Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வழிபறி முயற்சியில் இளம் பெண் உயிரிழப்பு... சென்னையில் அடுத்த பயங்கரம்!

சென்னை: பட்டினப்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண்ணிடம் நடத்தப்பட்ட வழிப்பறி முயற்சியில் அவர் பரிதாபமாக பலியாகி உள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் கொள்ளையர்களின் வாகனம் மோதி ஒரு முதியவரும் பலியாகி உள்ளார்.

பட்டினபாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் நந்தினி மற்றும் காயத்ரி நேற்று இரவு மந்தைவெளியில் உள்ள ஏ.டி.எம். ஒன்றில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு தங்களது இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, தங்களை இருவர் துரத்துவதை உணர்ந்த இளம் பெண்கள், தங்களது இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி உள்ளனர். இந்நிலையில், நந்தினியின் ஹேண்ட்பேக்கை கொள்ளையர்கள் பறித்துள்ளனர். உடனே, நந்தினி மற்றும் காயத்ரி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நந்தினி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், நந்தினியின் ஹேண்ட்பேக்கை பறித்து சென்ற கொள்ளையர்களின் இருசக்கர வாகனம் மோதியதில், அந்த வழியாக நடந்து சென்ற சேகர் என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதி பொதுமக்கள், துரத்திச் சென்று வழிப்பறியில் ஈடுபட்ட கருணாகரன் என்பவரை பிடித்து அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும், தப்பிச் சென்ற மற்றொரு கொள்ளையரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் டாஸ்மாக் அருகே இந்த விபத்து நடந்ததால், அக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் பட்டினப்பாக்கம் E5 காவல் நிலையத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் வழிப்பறியில் ஈடுபட்டவரின் இரு சக்கர வாகனத்தையும் அவர்கள் தீ வைத்து எரித்தனர்.

இதனால் பட்டினப்பாக்கத்தில் நள்ளிரவில் பதற்றம் ஏற்பட்டது. பதற்றத்தை தனிக்க போலீசர் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சென்னை ஆணையர் டி.கே.ராஜேந்திரன், நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இளம் பொறியாளர் சுவாதி படுகொலை, வினுப்ரியா தற்கொலை என தலைநகர் சென்னை உட்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு காரணங்களுக்காக நாள்தோறும் ஒரு பெண் தொடர்ந்து உயிரிழந்து வருவது, பொதுமக்களிடையே மிகுந்த பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ