Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சத்தமின்றி ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி சேகர் ! பரபர பின்னணி தகவல்கள்

.பி.எஸ், அதிகாரி  ஒருவர் பணி ஓய்வு பெறும்போது  சிறப்பான முறையில் உற்சவர் போல கொண்டாடப்படுகிறார் என்றால், அவர் ஆட்சியாளர்களுக்கு மிகவும் வேண்டியவர் என்று அர்த்தம். 'ஆபீசர்ஸ் மெஸ்' சுக்குள்ளேயே வைத்து சக அதிகாரிகளின் கைகுலுக்கல், கொஞ்சம் பூக்கள், இனிப்புடன் அவரை வழியனுப்பி வீட்டுக்கு அனுப்புகிறார்கள் என்றால், அவர் 'ராசி'யான இடத்தில் இல்லை என்று அர்த்தம்.

தமிழகம் மட்டுமல்ல, இந்திய அளவில் என்று எடுத்துக் கொண்டாலும் இந்தப் போக்கு நீக்கமற நிறைந்து காணப் படுவதை கண்கூடாக காணலாம்.

கடந்த காலங்களில்  தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி,  சத்தமின்றி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் இப்படித்தான். இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. லத்திகாசரணை   அமர்க்களமாய்  வழி அனுப்பி வைத்ததும் இப்படித்தான்.

மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வரும் கழக ஆட்சிகளில்  'மாற்றம்' வரும் போதெல்லாம் ஃபவர் பொறுப்புகளை  ஏற்கிற அதிகாரிகள், தங்களுக்கான ஆட்சியதிகாரம் கோட்டையில் இல்லாத போது பணி ஓய்வு பெறுகிற சூழல் இயல்பாய் அமைந்து விட்டால் சத்தமின்றி  ஓய்வு பெறுகிறார்கள். இல்லை யென்றால், பணி நீட்டிப்பு என்று காலத்தை ஓட்டி விடுகிறார்கள்.

கே.விஜயகுமார் , காளிமுத்து, வைகுந்த், என்.பாலசந்திரன்,  ஆர்.நடராஜ், ராமானுஜம், போலோநாத், முத்துக்கருப்பன், அலெக்சாண்டர் என்று காவல்பணி ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கான  பாராட்டு விழாக்கள் எப்படி நடந்தது என்பதை கவனித்தாலே 'சார்பு நிலை' குறித்து தெரிந்து விடும்.

சார்புநிலை அதிகாரிகள் என்ற ஒன்று அரசு அதிகாரிகள் விஷயத்தில் எப்போதும் இருந்து வருகிறது. அதற்கு விடையாக, அல்லது பரிசாக  சர்வீசில் இருக்கும் போது, அவர்கள் கேட்கிற நகரங்கள், பிரிவுகளில் அவர்கள் நியமனம்  செய்யப்பட்டு விடுகிறார்கள். "எதிலும் சார்பற்றோர் " நியமித்த இடத்தில் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பதவிகளை வகித்தவர்களுக்கு என்ன நிலை? என்ற கேள்வியே இங்கே தேவையற்றது.கான்ஸ்டபிளாக பணியில் சேர்கிறவர், படிப்படியாக தன்னுடைய 35 ஆண்டுகால சர்வீசில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டராக பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார், இவரைப் போல் ஓய்வு பெறும் அனைவரும்  ஒவ்வொரு  மாதமும் ஒரு நாளில் சிட்டி போலீஸ் கமிஷனரால் மொத்தமாக வரவழைக்கப்பட்டு பாராட்டப்படுகிறார்கள்.

குழு புகைப்படம் எடுத்துக் கொள்வதோடு தேநீர் விருந்தும் கமிஷனரோடு உண்டு. மாவட்டங்களில் இதுவே போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி, ஐ.ஜி. போன்ற உயரதிகாரிகள் வாழ்த்துகளுடன்  நடைபெறுகிறது. இப்போது நிறைய போலீசார், பணி ஓய்வு பெறும்போது, அவரவர் பணியாற்றிய பகுதிகளில் மக்களோடு மக்களாக ஒரு விழாவை நடத்தி (எதுக்கு பிறர் பாராட்டுவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது?) அனைவருக்கும் விருந்தளித்து விடைபெறுகிறார்கள்.

உயர் பதவிகளை வகித்து ஓய்வு பெறும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு    வண்டலூர்- ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமி, மவுண்ட் ஆயுதப்படை பயிற்சிப் பள்ளி, சென்னை  எழும்பூர்- ராஜரத்தினம் ஸ்டேடியம் போன்ற இடங்களில் அப்படியான 'பிரியாவிடை'யை கொடுத்து அனுப்புவார்கள். ஆபீசர்ஸ் மெஸ்சில் வைத்து ஒரு ஐபிஎஸ் வழியனுப்பி வைக்கப் படுகிறார் என்றால் அவர் மீது ஆட்சியாளர்கள் கொள்ளைப் பிரியத்துடன் (?!) இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்படி சத்தமின்றி நட்பு வட்டங்களுக்கு மட்டும் ஹாய் சொல்லி  கொள்ளைப் பிரியத்துடன் கடந்த மாதம் 31- ந்தேதி வீட்டுக்குப் அனுப்பி வைக்கப் பட்டிருக்கிறார், சேகர்.  சில ஆண்டுகளுக்கு முன் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பை வகித்த சேகர் பணி ஓய்வு பெறும்போது டி.ஜி.பி. அந்தஸ்தில் இருந்தவர்.

சேகருடன் பணி ஓய்வு பெற்றவர்களில் ஒருவர், சிறைத்துறை போலீஸ் டி.ஐ.ஜி. ஏ.ஜி.மௌரியா. டிஜிபி அந்தஸ்து அதிகாரிக்கே வெறும் பூங்கொத்து தான், அதுவும் நண்பர்களாக கொடுத்தது எனும் போது, மௌரியாக்களின் நிலையை சொல்லவா வேண்டும் ?

சென்னை கொடுங்கையூரில் விடுதலைப் புலிகளின் கூட்டாளிகள் பலரை  உதவி கமிஷனராக இருந்த மௌரியா தலைமையிலான போலீஸ் டீம், 1996-ல் பிடித்த போது அன்றைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, சட்ட சபையில்,  'இந்த துணிச்சலான பணியில் ஈடுபட்ட அனைத்து காவல் அதிகாரிகள், போலீசார் இரட்டைப் பதவியுயர்வின் மூலம் கௌரவப் படுத்தப் படுவார்கள்' என்றார்.

முதல்வர் கருணாநிதி சொன்னபடி (ஒருவேளை) நடந்திருந்தால் மௌரியா, (ஐ.பி.எஸ். , டி.பி.எஸ்., எஸ்.பி. கேட்டகரி என்கிற பல தடைகளை அரசின் கொள்கை முடிவு என்ற அடிப்படையில், முதல்வர் கருணாநிதி  தகர்த்திருக்கலாம்)  இரட்டிப்பு கணக்குப்படி இப்போது, கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வோடு பணி ஓய்வு பெற்றிருப்பார். அதுவும் நடக்கவில்லை, அந்த பதவி உயர்வு குறித்து சம்மந்தப் பட்ட அதிகாரிகளும் அக்கறை காட்டவில்லை.  முதல்வரின் அருகில் நாமிருந்தால் போதும் என்று தாங்களே வகுத்துக் கொண்டு விட்ட  ஒரு வரையறைக்குள் அந்த அதிகாரிகளும்  நின்று விட்டனர். அதுதான்  அதன் பின்னர் வந்த  காவல் அதிகாரிகளின் 'மெச்சத்தக்க' பதவியுயர்வை உரிய நேரத்தில் பெற தடையாக  அமைந்தது.

இப்படி தங்களுக்கான எதிர்மறை வினைகளை சம்மந்தப் பட்ட துறை அதிகாரிகளே ஏற்படுத்தி வைத்துக் கொண்டதையும்  மறக்க முடியாது. சட்டம்- ஒழுங்கு டிஜிபி என்றால்  பிரிவுபசார விழாவானது டிஜிபி அலுவலகத்திலேயே நடந்து விடும். அதிலும் விதிவிலக்காக நடந்து முடிந்த வரலாற்று வேதனை சம்பவங்களையும் அந்த அலுவலகம் சந்தித்திருக்கிறது.

மாநில சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக  (திமுக ஆட்சியில்) இருந்த கே.பி.ஜெயினுக்கு 3 மாதகாலம் சர்வீஸ் இருக்கும்போதே, சத்தமின்றி அவர் விடுமுறையில் போனார்.  (அவர் விடுமுறையில் போன காரணம் இது வரையில் யாருக்கும் தெரியாது) . பணியில் இருந்து விடுமுறையில் போன கே.பி.ஜெயினுக்கு என்னானதோ, மனிதர்,வீட்டிலிருந்த படியே பணி ஓய்வும் பெற்றுக் கொண்டார்.

சீனியர் அதிகாரியான ஆர்.நட்ராஜை, கே.பி.ஜெயின் வகித்த பணியிடத்துக்கு அன்று போஸ்டிங் போடாமல் லத்திகா சரணை கொண்டு வந்து அந்த இடத்தில், அன்றைய திமுக அரசு நியமித்தது. இருக்கவே இருக்கிறதே, இதற்கும்,  'அரசின் கொள்கை முடிவு' என்ற ஒற்றை வார்த்தை, அதை,  அன்று,  அந்த இடத்துக்கு பொருத்திக் கொண்டனர், ஆட்சியாளர்கள்.

கோர்ட் வரை போய்ப்பார்த்து விட்டு அதில் தோற்றுப் போன ஆர்.நட்ராஜ், விசுவாசத்தை வேறோர் இடத்தில் தீவிரமாகக் காட்டிய வகையில் தேர்வாணையக் குழு தலைவரில் தொடங்கி,  தற்போது, எம்.எல்.ஏ.வில் வந்து நின்றிருக்கிறார்.

பணி ஓய்வுகளில் தொடரும் அரசியலானது  35 ஆண்டுகாலம் அவர்களுக்கு கிடைத்த சல்யூட்களை எல்லாம்  மறக்கடித்து  எஞ்சிய   காலங்களில் மாறா,வடுவாக, இதுபோன்ற சம்பவங்களே  நெஞ்சில் தைத்துக் கொண்டு இருக்கும்...

ஆட்சியாளர்களின் போக்கும் மாறவேண்டும்,  இவர்கள்  'இன்னார் போலீஸ்' என்று பாமரனே புரிந்து வைத்து விமர்சிக்கும் போக்கினையும் மாற்றியமைக்க போலீசாரும் முன் வரவேண்டும். இல்லையென்றால், காவல்துறை மீது மக்கள் மனதில் இருந்து கொண்டிருக்கும் பயம் கலந்த மரியாதை என்பது  கடுகளவும் இராது.

ந.பா.சேதுராமன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ