Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போலீசாருக்கு யோகா ! ஜூன் 5-முதல் நடைமுறைக்கு வருகிறது : சென்னை கமிஷனர் ராஜேந்திரன்

மிழக சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய கோரிக்கை வைத்திருந்தனர். அதில் இடமாற்றம் ஆகியவர்களில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரனும் ஒருவர்.


கமிஷனர் ராஜேந்திரன் இடத்துக்கு,தேர்தல் ஆணையம் அசுதோஷ் சுக்லாவை நியமனம் செய்தது. கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.அந்தஸ்தில் இருப்பவர் என்பதால் அவரால் தன்னுடைய பணிப் பொறுப்பை  தனக்கு கீழான பொறுப்பில் இருக்கும் (கூடுதல் டி.ஜி.பி) அசுதோஷ் சுக்லாவிடம் நேரடியாக ஒப்படைக்க முடியாத நிலை இருந்தது.

கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் இதனால்  தன்னுடைய பணியை புதிய அதிகாரியிடம் ஒப்படைப்பதாக கோப்பில் கையெழுத்து போட்டுவிட்டு கிளம்பிப் போனார். அவர் அங்கிருந்து சென்ற பின்னரே அசுதோஷ்சுக்லா அங்கு வந்து பதவிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

தேர்தல் நாளான மே-16 க்கு முன்னர் இந்த காட்சிகளை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காண முடிந்தது. தேர்தல் முடிவுகளின் பின்னால் ஆண்டு கொண்டிருந்த அதிமுகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பழைய இடத்துக்கே மீண்டும் பணியிட மாற்றம் பெற்று சென்னை போலீஸ் கமிஷனர் பொறுப்பினை ராஜேந்திரன் ஏற்றார்.

பொறுப்பேற்றதுமே காவல்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு விஷயமாக, கமிஷனர் ராஜேந்திரன், "மக்கள் பணிக்காக எந்நேரமும் சிறப்பாக பணியாற்றி மக்களின் நம்பிக்கையைப் பெறுவேன்" என்று ஓர் அறிக்கையையும் அளித்தார்.

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் இருக்கையில் ஓர் நாளாவது அமரவேண்டும்  என்பது ஒவ்வொரு ஐ.பி.எஸ். அதிகாரிகளின் கனவு என்பார்கள். அப்படியான மதிப்பு மிக்க இருக்கை மீண்டும் ராஜேந்திரனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

மறுபடியும் பொறுப்புக்கு வந்த கமிஷனரிடம் ,  போலீஸ் ஏரியாவில் செய்தி சேகரிக்கும் போது  தங்களுக்கு ஏற்படும் குறைகளையும், அடிப்படை தேவைகளையும் சொல்ல செய்தியாளர்கள் கடந்த வாரமாக காத்திருக்க, இன்று(வியாழன்) பிற்பகல் வந்தது  செய்தியாளர்களுக்கு அழைப்பு.

'பிரஸ்-மீட்' போன்று அல்லாத ஒரு சந்திப்புதான் அது என்பது அங்கே சென்ற பின்னரே தெரிந்தது.
கமிஷனர் தெரிவித்ததில் கொஞ்சம் இங்கே...

-போலீசாரால் கண்டு பிடிக்கப்படும் குற்ற வழக்கு தொடர்பான செய்திகளை விரைந்து அளிக்க ஆவன செய்யப்படும்.

-செய்தி சேகரிப்பின் போது, உங்களுக்கு(ஊடகத்தினர்) ஏற்படும் இடர்ப்பாடுகளை என்னுடைய கவனத்துக்கு கொண்டு வந்தால், அவைகளை உடனுக்குடன் களைய நடவடிக்கை எடுக்கப்படும்

-போலீஸ் கமிஷனர்-  க்ரைம் செய்தியாளர்களை ஒருங்கிணைக்கும் 'வாட்ஸப் குழு' உருவாக்குவது குறித்து பரிசீலித்த பின் முடிவு செய்யப்படும்.

-குற்றம் தொடர்பாக விசாரணையில் இருக்கும் நபர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று நீதிமன்ற ஆணை  இருப்பதால் நீங்கள் (ஊடகத்தினர்) அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

-மீட்பு சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் நடைமுறை இருப்பதால் அதற்கு முன் அவைகளை வீடியோ, படங்களாக நீங்கள் வெளிப்படுத்த வேண்டாம். சொத்துக்கு உரியவரிடம் ஒப்படைக்கும் போது வேண்டுமென்றால் நீங்கள் அதை காட்சிப்படுத்தலாம்.

-வருகிற 5-ந்தேதியன்று முதல் காவலர்களின் ஆரோக்கியம் மேம்பட  சென்னையில் யோகா பயிற்சி தொடங்கப்படுகிறது. பிற மாவட்ட எல்லைகளில் குறிப்பிட்ட நாளை வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கி அன்று யோகா பயிற்சியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய பயிற்சியாளர்கள் நேரில் பயிற்சி அளிப்பார்கள்.

-நண்பர்களாக இருப்போம், மக்கள் குறைகளை களைய முன் வருவோம்...


முடிந்தது, சந்திப்பு !


ந.பா.சேதுராமன்


 

எடிட்டர் சாய்ஸ்