Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஏர்போர்ட் பக்கம்.... 8.5 ஏக்கர் வெறும் 5 கோடிதான்!' - ஓர் சதுரங்க வேட்டை மோசடி!

' சென்னைக்குப் பக்கத்துல அரைமணி நேரத்துல போகக்கூடிய இடத்துலதான் நம்ம பிளாட்ஸ் இருக்கிறது' என்று கதை (விமானம் மூலம் அரைமணி நேரத்தில் போகலாம் என்பதை கடைசி வரை சொல்லவே மாட்டார்கள்) விட்டு ஏமாற்றுகிற கும்பலிடம், பொதுமக்கள் ஏமாறுவது அடிக்கடி நடக்கிற ஒன்றுதான்.

இது கொஞ்சம் வித்தியாசமான கதை மட்டுமல்ல, ரியல் எஸ்டேட் என்ற பெயரில் சிலர் எந்த லெவலுக்கும் இறங்கி விடுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் நிஜக்கதை இது...

சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த கணேசனுக்குத் தொழில், காண்ட்ராக்ட். கூடவே, ஃபைனான்ஸ், நிலம் வாங்குவது விற்பது என்று எப்போதுமே கொஞ்சம் பிஸியாக இருக்கக் கூடியவர்.

கணேசனின் தி.நகர் நண்பர்கள் வட்டத்தில், சமீப காலமாக அடிக்கடி கண்ணில்பட்ட  ஆசாமி, ஆதித்யா.

'' இப்பதான் பிர்லா சிமென்ட் ஓனர் லைன்ல வந்தாரு. நான்  பிஸியா இருந்ததால போனை எடுக்க முடியலை'' என்று வெறும் கையையே காதுக்குக் கொடுத்து ஐபோன் லெவலுக்கு  பில்டப் பண்ணிய ஆதித்யாவின் வலையில், ஒரு லைக் போடும் டைமிங்கில் விழுந்தவர்களில் கணேசனும் ஒருவர்.

 "சார், எனக்கு பிஸ்னஸை நல்லா டெவலப் பண்றதுக்கு டிரான்ஸ்போர்ட்டிங் நல்லா இருக்குற இடமா ஒண்ணு பாத்து, லீசுக்கு ஏற்பாடு பண்ணிக் கொடுங்க. அதுக்கு என்ன செலவாகுதோ நான் பார்த்து செய்து கொடுக்கிறேன்"  என்றிருக்கிறார் கணேசன்.

கணேசனுக்கு சென்னை துறைமுகம், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன், சென்னை ஏர்போர்ட்  போன்ற முக்கிய இடங்களைச் சொல்லி, இவற்றில் எது பக்கத்தில் இடம் வேண்டும் என்று ஆதித்யா கேட்க, கணேசனோ, " எனக்கு ஏர்போர்ட் பக்கமே போதும்பா..." என்று  மனதில் உள்ளதை வெளிப்படுத்தினார்.

" சொன்ன சொல் ஒரு போதும் நான் தவறமாட்டேன். நாளைக் காலை நீங்கள் ஏர்போர்ட் பக்கம் வந்து விடுங்கள். டோட்டலாக எட்டரை ஏக்கர் நிலம். நீங்கள், எவ்வளவு பெரிதாக வேண்டுமோ, அவ்வளவு பெரிதாக ஆபீசை போட்டுக் கொள்ளலாம்.

கன்டோன்மென்ட் கன்ட்ரோலில் இந்த இடம் வருவதால், நானாக எந்த முடிவும் எடுக்க முடியாது. நான் வெறும் மீடியேட்டர்தான்.  33 வருஷத்துக்கு அக்ரிமென்ட் பேசி முடிச்சிடறேன். ராணுவமே நினைச்சாலும் லீகலாக உங்களை காலி செய்ய முடியாது.

இந்த இடத்தை உங்களுக்கு முடிக்க டெல்லியில் உள்ள ராணுவத் தலைமை வரை நான் பேச வேண்டும்.  ராணுவ உயரதிகாரிகளை  டெல்லியில் இருந்து அவர்கள் அனுப்புகிறார்கள். நீங்கள் அவர்களைப் பார்த்த பின், என்னிடம் 5 கோடி ரூபாயைக் கொடுத்தால் போதுமானது " என்று ஆதித்யா தேனாக ஊற்ற, மெய்மறந்து தலையாட்டி வைத்திருக்கிறார் கணேசன்.

ஆதித்யாவின் பிசிறடிக்காத பேச்சு ஒருபுறம் இருக்க, ராணுவ மிடுக்கு கொஞ்சமும் குறையாத சீருடையுடன்  அந்த எட்டரை ஏக்கர் மைதானத்தில் வந்து நின்று ஆதித்யாவுக்கு சல்யூட் அடித்தவர்கள் , போலியான சீருடையை பர்மா பஜாரில் வாங்கிப் போட்டுக் கொண்டு வந்தவர்கள்...

சொன்னபடி பணம் கை மாறியது. ஆதித்யாவும்,  போலியான ராணுவ சீருடைகளும் தலைமறைவாகின. பணம் கொடுத்த கணேசன் மயங்கி விழுந்தார். அடுத்தது என்ன, போலீஸ்தானே ?

ராணுவத்துக்கும், துறைமுகத்துக்கும், தென்னக ரயில்வேக்கும் சொந்தமான இடம் ஆக்ரமிப்பு என்றால் போலீஸ் விமானத்தில் ஏறியே வந்துவிடும். வணிகத்தில் அனுபவமுள்ள கணேசன்களுக்கு இந்த உண்மை மறந்து போகும்  அளவிற்கு ஆதித்யாவின் பேச்சு கிறங்கடித்து ஏமாற்றியிருக்கிறது.

கணேசன் கொடுத்த புகாரின்பேரில்,  ஆக்‌ஷன் ஹீரோ போல களத்தில் இறங்கிய  சென்னை திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் , மோசடிப் பேர்வழியான  ஆதித்யா (எ) கோகுல கிருஷ்ணனை அழகாக திட்டமிட்டு வளைத்திருக்கிறார்.  இப்போது ஆதித்யா சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்.

" நான் அந்தக் கட்சியில் மாநில அளவில் பொறுப்பில் இருக்கிறேன். உங்க ஃபியூச்சரை மனதில் வைத்துக் கொண்டு இந்த கேசை கையிலெடுங்கள்" என்கிற அளவுக்கு இன்ஸ்பெக்டரை அந்த ஆதித்யா மிரட்டிப் பார்த்தாரு. ஆனால், இன்ஸ்பெக்டர், அந்தக் கட்சித் தலைவருக்கே போனைப் போட்டு விபரத்தைச் சொல்லிப் பேச, தலைவர் சைலண்ட்டா ஒதுங்கிட்டாரு என்கின்றனர் திருமங்கலம் போலீசார்

ஆதித்யாவுக்கு சல்யூட் அடித்து விமான நிலைய, கன்டோன்மென்ட் இடத்தையே விற்க துணை போன போலி ராணுவ ஆசாமிகளை பிடித்தால் இன்னும் பல  நில மர்மங்கள் வெளியாகலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

-ந.பா.சேதுராமன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ