Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொலை, கொள்ளை வழக்குகள் தேங்கி நிற்க இவர்கள்தான் காரணம்!

'டாக்டரிடமும், வக்கீலிடமும் உண்மையை மட்டுமே சொல்லுங்கள்' என்றொரு வழக்குச் சொல் உண்டு. அதில் மூன்றாவதாக சேர்த்துக் கொள்ள வேண்டிய இன்னொன்று, போலீஸ்.

" சம்பவம் எத்தனை மணிக்கு நடந்தது ?" இது போலீஸ். 'விடிகாலை, டான்னு நாலு மணிங்க. நான் கடிகாரத்தை அப்போது பார்த்தேன்'.  " நீங்க நைட் ஷிப்ட் டியூட்டிக்குப் போயிட்டு காலையில ஏழுமணிக்குத்தான் வீட்டிற்கு வந்ததாக உங்க பொண்ணு சொல்றாங்களே, எது சரி ? "- இது போலீஸ் ...


இப்படித்தான் பாதிக்கப் பட்டவர்கள் கொடுக்கும் முன்பின் தகவல்களால் பல வழக்குகள் விசாரிப்பில் சொதப்பல் ஆகி, குற்றவாளி எல்லையை விட்டு பல கிலோ மீட்டர்கள் கடந்த பின்னரே  வழக்கில் சின்னதாய் ஒரு 'லீட்' கிடைக்க அதை வைத்துக் கொண்டு மீண்டும் முதலில் இருந்து விசாரணை ஆரம்பமாகும்.

நாளொன்றுக்கு  தலா, மூன்று கொலைகள், கொள்ளைகள், வழிப்பறி சம்பவங்கள் தலைநகர் சென்னையில் நடந்து விடுகின்றன. சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடித்து போலீஸ் விசாரணை போய்க் கொண்டிருக்கும் போதே அடுத்த சம்பவம் நடந்து விடுகிறது.

ஓய்வு பெற்ற சீனியர் போலீஸ் அதிகாரிகள் சிலர் என்னிடம்,  'மக்கள் சொதப்பல்தான் பல வழக்குகளையே திசைமாறிப் போக வைத்துக் கொண்டிருக்கிறது ' என்று புதிதாய் ஒரு 'ட்ராக்' கை சொல்ல அது குறித்து அவர்களிடமே கேட்டேன். அதிலிருந்து,

" ஒரு இளம் பெண் கொலை வழக்கில்  நேரடியாக விசாரணை செய்ய வேண்டியிருந்தது. 'ஏரியாவில் யாரைக் கேட்டாலும் அந்தப் பொண்ணு குனிஞ்ச தலை நிமிராமல் ஆபீசுக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்திடும்.
வழியில நின்னு எங்கியும் செல்போன்ல பேசிகூட நாங்க பார்த்ததில்லை. யாருகிட்டேயும் பேசாது, இப்படி கொடூரமா கொலை பண்ணிட்டாங்களே' அப்படீன்னுதான்  அவங்க இருக்கும் ஏரியாவாசிகள் திரும்பத் திரும்பச் சொல்றாங்க.

முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் பிறவியிலேயே பேச முடியாதவர் என்பது தெரியவந்தது. சிறுவயது முதல் அந்தப் பெண்ணின் பெற்றோர் வசித்து வந்த இடம் வேறு. இப்போதுள்ள இடத்துக்கு குடிவந்து சில ஆண்டுகள்தான் ஆகிறது என்பதால் அவர்கள் குடும்பத்தைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. அதனால் அந்தப் பெண் ஊமை என்பதும் இங்கிருப்போருக்கு தெரிந்திருக்க வில்லை.

அவர்கள் முன்பு  வசித்த இடத்தில் போய் விசாரித்த போது, அந்தப் பெண்ணின் தந்தை, அரசு வேலை வாங்கித் தருவதாக பலரை மோசடி செய்து  சிறைக்குப் போனவர் என்பதும், அதன் தொடர்ச்சியாகத்தான் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு குடும்ப மொத்தமும் இங்கு வந்து விட்டார்கள் என்பதும்  தெரியவந்தது.
வேலை மோசடியில், இந்தப் பெண்ணின் தந்தையால் பாதிக்கப் பட்ட  இருவர்,  இவர்கள் குடும்பத்தையே போனிலும், நேரிலும் விடாமல் மிரட்டி வந்துள்ளனர். கொலை செய்யப்பட்ட அந்தப் பெண்ணையும்                 அதே போல் வழியில் பல  இடத்தில் வைத்து மிரட்டி வந்துள்ளனர்.

போலீஸ் விசாரணையில் இதையெல்லாம் சொன்னால்,  தன்னுடைய மோசடி விவகாரம் வெளியில் வந்துவிடுமே என்று நினைத்து எதையும் சொல்லாமல் மறைத்து விட்டார்  கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை. அவர்கள், முன்பு வசித்த இடத்தில் விசாரித்த போது கிடைத்த தகவலால் கொலை வழக்கின் முடிச்சே அவிழ்ந்தது.

அதன்பின் அந்த மிரட்டல் வாலிபர்கள் எங்கேயும்  ஸ்லிப் ஆகாமல்,  'ட்ரேஸ்' செய்து பிடித்தோம். முதலில் எகிறியவர்கள், அடுத்தடுத்த கிடுக்கிப் பிடியில் சிக்கிக் கொண்டனர். 

இப்படித்தான் பல வழக்குகள்  இருக்கின்றன. போலீசில் புகார் கொடுக்கிற பாதிக்கப் பட்ட நபர்கள், யோசித்து யோசித்து ஒவ்வொரு உண்மையாக  சொல்லி முடிப்பதற்குள், ஒருமாதம் ஓடிவிடும். அப்போது, அதைவிட பெரிய க்ரைம் ஒன்று நடந்து அது தொடர்பான விசாரணைக்குள் நாங்கள் போயிருப்போம்.

முகமூடி கொள்ளையர் வந்து எங்களிடம் கத்தி முனையில் கொள்ளையடித்தனர், பீரோக்களை உடைத்து பணம், நகைகளை அள்ளிச் சென்றனர் என்று புகாரில் சொல்வார்கள், விசாரணையின் கடைசி நாளன்றுதான் ,' பீரோவைத் திறந்து நகை, பணத்தை அள்ளிக் கொடுத்தது நாங்கள்தான்' என்பார்கள்.

இங்கே நாங்கள், கைரேகை மேட்ச் ஆகலையே என்று புலம்பிக் கொண்டிருப்போம். பல வழக்குகளில் எங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு மைனஸ் என்பதால்தான்  வழக்குகள் தேங்கி நிற்கிற நிலையே இருக்கிறது " என்றனர் சற்று விரிவாகவே.

பெரும்பாலான காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகாரை சம்மந்தப்பட்ட போலீசார் வாங்க மறுத்து அவர்களை சுற்றலில் விடுவதால்தான் அவர்கள், மாநகர காவல் ஆணையரின் குறைதீர் மையத்துக்கு நேரில் வந்து குமுறி விட்டுப் போகிறார்கள்.

'கமிஷனர் அலுவலகம் தானே போறே, போ, போ... நீ, அங்கே கொண்டு போய்க் கொடுக்கிற புகார்,  மறுபடியும் மேல் விசாரணைக்கு எங்கிட்டதான் வரும். அப்ப பாத்துக்கறேன், உன்னை' என்று  கமிஷனர் அலுவலகம் செல்லும் பொதுமக்கள் சம்மந்தப்பட்ட காவல்நிலைய போலீசாரால் மிரட்டப்படுவதும், அதேபோல், அந்தப் புகார்கள் அங்கேயே (சொன்னபடி, பழைய காவல் நிலையத்துக்கே) திரும்பிச் செல்வதும், காலங் காலமாய் மக்களுக்கு எதிராக தொடரும் அவலங்கள்.

நாணயத்துக்கு இரண்டு பக்கமும் இருக்கிறதே ஆபீசர்ஸ்... !


ந.பா. சேதுராமன்

 

எடிட்டர் சாய்ஸ்