Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபாவளி பரிசாக விஷ 'மது'... முன்னாள் காதலிக்காக வாலிபரின் திகீர் முயற்சி !

வேலூர்: முன்னாள் காதலியை கரம் பிடிக்க காதலன் காதலியின் கணவனுக்கு தீபாவளிப் பரிசாக விஷம் கலந்த மதுவை அனுப்பிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர். இந்த மதுவை குடித்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வேலூர் சாத்தமதுரையைச் சேர்ந்தவர் சதிஷ்குமார் (35). இவரது மனைவி கவுதமி. சதீஷ்குமாருக்கு தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்னர் வந்த தொலைபேசி அழைப்பில், 'உங்கள் எண்ணுக்கு பரிசு விழுந்துள்ளது. வீட்டு முகவரி கொடுத்தால் பரிசை அனுப்பி வைக்கிறோம்' என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சதீஷ்குமார் முகவரியை கொடுத்துள்ளார். அடுத்த ஓரிரு நாளில் இவரது வீட்டுக்கு பார்சல் ஒன்று வந்திருந்தது. அவரது அம்மா வாங்கி வைத்திருந்தார்.

சதீஷ்குமார் அந்த பார்சலை பிரித்துப் பார்த்தபோது அதில் மது பாட்டில் ஒன்று இருந்தது. இதையடுத்து தீபாவளி அன்று சதீஷ்குமார் தனது நண்பருடன் சேர்ந்து அந்த மதுவை குடித்தார். மதுவை குடித்த சில நிமிடங்களில் இருவரும் ரத்த வாந்தி எடுத்தனர். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே இது தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், மதுவில் மோனோ ப்ரோட்டோ பாஸ் என்ற பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது தெரியவந்தது மதுபாட்டிலில் ஊசி மூலம் இந்த விஷம் உள்செலுத்தப்பட்டதும் தெரியவந்தது. பார்சலில் உள்ள முகவரியை கொண்டு விசாரித்தபோது அது போலி முகவரி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே. சதீஷ்குமாரின் மனைவி கவுதமிக்கு அடிக்கடி அழைப்பு வந்ததால் சந்தேகமடைந்த போலீஸார், அவரது மனைவியின் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது விநாயகமூர்த்தி என்பவர் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பேசி வருவது தெரியவந்தது. விநாயகமூர்த்தி கவுதமியின் முன்னாள் காதலன் என்றும், கவுதமியை கரம் பிடிப்பதற்காக அவரது கணவரை கொல்ல விஷ மது பாட்டிலை அனுப்பியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளானர். இது தொடர்பாக விநாயகமூர்த்தியை பிடித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், "கடந்த 5 வருடத்துக்கு முன் வேலூர் தனியார் கல்லூரியில் கலைநிகழ்ச்சியில் விநாயகமூர்த்தியும் கவுதமியும் சந்தித்துள்ளனர். இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால் அதன் பின்னர் இருவரும் சந்திக்கவில்லை. இந்நிலையில், முகநூல் மூலம் அண்மையில் இருவரும் மீண்டும் பேசியுள்ளனர். அப்போது தனக்கு திருமணமாகிவிட்டதாக கவுதமி தெரிவித்துள்ளார். நீ வா நாம் திருமணம் செய்து கொள்வோம் என விநாயகமூர்த்தி கவுதமியை அழைத்துள்ளார். அதற்கு கவுதமி மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்த சூழலில் கவுதமியின் கணவரைக் கொன்றால் எப்படியும் கவுதமியை அடைந்து விடலாம் என எண்ணி விஷம் கலந்த மது பாட்டிலை சதீஷ்குமாருக்கு அனுப்பியிருக்கிறார்.  இதில் யாருக்கும் சந்தேகம் வராது என நினைத்துள்ளார். ஆனால் சிக்கிக்கொண்டார்," என்றனர். இந்த கொலையில் கவுதமிக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை போலீஸார் மறுத்தனர்.

- ம.சுமன்

எடிட்டர் சாய்ஸ்