ஒவ்வொன்றிலும் சறுக்கு முகமாகவே இருந்த ஸ்டீபனின் வாழ்க்கை,  சமீபத்தில்தான்  ஏறுமுகமாக இருக்க ஆரம்பித்திருக்கிறது.

மும்பை, பெங்களூரு கொல்கொத்தா போன்ற இடங்களில் ஸ்டீபன் எந்த மாதிரியான நெட்-வொர்க் வைத்திருந்தார் ? அவருக்கு மிகக் குறுகிய காலத்தில் பணம் குவிந்தது எப்படி என்பதெல்லாம் இப்போது அடுத்தகட்ட விசாரணையில் இருக்கிறது என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

ஸ்டீபனின் இந்தக் கொலைவெறிக்கு என்ன காரணம் ? 'கள்ளக் காதலுக்கு எதிர்ப்பு காட்டிய  காதலிகளின் கணவர்களை  'பொட்டாசியம்- சயனைட்' ஏற்றிய  ஊசி மூலம் செலுத்தி, கதையை முடித்திருக்கிறார் ஸ்டீபன்.

"ஸ்டீபன்  கைகாட்டிய நபர்களை  பாலாஜி, முருகானந்தம், சதீஷ்குமார்  ஆகியோர் ஸ்பாட்டுக்குப் போய்  கொன்றுள்ளனர். ஸ்டீபனைப் பொறுத்தவரை அவர் எதிலும் நேரடியாக சிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்"  என்கிறது போலீஸ்.

" வீட்டில் நாற்பது பவுன் நகைகள் கொள்ளை நடந்திருக்கிறது என்று நாலு நாளா திரியறேன், ஒரு ரிசல்ட்டும் சொல்லாம இருக்கீங்க... என்ன வேலை பார்க்கறீங்க, நீங்க ?" என்று கடந்த மாதம் 4-ம் தேதி கொடுத்த புகாருக்கு 7-ம் தேதி அன்று நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் குமார், எஸ்.ஐ.கள், ஏட்டுகள் என அனைவரிடமும் எகிறியிருக்கிறார் ஸ்டீபன்.

" சத்தம் ஓவரா இருக்கே?' என்று உதவி-கமிஷனர் பாண்டியன், நேரடியாக விசாரணையில் இறங்க,  அடுத்தடுத்து வந்து விழுந்த  திகில் ரக தகவல்களால்,  ஒட்டுமொத்த புறநகர் போலீஸ் டீமே அதிர்ந்து போய் நின்றது.

உதவி- கமிஷனர் பாண்டியனிடம் பேசியபோது,  "ஒரே மாதிரியாக மூன்று கொலைகளை கடந்த  ஒரே ஆண்டில் (2015) ஸ்டீபன் செய்துள்ளார். தன்னுடைய இல்லீகல் லைஃபில் தலையிட்ட காரணத்துக்காக  ஶ்ரீதர், ஹென்றி ஆகியோரை கொலை செய்கிறார்.

அதே போல்,  தன்னுடைய மனைவியிடம் போய், தன்னைப் பற்றிய மொத்த கதையையும் சொல்லியதற்காக, மனைவியின் சகோதரர் ஜான் பிலோமினையும் கொலை செய்கிறார். பணத்துக்காக ஸ்டீபன் சொல்வதை தட்டாமல் செய்யும் பாலாஜி, முருகானந்தம், சதீஷ்குமார் ஆகியோர்தான் ஸ்பாட்டுக்குப் போய் இந்தக் கொலைகளை செய்கிறார்கள்.

எந்த இடத்துக்கும் ஸ்டீபன் நேரில் போவது கிடையாது.  தனக்கு சரிப்பட்டு வராத யாரையும் வாழ்வதற்கு விட்டு வைக்கக் கூடாது என்ற கேரக்டர் ஸ்டீபனுக்கு இருப்பதை  விசாரணையில் உணர முடிந்தது.
மூன்று கொலைகளும் மூன்று வெவ்வேறு ஏரியாக்களில் நடந்துள்ளதால், அந்தந்தப் பகுதி போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.  வழக்கிற்கு தேவைப்படும் பட்சத்தில் ஸ்டீபனின் காதலிகளிடமும்  அவர்கள் விசாரணை நடத்துவார்கள் '' என்றார்.

சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஸ்டீபன்,  '' இறையருள் முழுமையாக எனக்குள் இருப்பதால், என்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்று எனக்கு நன்றாகத் தெரியும்.
நான் இதை சிறைச்சாலை என்றோ, என்னை கைது செய்து சிறையில் வைத்துள்ளனர் என்றோ நினைக்க வில்லை. ஆண்டவரின் கட்டளைப்படிதான்  எல்லாச் செயல்களும் நடந்திருக்கின்றன. என் பொருட்டு ஏதுமில்லை "  என்று சக கைதிகளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.

போலீஸ் ஏரியாவில் ஸ்டீபனின் நிலைகுறித்து விசாரித்தோம்.

" சைக்கோ போலத்தான்  ஸ்டீபன் நடந்து கொள்கிறார். இந்த வழக்கிலிருந்து  தப்பித்துக் கொள்ள  அவர் போடும் திட்டமா, உண்மையிலேயே  ஆள், சைக்கோதானா ? என்றெல்லாம் விசாரணை போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், பழிவாங்கும் உணர்ச்சியும்,  பிடிக்காத ஆளை உயிரோடு  விடவே கூடாது என்ற குணமும் ஸ்டீபனிடம் அதிகம்" என்றனர்.

ஸ்டீபனுடைய குணாதிசயம் பற்றி இன்னும் விரிவாகவே பேசுகிறார்கள், அவர் ஏரியாவாசிகள்.           '' மோட்டார் சைக்கிளில் யாராவது, அவசரத்தில் உரசுவது போல் சென்றால் கூட அவர்களை விடாமல் பாலோ செய்து வண்டி நம்பர், வீடு என அனைத்தையும் டிரேஸ் செய்து வைத்துக் கொள்வார். அதை குறித்தும் வைத்துக் கொள்வார்.

இப்போது போலீசில் மாட்டியிருக்கும் மூன்றுபேர் மட்டுமல்ல, ஸ்டீபனுடன் அவருடைய பணத்துக்காக நிறைய பேர் கூடவே இருப்பார்கள். அனைவருக்கும் அவரைப் பற்றிய மொத்த விவகாரமும் தெரியும். அவரைப் பார்த்து குரைக்கின்ற தெருநாய்கள் கூட அடுத்த நாளில் இருந்து தெருவில் இருக்காது. அவ்வளவு ரிஸ்க் ஆன ஆள். ஒழுங்காக விசாரித்தால் பல மர்மங்கள் வெளியாகும்" என்றனர்.
 
நீலாங்கரைப் பகுதியைச் சேர்ந்த சிலர்,  ''புறநகர் பகுதிகளில் ஆரோக்கியமான பிச்சைக்காரர்கள் பலர் சாலையோரத்தில் உறங்கிய நிலையிலேயே திடீர் என செத்துக் கிடந்திருக்கிறார்கள். உடலில் எந்தக் காயமும் இல்லை... ஆனால், உயிர் இல்லை. சந்தேக மரணம் என்று கூட இதை வழக்காக மாற்றும் ஆய்வுக்கான அவசியமும் இல்லை. கேட்பாரற்ற சாலையோர பிச்சைக் காரர்கள்தானே?என்று சாதாரணமாக  விட்டிருக்கிறார்கள் '' என்கின்றனர், திகில் குறையாமல்.

ஸ்டீபனின் கையடக்க டைரியில் '' இன்று நீ, நாளை மறுநாள் அவன்'' என்ற கணக்கில் பல பெயர்கள் குறியீடுகளாக எழுதி வைக்கப்பட்டிருந்ததாகவும்,  அந்த டைரி போலீஸ் கையில் என்றும் ஒரு தகவல் கிடைக்க, அது குறித்தும் போலீஸ் ஏரியாவில் விசாரித்தேன்.

" டைரி பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், ஸ்டீபனை மட்டும் இப்போது பிடிக்காமல் விட்டிருந்தால் அடுத்தடுத்து பல உயிர் போயிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்" என்று சொல்லி முடித்துக் கொண்டனர்.

இதனிடையே பொட்டாசியம் சயனைடை ஸ்டீபனுக்கு சப்ளை செய்தவர்கள் யார்? என்ற விசாரணை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது.

- ந. பா.சேதுராமன்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ