Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வழக்கறிஞர் ரவியைக் கொலை செய்தது ஏன் ? சிக்கிய 8 பேரின் பகீர் வாக்குமூலம்!

சென்னை வியாசர்பாடியில் வழக்கறிஞர் ரவி  தன்னுடைய வீட்டுக்கு அருகிலேயே  நேற்று (22.6. 2016 ) வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக  8 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, பெரியமேடு பகுதியில் கொலை செய்யப்பட்ட ஆர்.டி.ஐ. ஆர்வலர் பாரஸ்மல், புழலில் கொல்லப்பட்ட வழக்கறிஞர் அகிலன், வியாசர்பாடியில் கொல்லப்பட்டிருக்கும் வழக்கறிஞர் ரவி என அனைவருமே காலை 10 மணியளவில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நேர ஒற்றுமையின் பின்னணியில் ஏதாவது க்ளூ இருக்குமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

அதே சமயம் வழக்கறிஞர் ரவியை கொன்ற குற்றவாளிகளைப் பிடிக்க, போலீஸ் உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் ராயப்பன் உள்ளிட்டோரைக் கொண்ட  தனிப்படையினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் இறங்கினர்.  தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில்  வியாசர்பாடியைச் சேர்ந்த வெள்ளைராஜ், ரஜினி, தொண்டைராஜ், விக்னேஷ், விக்ரம், நாகராஜ், திலீப்குமார், அரவிந்த்ராஜ் ஆகியோர்தான் கொலையாளிகள் என்று முடிவுக்கு வந்தனர். பெயர் பட்டியலில் உள்ள 8 பேரையும் பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள், வழக்கறிஞர் ரவி கொலைக்கான காரணத்தை தெரிவித்தனராம்.

கொலையாளிகள் அளித்த தகவலாக போலீஸ் வட்டாரத்தில் சொல்லப்படுவது இதுதான்...

"தொண்டைராஜிடம்  3 லட்சம் ரூபாய் வரை சிறுகச் சிறுக வாங்கிக் கொண்டு, உறுதி கொடுத்தபடி அவர் மனைவியிடம் டைவர்ஸ் வாங்கித் தராமல்  ஏமாற்றி வந்தார். இதுபற்றி பலமுறை வக்கீல் ரவியிடம் கேட்டும் அவர் எங்களை மதிக்கவில்லை. இன்னொரு கூட்டாளியான நாகராஜிடம் வீடு லீசுக்கு எடுத்து தருவதாகச்  சொல்லி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் வாங்கினார். சொன்னபடி வீடு பிடித்தும் தரவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றினார்.

சென்னை பேசின் பிரிட்ஜ் மேம்பாலத்தில் உள்ள நாகவள்ளி அம்மன் கோவில் பெண் பூசாரியும், தர்மகர்த்தாவுமான நாகபூஷணம் கொலை 2004-ல் நடந்தது. இந்த கொலை தொடர்பாக  வெள்ளைராஜூ, ரஜினி கைதானார்கள். நாகபூஷணம் கொலை வழக்கில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களை  போட்டுக் கொடுத்து போலீசில் சிக்க வைத்தது வக்கீல் ரவிதான் என்பது கடந்த மாதம்தான் தெரியவந்தது. வக்கீல் ரவியோடும், எங்களோடும் எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும் திலீப்குமாரையும் சமீபத்தில் ஒரு வழக்கில் சிக்க வைத்து எம்.கே.பி. நகர் போலீசில் மாட்ட வைத்து விட்டார்.

ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேசனில் எங்கள் மீது தவறாக தகவல் கொடுத்தும்,  'ட்விஸ்ட்' செய்தும் எங்களை மிரட்டுவார். அவரே மாட்ட வைத்து விட்டு, அவரே ஜாமீனில் எடுப்பது போல நடிப்பார். இது எங்களுக்கு தெரிந்து விட்டது. பலமுறை நேரடியாகவே நியாயம் கேட்டோம். அவர் எங்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஒன்றாக சாப்பிட்டு ஒன்றாகப் பழகிக் கொண்டே இப்படி கண்ட இடத்தில் போட்டுக் கொடுப்பது, குறிப்பாய் பொய் வழக்கில் சிக்க வைப்பது என்பது வக்கீல் ரவிக்கு பழகி விட்டது.

'எங்களைப் பிடிக்கா விட்டால் சொல்லுங்கள், நாங்கள் ஒதுங்கிக் கொள்கிறோம், வேறு வக்கீலை பார்த்துக் கொள்கிறோம். கூட இருந்து கொண்டே துரோகம் செய்யாதீர்கள்' என்று கூட பலமுறை சொன்னோம். அவர் கேட்பதாக தெரியவில்லை.

போலீசிடம் போட்டுக் கொடுப்பது போல நாளைக்கு என்றாவது, எங்கள் எதிரிகளிடம் எங்களைப் பற்றிப் போட்டுக் கொடுத்து விட்டால் என்னாவது என்ற உயிர் பயம் காரணமாகவே, கடைசி முடிவாக ரவியை கொலை  செய்தோம்" என்று தெரிவித்துள்ளனர்.

வியாசர்பாடியைப் பொறுத்தவரை சத்ரியன் சினிமாவில் வரும்  அண்ணாச்சி கேரக்டர் 'திலகன்' போன்ற நினைப்புடன்  தெருவுக்கு ஒருவர் இருப்பதை சாதாரணமாக பார்க்கலாம். அதற்கு 'பன்னீர்செல்வம்' போன்ற கேரக்டர் கொண்ட அதிகாரிகளை இங்கு போஸ்டிங் போட்டால்தான் ஏரியா அமைதிக்குத் திரும்பும்.

அப்படி வியாசர்பாடியை கன்ட்ரோலுக்கு கொண்டு வந்த  இன்ஸ்பெக்டர்களில் முக்கியமானவர் பிரகாஷ். பான் பராக், குட்கா ,கஞ்சா போன்றவைகளை  வியாசர்பாடியில் இன்ஸ்பெக்டராக வந்த மூன்றே நாளில் மொத்தமாக காலி செய்தார். சாமந்திப்பூ காலனி 1 மற்றும் 2-வது தெருக்களிலும், ஜெ.ஜெ. நகரிலும் சாதாரணமாகக் கிடைத்த  போதை வஸ்துகளை மொத்தமாக காலி செய்தவரும் இவர்தான்.

குறுகிய காலத்தில் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் இங்கிருந்து மாற்றப்பட்டு தண்டையார் பேட்டைக்குப் போய்,  பின்னர் அங்கிருந்தும் மாற்றப்பட்டு தற்போது திருவொற்றியூரில் இருக்கிறார். இத்தனையும் ஓராண்டுக்குள் நடந்த விஷயங்கள். 'ரவுடிகளை எப்படி ஒடுக்க வேண்டும் என்ற வித்தை தெரிந்த அதிகாரி மீது புகார்கள் கிளம்பினால்,  எந்த விசாரணையும் இல்லாமல் அந்த அதிகாரியை உடனே இடமாற்றம் செய்கின்ற உயர் அதிகாரிகளின் வேகம்தான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் பெரும்பாலான கொலைகளுக்கு பிரதான காரணம்' என்கின்றனர் ஏரியா வாசிகள்.

-ந.பா.சேதுராமன்.


 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ