Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'லத்தி-சார்ஜை போலீசார் விரும்பவில்லை' ! முன்னாள் ஐ.ஜி விளக்கம்

ம்மை துன்புறுத்தும் ஆயுதங்கள் எந்தப் பக்கமிருந்து வருகிறது என்று ஊகிக்கக் கூட முடியாத மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள், உரிமைக்காகக்  குரல் கொடுக்கும் தொழிலாளிகள், ஒருபக்கம் குடிக்க குடிநீர் கேட்டும், இன்னொரு பக்கம் 'டாஸ்மாக்' கடையை மூடக் கேட்டும் வீதிக்கு வரும் பெண்கள், தொழிற்சங்க வாதிகள் போன்றோர்தான் போலீசின் தடியடிக்கு அடிக்கடி ஆளாகிப் பாதிக்கப்படுபவர்கள். " வி.ஐ.பி. வீட்டுப் பிள்ளைகள், வந்து போகும் இடம் என்பதால் சென்னையில் சத்யம் தியேட்டரில் தள்ளு முள்ளுகளுக்கு லத்தி சார்ஜ் நடப்பதில்லை... அதே வேளையில் வண்ணாரப்பேட்டை மகாராணி தியேட்டரிலும், திருவொற்றியூர் எம்.எஸ்.எம். தியேட்டரிலும் தடியடிகள் சாதாரணம்" என்கிற பாகுபாடு குறித்த குற்றச் சாட்டும் போலீஸ் முன் வைக்கப் படுகிறது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகிலுள்ள தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. ஆட்டோ ஓட்டும் கூலித் தொழிலாளி. உறவினரின் திருமண நிகழ்வுக்காக தங்க நகை வாங்க மனைவி உஷா, மகன் சூர்யா ஆகியோருடன் செங்கத்திற்கு வந்துள்ளனர். செங்கம்- போளுர் சாலை பழைய பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள நகைக்கடையில் நகையை வாங்கியதாக தெரிகிறது. கூலித்தொழிலாளியான ராஜாவின் கையிருப்பை விட அதிகமான பணத்திற்கு மனைவி உஷா நகையை தேர்வு செய்து வாங்கிக் கொள்ளவே நகைக் கடையில் ஆரம்பித்த கணவன், மனைவி வாக்குவாதம் கடைக்கு வெளியே கைகலப்பில் முடிந்துள்ளது.

இவர்களைத்  தடுக்க வந்த மகனும் ஒரு கட்டத்தில் இந்தச் சண்டையில் பங்கேற்கவே பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி அமளி துமளியாகியுள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகில் கடை வைத்திருப்பவர்களும், பஸ் ஏற வந்தவர்களும் முடிந்தவரை இதில் தலையிட்டுச்  சண்டையை விலக்கி விடப் பார்த்துள்ளனர். ஆனால், சண்டையின் அளவு கூடிக் கொண்டே போயுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் மாறி, மாறி போலீஸ் கன்ட்ரோலுக்கு போன் செய்துள்ளனர்.


செங்கம் காவல்நிலையத்தில் இருந்து அங்கு வந்து சேர்ந்த நம்மாழ்வார், முருகன், மப்டி உடையில் இருந்த விஜயகுமார் ஆகிய போலீசார், "எதுவாக இருந்தாலும் வீட்டில் போய் வெச்சுக்குங்க... நாலு பேரு வந்து போகும் இடத்தில் இப்படியா செய்வது? முதலில் போங்கய்யா, இங்கிருந்து... " என்று சத்தம் போட்டுள்ளனர். மேலும் அவர்கள்,  எதற்கு சண்டை போடுகிறீர்கள் என்றும்  கேட்டுள்ளனர். நாங்கள் இருவரும் கணவன் மனைவி, நகை எடுப்பதில் சண்டை வந்தது என்று கூறியுள்ளனர்.

"சார், ச்சும்மாத்தான் .... எங்களுக்குள்ள பேசி முடிச்சுப்போம், நான் பாத்துக்கிறேன் சார், நீங்க போங்க" என்று போலீசாரை நோக்கி ராஜா கையை நீட்டவே கடுப்பான போலீசார், " யோவ், நீங்க இங்க சண்டை போட்டுக்கிட்டு உருளுவீங்க, யாராவது தடுக்க வந்தால் அவங்களையும் விரட்டுவீங்க, இப்போ எங்களையும் இடத்தைக் காலி பண்ணச் சொல்லி கையை நீட்டி பேசறீங்க.... உங்களை" என்றபடி கையில் வைத்திருந்த 'லத்தி' யை அவர்களை நோக்கி சுழற்ற ஆரம்பித்தனர்.

அதன் பின்னர் போலீசார் லத்திக்கு ஓய்வே கொடுக்காமல் சுமார் பத்து நிமிடம் வரையில் ராஜாவை லத்தியால் வெளுத்துக் கொண்டே இருந்தனர். தடுக்க வந்த மகன் சூர்யாவை ஒரு போலீஸ்காரர் இறுக்கமாய்ப் பிடித்துக் கொள்ள ராஜாவுக்கு அடி கூடிக் கொண்டே போனது.

தலைமைக் காவலர் முருகனின் காலில் விழுந்து, 'அவரை விட்டு விடுங்கள், சண்டை போடாமல் நாங்கள் வீட்டிற்குப் போய்ப் பேசிக் கொள்கிறோம்' என்று கெஞ்சிய உஷாவை எட்டி உதைத்துவிட்டு ராஜாவை இடைவெளியில்லாமல் அடித்து நொறுக்கியுள்ளனர்.

போலீசின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தந்தை ராஜாவைக் காப்பாற்ற மகன் சூர்யா முயன்றதால், அவனையும் லத்தியால் நொறுக்க ஆரம்பித்தனர். "சார், விட்ருங்க, அவங்களை ரொம்ப அடிச்சுட்டீங்க, போகட்டும்" என்று சமாதானம் பேச வந்தவர்களிடம், "நீங்க போன் பண்ணினால் நாங்கள் ஓடி வரணும், நீங்க போகச் சொன்னால் நாங்க உடனே ஓடிடணும், இல்லையா? போங்கய்யா" என்று போலீசார் அவர்களையும் விரட்டி விட்டனர். தடியடி உள்ளிட்ட அத்தனை சம்பவங்களையும் அங்கிருந்த சிலர் செல்போனில் எடுத்து 'வாட்ஸ் -அப் 'குரூப்புகளில் பரவ விட்டனர். அது தமிழ்நாடு காவல் துறை தலைமைக்குப் போகவே, மாவட்ட போலீஸ் எஸ்.பி. பொன்னியிடம் இது குறித்த விளக்கத்தைக்  கேட்டறிந்தனர். பின்னர் அந்த காவலர்கள் ஆயுதப்படைக்குப்  பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

போலீசாரின் லத்தி சார்ஜ் (தடியடி) பிரயோகம் பற்றி எப்போதுமே பொதுமக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் இருப்பதில்லை. போலீஸ் என்றாலே 'அவர்கள், அடிக்கிறவர்கள்' என்ற இமேஜ் படு ஸ்ட்ராங்காகவே மக்கள் மனதில் ஆழமாக ஊன்றியுள்ளது.

"போலீஸ் லத்தி- சார்ஜ் செய்வது சரிதானா ?" ஓய்வு போலீஸ் ஐ.ஜி.ராமநாதனிடம் கேட்டோம்.

ஓய்வு போலீஸ் ஐ.ஜி.ராமநாதன்

 

"போலீசாரை லத்தி சார்ஜ் செய்ய வேண்டாம் என்று தடுத்து விட்டால் அதற்காக முதலில் சந்தோஷப்படும் ஆள் நானாகத்தான் இருப்பேன். அதே போன்ற சந்தோஷம் ஒவ்வொரு போலீசாருக்கும் இருக்கும். நாங்கள் ஏன் பொதுமக்களை அடிக்க வேண்டும்.அவர்களுக்கும் எங்களுக்கும் ஏதாவது முன்விரோதமா.

கட்டமைக்கப் பட்ட ஒரு அரசியல் சட்ட அமைப்பை மீறி பொது இடத்தில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூடி, கலவரம் விளைவித்து, பொது சொத்துக்களை சேதப்படுத்தி விட்டு செல்கிற யாவரும் சட்டத்தின் முன்னால் குற்றவாளிகளே. அப்படி அசம்பாவிதம் நடக்காத வண்ணம்தான் பாதுகாப்புக்காக குறிப்பிட்ட இடத்தில் போலீசை  போடுகிறார்கள். போலீஸ் பாதுகாப்பை மீறிக் கொண்டு சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறவர்களை அதற்கு முன்னதாகவே தடுத்திட வேண்டிய பொறுப்பு போலீசுக்கு இருக்கிறது. அப்போதுதான் பொதுச் சொத்து காப்பாற்றப்படும், பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படாமல் தடுக்கப்படும். இதில் போலீசாரின் சொந்த விருப்பு, வெறுப்பு எங்கிருந்து வந்தது.

ஒரு தொழிற்சங்கப் போராட்டம் நடக்கிறது என்றால், அங்கே பாதுகாப்புக்காக இருக்கிற போலீசார், உரிமைகேட்டு போராடும் அந்த தொழிற்சங்கவாதியையும் பாதுகாக்க வேண்டும், கதவடைப்பு செய்துள்ள நிறுவனத்தாரையும் பாதுகாக்க வேண்டும். இரு தரப்பும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் சூழலைத்  தடுத்து நிறுத்த வேண்டும். இதில் போலீசார் வேலை என்ன. எந்தப் பக்கம் இருந்து இந்த வரம்பை மீறிக் கொண்டு, சட்டம் -ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி நடக்கிறதோ, அந்தப் பக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் அவ்வளவுதான். இதில் போலீசாரின் சொந்த விருப்பு, வெருப்பு எங்கிருந்து வந்தது.

அரசின் டாஸ்மாக் மதுபானக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்துகிறார்கள், இது எந்த வகையில் சரி. எனக்கும்தான் மது பிடிக்காது, அதற்காக டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று நான் சாலையில் நின்று மறியலில் ஈடுபடுவது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதுதானே.

டாஸ்மாக் கடையை நடத்துவோம் என்பது ஆளும் அரசின் கொள்கை முடிவு. வாக்களித்து அதே அரசை பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுத்த பின், அதாவது அந்த கொள்கை முடிவை ஏற்றுக் கொண்ட பின், அந்த டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராடுவது, சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் வண்ணம் மறியலில் ஈடுபடுவது எந்த வகையில் சரி.இதில் போலீசாரின் சொந்த விருப்பு, வெறுப்பு எங்கிருந்து வந்தது." என்கிறார் சூடாக.

- ந.பா.சேதுராமன்

படங்கள்: ப.சரவணகுமார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close