Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சந்தோஷம் தொலைத்த சூளைமேடு வீடுகள்: மறக்க முடியாத அருணாக்களும், சுவாதிகளும்...

சென்னை  காவல் எல்லையோடு புறநகர்ப் பகுதிகளான மாங்காடு, போரூர், மணலி, எண்ணூர் போன்றவை சேர்ந்து விட்ட பின்னர் சென்னையின் மொத்த போலீசாரின் எண்ணிக்கை பன்மடங்கு எகிறி விட்டிருக்கிறது. கொஞ்சமும் இடைவெளியில்லாமல் அடுத்தடுத்து சென்னையில்  நடந்து கொண்டிருக்கும் தொடர் கொலைகள் பொதுமக்களை பீதியில் உறைய வைத்திருக்கின்றன.

தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த தொடர்க் கொலைகளை கண்டித்து அறிக்கை விட் டுள்ளன. காங்கிரசோ, அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒருபடி மேலே போய் போராட்டத்தையும் அறிவித்துள்ளது.

' சென்னை சூளைமேடு வக்கீல் முருகன் கோடம்பாக்கத்தில் படுகொலை,  பெரியமேட்டில் ஆர்.டி.ஐ. ஆர்வலர் பாரஸ்மல் படுகொலை,  ஐஸ் ஹவுசில் ஒரே வீட்டில் நான்கு பெண்கள் படுகொலை, வியாசர்பாடியில் ரவுடிகளுக்குள் பங்கு பிரிப்பதில் மோதல் பொதுமக்களில் 10 பேருக்கு அரிவாள் வெட்டு,  அதே வியாசர்பாடியில் வக்கீல் ரவி படுகொலை.நுங்கம்பாக்கத்தில் இரவுக் காவலாளி படுகொலை, தண்டையார் பேட்டை கூர்க்கா, பகதூர் என்பவரின் மகளான பள்ளி மாணவியை புதுவண்ணாரப் பேட்டையில் ஆட்டோவில் கடத்த முயற்சி.  நுங்கம்பாக்கம்  ரயில் நிலையத்தில் ஐ.டி. ஊழியர், சூளைமேடு சுவாதி படுகொலை,  அடையாறில் ரவுடி வேலு படுகொலை.

இப்படியாகத் தொடந்து சென்னையில்  சமூக விரோத சம்பவங்கள்  தொடர்ந்த வேளையில்தான் சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் அவசரமாக கடந்த 25.6.2016 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
" நடந்துள்ள சம்பவங்கள் எதிலும் ரவுடிகளோ,  கூலிப் படையோ சம்மந்தப் பட்டிருக்க வில்லை" என்றார்.  அவர்,  செய்தியாளர்களைச் சந்தித்த அன்றிரவே,  ஊடகங்களுக்கு அவசரமாக ஒரு செய்திக் குறிப்பும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதில், " வடக்கு, தெற்கு மண்டலங்களில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய  330 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  அதே போல், மத்திய குற்றப்பிரிவு உதவி. கமிஷனர் தலைமையிலான போலீசார் 12 ரவுடிகளை கைது செய்துள்ளனர். சென்னையில் 1.1.2016 முதல், 27.6.2016 வரையில், பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய  608 நபர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில்  அடைத்துள்ளோம்." என்று  சொல்லப்பட்டிருந்தது.

ஆக, நடந்து முடிந்திருக்கும் அத்தனைக் கொலைகளுக்கும், சமூக விரோத சம்பவங்களுக்கும் அதற்கான காரணங்கள் முன்விரோதம், கள்ளக் காதல், தொழில் ரீதியிலான பகை என்பதே போலீஸ் சொல்லும் பதில்.
வழக்கறிஞர்கள் முருகன், ரவி இருவர் கொலையிலும் பெண் விவகாரங்கள் இருப்பதாகச் சொல்லப் பட்டாலும், இவ்விரு வழக்கறிஞர்களும் முதல்முறை குற்றவாளிகளால் கொல்லப்பட்டிருக்கவில்லை,
சம்மந்தப் பட்ட அனைவருமே கொலை செய்வதில் கை தேர்ந்தவர்கள் என்பதை பிடிபட்ட குற்றவாளிகள் மீதான முந்தைய வழக்குகள் சொல்லி விடுகின்றன.

ஆர்.டி.ஐ. ஆர்வலர் பாரஸ்மல் கொலைக்காக,  சிவா என்பவரை எதிராளியான ரமேஷ்குமார் அணுகியதாகவும்  சிவா மூலமாகத்தான் கொலையில் கை தேர்ந்த 'மின்ட் ஜெயபால்' என்பவர் அறிமுகம் ஆனதாகவும் அதன் பின்னரே  பாரஸ்மல் கொலைச் சம்பவம் நடந்ததாகவும் சொல்கிறது , வழக்கை பதிவு செய்த போலீஸ் தரப்பு.

சென்னை வியாசர்பாடியில் ரவுடிகளுக்குள் நடந்த மாமூல் பிரிப்பு மோதலில் சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்த  வகையில் 'ஏன் வெட்டுப் படுகிறோம்?' என்பதே தெரியாமல் வெட்டுபட்ட பொதுமக்கள் 10 பேரில் இன்னமும் நால்வர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி வார்டில்தான் உள்ளனர்.

நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேசனில் கொலை செய்யப்பட்ட  சுவாதியின் குடும்பத்தாரைச் சந்தித்துப் பேச  அவர்  வீடு இருக்கும், சென்னை சூளைமேடு  தெற்கு கங்கையம்மன் கோவில் தெருவில் வந்து கொண்டிருந்தேன். வழியில்  சட்டண்ண (நா) தெரு குறுக்கிட, அங்கேயே என் பார்வை குத்திட்டு நின்று விட்டது. அது கடந்த, 2015  மார்ச் மாதம் 10-ந்தேதி காதலன் தினேஷால் கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசப்பட்ட அருணாவின் வீடு உள்ள தெரு.

இந்திய உணவுக் காப்பீட்டுக் கழக  மூன்றாண்டு பயிற்சியை முடித்து விட்டு மத்திய அரசுப் பணியில் அதிகாரியாக, காத்திருந்த வேளையில் தான் அருணா கொடூரமாக கொல்லப்பட்டு  கோணி மூட்டையால் அடைத்து வீசப்பட்டார். மயானம் சூழ் இருளில் கிடக்கிறது அருணாவின் வீடு. சென்னையின் 18 ஆயிரம் போலீசாரை  சாதாரணமாக நினைத்து விட்டு தப்பித்து ஓடிக் கொண்டே இருக்கும் , அருணாவின் கொலை வழக்குக் குற்றவாளி தினேஷின் முகமும் கண் முன்னே வந்து போனது.

தினேசுக்கு மிகப்பெரிய பின்புலமெல்லாம் ஒன்றும் இல்லைதான். ஆனால், அருணா கொலை செய்யப்பட்ட போது  சூளைமேடு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ராமசாமியால் எந்த துப்பும் துலக்க முடியவில்லை என்பதால், நன்றாக துப்பு துலக்க ஶ்ரீகாந்த் என்ற இன்ஸ்பெக்டரை புதிதாக அங்கே போஸ்டிங் போட்டனர்.
ஶ்ரீகாந்த துலக்கிய துப்பில் இதற்கு முன்னர் அங்கு நிலுவையில் இருந்த பல வழக்குகள் முடிவுக்கு வந்ததாகச் சொல்லப் பட்டாலும், தினேஷ் எங்கிருக்கிறார் என்பதை மட்டும் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில், 'படத்தில் காணப்படும் இவர் தான் தினேஷ். இவரைக் கண்டு பிடித்துக் கொடுத்தால் தக்க சன்மானம் அளிக்கப்படும்' என்று போலீசாரே போஸ்டர் ஒட்டியும் பார்த்தனர், சிக்க வில்லை தினேஷ். சூளைமேடு பகுதியில் நுழைந்தாலே,  தன்னம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருந்த மகாராணிகள் வசித்த அந்த வீடுகள் கண்ணில் பட்டு விடுகின்றன நேற்று அருணாவின் வீடு, இன்று சுவாதியின் வீடு.

இனியும் இது போன்ற வீடுகளை அடையாளப் படுத்தி நெஞ்சம் விம்மும் ஞாபகங்கள் யாருக்கும் வரக்கூடாது, வரவே கூடாது. அதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு  தமிழக காவல்துறை கைகளில்தான் இருக்கிறது.

ந.பா.சேதுராமன்
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ