Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வழக்கறிஞர் ரவி கொலை: குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை!

சென்னை: சென்னை வியாசர்பாடியில் வழக்கறிஞர் ரவி  இன்று (22.6. 2016 ) வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.  

வியாசர்பாடியில் கொல்லப்பட்ட ரவி, புரட்சி பாரதம் கட்சியில் சில ஆண்டுகள் முன்னர் வரையில் பொறுப்பில் இருந்தவர். பின்னர் அங்கிருந்து வெளியேறி,  'ஜனநாயக புரட்சி முன்னணி' என்ற பெயரில் தனியாக இயக்கம் தொடங்கினார். மேலும் திருநங்கையர் நலனுக்காக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தியுள்ளார். 

இந்நிலையில் ரவுடிகளுக்குள் மோதல், மாமூல், கட்டப்பஞ்சாயத்து என வடசென்னையின்  வியாசர்பாடி தகித்துக் கொண்டிருக்கிற வேளையில்தான் வழக்கறிஞர் ரவியின் படுகொலைச் சம்பவமும் சாதாரணமாக நடந்து முடிந்திருக்கிறது என்கிறார்கள் அப்பகுதியில் வசிப்போர்.

இது தொடர்பாக போலீசார் தரப்பில், " மாதவரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்  என்பவரின் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்று, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வகையில் மாதவரம் காவல் நிலையத்தில் ஒரு  வழக்கும், வியாசர்பாடி காவல் நிலையத்தில் நுழைந்து இளைஞர் காவல் படையைச் சேர்ந்த தினேஷ் என்பவரை தாக்கியதாக ஒரு வழக்கும் ரவி மீது உள்ளது. இதில் ரவி முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

'வியாசர்பாடி,  சத்தியமூர்த்தி நகரில் வசிக்கும் 6 பேருடன் எங்கள் அண்ணன் ரவிக்கு முன் விரோதம் இருந்தது' என்று ரவியின் தம்பி மதுரைவீரன் போலீசில் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில்,  விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவிக்கின்றனர்.

சென்னை பெரியமேடு பகுதியில் கொலை செய்யப்பட்ட ஆர்.டி.ஐ.ஆர்வலர் பாரஸ்மல், புழலில் கொல்லப்பட்ட வழக்கறிஞர் அகிலன், வியாசர்பாடியில் கொல்லப்பட்டிருக்கும் வழக்கறிஞர் ரவி என அனைவருமே காலை 10 மணியளவில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நேர ஒற்றுமையில் ஏதாவது பின்னணி இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இது போன்ற கொலைகள் அடிக்கடி நிகழ்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கூலிப்படையின் அட்டகாசம்தான் காரணம் என்று கூறும் சமூக ஆர்வலர்கள், இதுபோன்ற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.

                                                                                                                                                                                                                                 -ந.பா.சேதுராமன்


 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close