Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொலையை யாராவது வீடியோ எடுத்திருந்தால் போலீசிடம் கொடுங்கள்! -சுவாதி சித்தப்பா வேண்டுகோள்

சென்னை: சுவாதியை கொலை செய்தபோது யாராவது வீடியோ எடுத்திருந்தால் அதை உடனே போலீசுக்கு கொடுங்கள் என்று சுவாதியின் சித்தப்பா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மின்சார ரயிலுக்காக காத்திருந்த சூளைமேட்டைச் சேர்ந்த பெண் பொறியாளர் சுவாதி, மர்ம இளைஞரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சுவாதியை கொலை செய்த இளைஞர் யார் என்பது குறித்து சி.சி.டிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது, கொலையாளி என சந்தேகிக்கப்படும் இளைஞர், தப்பிச்செல்லும் புதிய வீடியோ காட்சிகளை ரயில்வே போலீசார் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோ காட்சி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகேயுள்ள பயிற்சி மையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டிவி. கேமராவில் பதிவாகி இருந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். குறிப்பிட்ட அந்த பதிவில் உள்ள இளைஞரின் அடையாளங்கள், சந்தேகிக்கப்படும் இளைஞரின் அடையாளங்களோடு ஒத்துப்போவதாகவும், சந்தேகப்படும் நபர்தான் கொலையாளி என்பதை சம்பவத்தை நேரில் பார்த்தவர் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், சுவாதியின் சித்தப்பா கோவிந்தராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''சுவாதியை கொலை செய்த குற்றவாளியை உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அவளுக்கு யாருடனும் எந்தவித தொடர்பும் கிடையாது.

சுவாதி குறித்து அவதூறு கருத்துகள் பரப்பப்படுகின்றன. சுவாதி கொலையில் சாதி, மதத்தை நுழைத்து சம்பவத்தை திசை திருப்ப வேண்டாம். அதேபோல், விசாரணையை திசை திருப்பும் வகையில் ஊடகங்களும் செய்தி வெளியிட வேண்டாம்.

சுவாதியை கொலை செய்தபோது பொதுமக்கள் யாரேனும் வீடியோ எடுத்திருந்தால், கொலையாளி குறித்த அந்த வீடியோ காட்சிகளையோ அல்லது கொலையாளி பற்றி வேறு எந்த தகவலாவது யாருக்காவது கிடைத்தாலும் அதை உடனே காவல்துறைக்கு அளித்து உதவ வேண்டும்" என்று உருக்கமாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ