Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீங்கள் வாங்குகிற தேன் தரமானதா..? கண்டுபிடிக்க எளிய வழிகள்!

ன்னெடுங்காலமாக தேன் தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது. தேனின் மகத்துவம் என்னவென்றால்,  தானும் கெடாது, தன்னைச் சேர்ந்தவற்றையும் கெட்டுப்போக விடாமல் காத்துக்கொள்ளும். தேன், உணவுப்பொருள் மட்டுமல்ல... மகத்தான மருந்துப் பொருளும் கூட. 

தேன் என்றால் நாக்கில் வைத்தால் இனிக்கும் என்பதை மட்டுமே அறியும் சமுதாயமாக இன்றைய சமுதாயம் உள்ளது. அதிலும் நவீன குழந்தைகள், பால் எங்கிருந்து வரும் என்றால் பாக்கெட்டிலிருந்து வரும்... என்பதைப்போல தேன் எங்கிருந்து கிடைக்கும் என்றால் கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு கடைகளில் இருந்து கிடைக்கும் என்னும் நிலையே உள்ளது.  

தேன்

தேன் நமது ரத்தத்தின் மூலக்கூறுகளைப் போன்ற அமைப்பினைக் கொண்டது. அதன் வேதியியல் அமைப்புகள் மனிதனுக்கு மிக நெருக்கமாக அமையப்பெற்றுள்ளன. அதனால் உடலில்  ஜீரண சக்தி குறைந்தவர்கள்கூட இதனை உட்கொள்ளலாம்.

தேனீக்களில் மலைத்தேனீ, கொம்புத்தேனீ, கொசுத்தேனீ, இந்தியன் தேனீ, இத்தாலியன் தேனீ என பல வகைகள் உள்ளன. இதில் மலைத்தேனீ என்பது மலைப் பகுதிகளில் தேனை சேகரிக்கக்கூடியது. இன்றைக்கு இத்தாலியன் தேனீயும், இந்தியன் தேனீயும் பெருமளவில் அதற்கென உள்ள பெட்டிகளில் வளர்க்கப்பட்டு தேன் சேகரிக்கப்படுகிறது. 

தேனீ

பொதுவாக பல மலர்த் தேன் அதிகளவில் விற்பனையாகும் ஒன்று. பல மலர்த் தேன் என்பது தேனீக்கள் பல மலர்களையும், கனிகளையும் நுகர்ந்து இனிப்பினைச் சேகரித்துத் தேனாக்கித் தருவதாகும். அதேபோல் ஒருமலர் தேனும் உள்ளது. குறைந்தது சுற்றுவட்டாரத்தில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் ஏதோ ஒரே ஒரு வகையான மலர்கள் இருக்க அது ஒருமலர்த் தேன். பத்து கிலோ மீட்டர் தூரம் வரை வெறும் நாவல் மரங்களோ அல்லது வேப்ப மரங்களோ இருக்க அதிலுள்ள பூக்களை மட்டும் தேனீக்கள் சேகரிப்பது நாவல் தேன், வேம்புத்தேன் என்றெல்லாம் வகைப்படும். இவற்றின் மருத்துவக் குணங்கள், நிறம், அடர்த்தி, சுவை போன்றவை அந்தந்த மரத்தின் பூக்களைக் கொண்டு மாறுபடும். இவ்வாறு துளசித் தேன், இஞ்சித் தேன், நெல்லித் தேன், முருங்கைத் தேன் என பல வகைத் தேன் உள்ளது. 

தேனீ மகரந்தச் சேர்க்கை

எந்தக் கலப்படமும் இல்லாதத் தூய்மையான தேனில் உயிர்காக்கும் நன்மைகள் உள்ளன. பாலிஃபீனால், ஃப்ளவனாய்டுகள், புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. எல்லா இயற்கை உணவுகளுடனும் இயற்கையாகச் சேரும் தேன் பல்வேறு நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. ஜீரணச் சக்தியை அதிகரிக்கிறது, வயிறு சம்பந்தமான பல தொந்தரவுகளைத் தீர்க்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. சுரப்பிகளைச் சீராக்குகிறது. கல்லீரலைக் காக்கிறது, மலச்சிக்கல், உடல் சூட்டுக்கு நல்லது. சுவாசக் கோளாறுகளுக்கும், உடலில் ஏற்படும் புண்களுக்கும், சரும நோய்களுக்கும் நல்லது. ரத்தச் சோகையையும், உடல் பருமனையும் போக்குகிறது. 

தேனை வாயில் ஊற்றுவதோ அல்லது பருகுவதோ கூடாது. கைகளில் ஊற்றி நாவினால் நக்கியே உண்ண வேண்டும். இதுவே நேரடியாகவும், சீராகவும் ரத்தத்தில் கலக்கத் துணை புரிகிறது. பல இடங்களில் வணிகரீதியாக தேனில் பல கலப்படங்கள் செய்யப்படுகின்றன. பலவகையான இனிப்பு சிரப்புகளும், பாகுக்களும் (சர்க்கரை பாகு, வெல்லப் பாகு, சோளப்பாகு, டெக்ஸ்ட்ரோஸ் போன்றவை) இதனுடன் கலக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பலவகையான செயற்கைக் காரணிகளையும், சுவையூட்டிகள் மற்றும் மணமூட்டிகளையும் அதனுடன் கலக்கின்றனர். இவை உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

தேன்

நல்ல தேன் எது என்று வீட்டிலேயே எளிமையான  முறைகளில் பரிசோதிக்க முடியும். கட்டைவிரல் சோதனை, நீர் சோதனை,  தீப்பெட்டி சோதனை மற்றும் வினிகர் சோதனை ஆகிய முறைகளாகும். 

கட்டைவிரல் சோதனை: ஒரு துளி தேனை கட்டைவிரலில் விட அது கீழே கொட்டினாலோ அல்லது பரவினாலோ உண்மையான தேன் இல்லை என்று தெரிந்துகொள்ளலாம்.

நீர்சோதனை: ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை நிரப்பி அதில் தேனை ஊற்ற வேண்டும். ஊற்றிய தேன் தண்ணீரில் பரவினால் அது கலப்படத் தேனாகும். நேரடியாக கீழே சேர்ந்தால் உண்மையான தேன்.

தீப்பெட்டிச் சோதனை: ஒரு தீக்குச்சியை எடுத்து அதில் தேனைத் தொட்டு பற்றவைத்தால் உடனே பற்றிக்கொள்ளும், நன்கு ஜுவாலை விட்டு எரியும். கலப்படத் தேன் என்றால் எரியாது. காரணம் கட்டப்பட தேனில் இருக்கும் ஈரப்பதம் தீ எரிய விடாது.

வினிகர் சோதனை: ஒரு ஸ்பூன் தேனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அதில் இரண்டு மூன்று சொட்டு வினிகரைச் சேர்க்க அந்தக் கலவை நுரைத்தால் அது கலப்பட தேன் என்று தெரிந்துகொள்ளலாம்.

உண்மையான தேனை உண்பதன்மூலம் உடனடியாக உடலில் உள்ள நரம்பு மண்டலம் புத்துயிர் பெறுகிறது. உண்மையான தேன் உடலில் இருக்கும் புண், வடு போன்றவற்றைப் போக்குகிறது. தொடர்ந்து தேன் உண்பதால் எளிதில் அதிலுள்ள கலப்படங்களை அறியலாம். அதுமட்டுமல்லாமல் இதற்கு பல ஆய்வகச் சோதனைகளும் உள்ளன. 

தேனை மேலிருந்து கீழே ஊற்ற அவை அடியில் அப்படியே நிற்கும், உடையாமல் ஒரே நேர்கோட்டில் வரும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அதைவிட போலித் தேனிலும் இவ்வாறான தன்மைகள் உள்ளவாறே இன்றைக்கு தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் எளிதில் அறிந்துகொள்ள முடியாது.

சற்று விலை அதிகமானாலும் மலைவாழ் மக்களிடம் இருந்து கண்டிப்பாக உண்மையான தேனை அதுவும் மருத்துவக் குணங்கள் மிக்க மலைத்தேனைப் பெறமுடியும். இதனை தொடர்ந்து உண்டுவந்தால் அதன் உண்மையான சுவையையும் தன்மையையும் அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் தேனைக் கண்டறியும் அனுபவத்தைப் பெற்று பிறகு மற்ற தேன்களைப் பெற்று சோதனை செய்து உண்ணவும்.  

இறுதியாக ஒன்றைச் சொல்லியாக வேண்டும். லட்சங்களைக் கொட்டி பள்ளி கல்லூரியில் படிக்காத தேனீக்களின் தகவல் பரிமாற்றமும், கட்டுமான அமைப்பும் இந்தப் பணியில் குறிப்பிடத்தக்கது. மேனேஜ்மென்ட் என்று சொல்லப்படும் மேலாண்மை, கணிதம், ஒற்றுமை, தலைமைக்கு கீழ்ப்படிதல், திட்டமிடல், அறிவுத்திறன், தற்காப்பு, உழைப்பு, நேர்த்தி, சுறுசுறுப்பு, வானிலை மாற்றங்கள், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றைக் கண்டு அறிவியல் உலகமே வியக்கிறது. 

எல்லாவற்றுக்கும் மேலாக தேனீக்கள் நமக்கு ஒரு அற்புதமான செய்தியைத் தருகின்றன.  தேனீக்களின் கடுமையான உழைப்பில் கிடைக்கும் தேனை மனிதர்கள் திருடினாலும், இனிப்புத் துளியைத் தேனாக மாற்றும் அந்த தொழில்நுட்பத்தை இன்றுவரை மனிதர்களால் திருடமுடியவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close