Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருமண தினத்தில் கைதான புதுமாப்பிள்ளை!


நாகர்கோவில் கல்லூரி மாணவியிடம் 4 பேர் அத்துமீறிய சம்பவத்தில் தலைமறைவாக இருந்த தனியார் நிறுவன ஊழியர் ஞானபிரவின், திருமணநாளில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சேர்ந்த இளம் பெண், நாகர்கோவில் உள்ள கல்லூரியில் படித்தார். இவர், சில நாட்களுக்கு முன்பு வடசேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தன்னிடம் குழித்துறையைச் சேர்ந்த வேன் டிரைவர் சுரேஷ், மற்றும் அவரது நண்பர்கள் அத்துமீறியதாக கூறியுள்ளார். இதையடுத்து வடசேரி போலீஸார், வழக்குப்பதிவு செய்து சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ், கோபால் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஞானபிரவின் மட்டும் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் ஞானபிரவின் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். ஜாமீன் மனுவில், தனக்கு நவம்பர் 4-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதால் அதுவரை தன்னை கைது செய்யக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்அடிப்படையிலேயே அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. அப்போது 4-ம் தேதி மாலை 5 மணிக்குள் போலீஸ் நிலையத்தில் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் காலக்கெடு விதித்து இருந்தது.


நேற்று ஞானபிரவினுக்கு நாகர்கோவிலில் திருமணம் நடந்தது. பிறகு வள்ளியூரில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நீதிமன்றம் விடுத்த கெடு முடிந்த பிறகும் அவர் வடசேரி போலீஸ் நிலையத்தில் சரண் அடையவில்லை. இதனால் வடசேரி போலீஸார், வள்ளியூருக்கு சென்றனர். அங்கு புதுமாப்பிள்ளையான ஞானபிரவீனை கைது செய்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். திருமண நாளில் புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஞானபிரவின் தரப்பினர் கூறுகையில், "மாணவி வழக்கில் ஞானபிரவினுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தப்பட்ட மாணவி யார் என்றே அவருக்குத் தெரியாது. சட்டப்படி இந்த வழக்கை சந்திப்போம்"என்றனர்.
போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "ஞானபிரவின், நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அப்போதுதான் சுரேஷ், கோபால், தினேஷ் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஞானபிரவின் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதற்கு எங்களிடம் ஆதாரம் இருப்பதால் அவரை கைது செய்துள்ளோம்"என்றனர்.

- எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ