Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகிலேயே விலை உயர்ந்த லூவா காபி... இனி நம் ஊரிலும் குடிக்கலாம்!

காபி பிரியரா நீங்கள்...? உலகிலேயே விலை உயர்ந்த லூவா காபியைப்  (kopi luwak) பற்றி அறிந்திருக்கிறீர்களா? ஆம் என்றவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. இந்தியாவிலேயே லூவா காபி உற்பத்தி துவங்கி இருக்கிறது. அதுவும் நமக்கு மிகவும் அருகில் உள்ள கர்நாடக மாநிலம், கூர்க்கில். ஏற்றுமதி மட்டுமல்லாமல், உள்நாட்டு விற்பனையும் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் உற்பத்தியாளர்கள்.

லூவா காபி

இந்த காபியை பற்றி அறிந்திராதவர்களுக்கு முதலில் அந்த காபியைப் பற்றி சிறு குறிப்பு. உலகின் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டு வரும் லூவா காபி தான் உலகிலேயே விலை உயர்ந்த காபி. அப்படி என்ன இந்த காபியில் ஸ்பெஷல் என கேட்கிறீர்களா? இந்த காபி தயாராகும் முறை தான் ஸ்பெஷல். 

இந்த காபி வழக்கமான முறைகளில் இருந்து மாறுபட்டு தயாரிக்கப்படுகிறது. புனுகு பூனை, மரநாய் என இருவேறு பெயர்களில் அழைக்கப்படும் Civet Cat எனும் பூனையின் கழிவுகளில் இருந்துதான் இந்த விலை உயர்ந்த காபி தயாரிக்கப்படுகிறது.

என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? உண்மை தான். இந்த பூனைகளுக்கு காபி பீன்கள் உண்ண கொடுக்கப்படுகிறது. காபி பீன்களை உண்ணும் இந்த பூனைகள், கொட்டைகளை விழுங்கிக் கொள்ளும். செரிமானத்துக்கு பின்னர் இவை கழிவுகளில் வெளியேறும். அதை எடுத்து சுத்தம் செய்தால் உலகின் காஸ்ட்லி காபியான லூவா ரெடி. வெளிநாடுகளில் பிரபலமான இந்த காபி, இப்போது இந்தியாவிலும் உற்பத்தியாகத் துவங்கி இருக்கிறது. 

காபி செடி

காபி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலகளவில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. ஆசியாவிலேயே காபி ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் 3வது இடம் இந்தியாவுக்கு தான். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை காபி உற்பத்திக்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள கூர்க் மாவட்டம் பெயர் பெற்றது. அங்குதான் இப்போது உலகிலேயே விலை உயர்ந்த இந்த காபி உற்பத்தி துவங்கி இருக்கிறது.
அதிக சத்து கொண்டது, புனுகு பூனையால் செறிவு செய்யப்பட்ட கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுவதில் உள்ள சிரமம் உள்ளிட்டவை காரணமாக இந்த காபி அதிக விலையுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இதன் தேவை அதிகளவில் இருக்கிறது. இந்த நாடுகளில் ஒரு கிலோ காபி 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கப் காபி, இந்திய ரூபாய் மதிப்பில் குறைந்தபட்சம் 1,500 ரூபாயில் இருந்து வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. 

வெளிநாடுகளில் மட்டும் பிரபலமாக உள்ள இந்த காபி தயாரிப்பு தற்போது இந்தியாவில் துவங்கி இருக்கிறது. கூர்க்கில் உள்ள கூர்க் கன்சாலிடேட் கமோடிட்டீஸ் எனும் நிறுவனம் இந்த காபி உற்பத்தியை துவங்கி இருக்கிறது.ஏற்றுமதி செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், கூர்க்கில் லூவா காபி கிடைக்கும் கடையை திறக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள். 

இது தொடர்பாக கூர்க்  கன்சாலிடேட் கமோடிட்டீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நரேந்திர ஹெப்பரிடம் பேசினோம். "சிவெட் எனும் லூவா காபியை தயாரிப்பது என முடிவெடுத்த பின்னர், துவக்கத்தில் 20 கிலோ எனும் அளவில் துவக்கினோம். கடந்த ஆண்டில் உற்பத்தி அளவு 200 கிலோவாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இந்த உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, நடப்பாண்டில் 1000 கிலோ எனும் அளவில் தயாரிக்க முடிவு செய்துள்ளோம். குறைந்த பட்சம் 500 கிலோவாவது தயார் செய்வோம். புனுகு பூனைகள் காபி செர்ரிக்களை மட்டுமே சாப்பிடும். கொட்டைகளை விழுங்கி விடும். பூனையின் வயிற்றில் இருக்கும் இயற்கை நொதிகள், காபி பீன்களின் சுவையை அதிகரிக்கச் செய்கிறது. அதனால்தான் இது தனித்துவமிக்கதாக இருக்கிறது.

புனுகு பூனை

மற்ற நாடுகளை விட இங்கு இந்த லூவா காபி தயாரிக்கப்படுவது மாறுபடுகிறது. மற்ற நாடுகளில் காபி பீன்களை இந்த பூனைகளைக் கொண்டு கட்டாயப்படுத்தி உட்கொள்ள வைக்கப்படுகிறது. ஆனால் இங்கு அப்படி அல்ல. வனத்தையொட்டிய பகுதி என்பதால் இயற்கையாகவே பூனைகள் காபி பீன்களை உட்கொள்கின்றன. இயற்கை முறையில் தயாராகிறது," என்றார்.

'லூவா காபியில் சுவை மட்டுமின்றி ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு. அல்கலாய்டு (alkaloid) ஆர்கானிக் அமிலம் (organic acid), பொட்டாசியம், மினரல், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இக்காபியில் நிறைந்திருக்கின்றன. மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும். நரம்பு தொடர்பான நோய்களையும் அண்டவிடாது. சர்க்கரை சேர்க்காமல் தினமும் 2 முதல் 4 கப் லூவா காபி குடிப்பவர்களை சர்க்கரை நோய் சீண்டாது. பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்கும். உடலுக்கு வலிமை சேர்க்கும்' என்கிறார்கள் மருத்துவர்கள். 

லூவா கொட்டைகள்

இந்த காபியின் விலை கூர்க்கில் கிலோ ரூ.8000. இதே காபி ஏற்றுமதி செய்யப்படும் போது ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளூரில் இந்த காபியை விற்பனை செய்யவும் உற்பத்தியாளர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். கூர்க் லூவா காபி எனும் பெயரில் விரைவில் கூர்க்கில் லூவா காபி விற்பனை துவங்கவிருக்கிறது. விரைவிலேயே சென்னைக்கும் வந்து விடும். படிப்படியாக தமிழகத்தின் எல்லா நகரங்களும் இந்த காப்பியை ருசிக்கலாம். அதுவும், வெளிநாடுகளில் சில ஆயிரம் ரூபாய்களுக்கு விற்கப்படும் ஒரு கப் காபி, இங்கு சில நூறு ரூபாய்களுக்கு கிடைக்கும் என்கிறார்கள்.

என்ன... உங்களுக்கு லூவா காபி குடிக்கணும் போல இருக்கா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close