Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜாமீன் மனு தாக்கல் வழக்கறிஞர் விலகல்: ராம்குமார் கைதில் திருப்பம்!

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாருக்குத் தெரியாமலேயே ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் எதிர்ப்புத் தெரிவித்ததால் நீதிபதி இந்த மனு மீதான வழக்கை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில்  நிலையத்தில்  சுவாதி, கடந்த மாதம் 24-ந் தேதி கொடூரமாகக்  கொலை செய்யப்பட்டார். மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தக்  கொலை வழக்கில் திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை அருகில் உள்ள  மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதின்போது ராம்குமார் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் அவருக்கு சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து ராம்குமார் சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் ஜாமீன் கேட்டு நேற்று(புதன்) முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘சுவாதியின் கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் ஒரு அப்பாவி. சுவாதியைக்  கொலை செய்த உண்மையான குற்றவாளியைக்  கைது செய்யாமல், கிராமப் புறத்தைச்  சேர்ந்த ஏழையான என்னை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், போலீசார் கைது செய்யும்போது, என் கழுத்தை நானே அறுத்துக்கொண்டதாகக்  கூறப்பட்டது.

ஆனால், நான் அறுக்கவில்லை. போலீசாருடன் வந்தவர்கள் தான் என் கழுத்தை பிளேடால் அறுத்தனர். எனவே, எனக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.


இந்த மனு மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான மாநகர அரசு வழக்கறிஞர் ‘இந்த ஜாமீன் மனு ராம்குமாருக்கு தெரியாமலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராம்குமார் மருத்துவமனையில் மயங்கிய நிலையில் சிகிச்சை பெறும்போது, அவரிடம் ஜாமீன் மனு தாக்கல் செய்வது குறித்து யாரும் அணுகவில்லை. ராம்குமாரிடமும், அவரது உறவினர்களிடமும் வக்காலத்து மனுவைப்  பெறாமல் ஜாமீன் மனுத்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்ட மனு என்பதால், இதை முதலில் தள்ளுபடி செய்யவேண்டும்’என்றார்.

இதனையடுத்து, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, ‘இந்த ஜாமீன் மனு ராம்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்குரைஞர் மகேந்திரன் தாக்கல் செய்துள்ளார். அவர் சார்பில் வாதம் செய்ய நான் ஆஜராகியுள்ளேன். குற்றவியல் விசாரணை முறைசட்டத்தின்படி, குற்றவாளி உறவினரிடம் வக்காலத்து பெற்று ஜாமீன் மனு தாக்கல் செய்யவேண்டிய அவசியம் இல்லை. இந்த மனு உரிய அனுமதியை பெற்ற பின்னர்தான், தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

அப்போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பெண் வழக்குரைஞர் சக்தி உள்பட பலர் ஆஜராகி, ‘ராம்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று பெண்கள் அமைப்புகள் சார்பில் ஆஜராகுகிறோம். இந்த வழக்கில் எங்களையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்கவேண்டும்’ என்றனர்.

அனைவரின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜெயசந்திரன், ‘இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு எடுப்பது குறித்து முதலில் முடிவு செய்யவேண்டும். பொதுவாக ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யும்போது, வக்காலத்து தாக்கல் செய்வதில்லை. இருந்தாலும், இந்த ஜாமீன் மனு ராம்குமாருக்கு தெரியாமலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு  சந்தேகம் எழுப்பியுள்ளது. எனவே, முதலில் இதுகுறித்து மனுதாரர் வழக்கறிஞர் தெளிவுப்படுத்தவேண்டும். எனவே, இந்த மனு மீதான விசாரணையை வருகிற 15ம் தேதி தள்ளிவைக்கிறேன்’என்று உத்தரவிட்டார்.

வழக்கறிஞர் விலகல்


இந்நிலையில் இன்று(வியாழன்) ராம்குமார் ஜாமீனுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி தனது பேஸ்புக் பக்கத்தில், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாருக்கு ஆதரவாக வாதாடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும், வேலைப்பளு காரணமாக இந்த வழக்கிலிருந்து விலகுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ