Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிற சக்ரா தியானம்- கலர் கவுன்சிலிங்..! இலவசமாகக் கிடைக்கிறது பழங்கால 'நிறச் சிகிச்சை'!

ந்திய மருத்துவமுறைகள் மிகவும் பழமையானவை. 5000 ஆண்டுகளுக்கு முன்பே, இந்திய மருத்துவத்தைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள் நம் மூதாதைகள். இயற்கையின் அத்தனை அம்சங்களையும் தங்களுக்குள் அடக்கி, மருத்துவமாக்கி இருக்கிறார்கள் சித்தர்கள். அந்த சிகிச்சை முறைகள் எல்லாம் தெரபி என்ற பெயரில் நவீன வடிவெடுத்து வந்து கொண்டிருக்கிறது.  அந்த வகையில் நிறங்களை உள்ளடக்கிச் செய்யப்பட்ட  நம் பழமையான நிற சிகிச்சை. முறை தான் இப்போசு  கலர் தெரபி, குரோமோ தெரபி, கலராலஜி, லைட் தெரபி என பல பெயர்களில் புதிதாக உருவெடுத்திருக்கிறது.  இந்தச் சிகிச்சையின் மூலம் நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த நிறச் சிகிச்சை மிகச் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. 

இதுபற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் ஒய்.தீபா விரிவாகப் பேசினார்.

``இந்த உலகில் நம்மைச் சுற்றிலும் வண்ணங்கள்  நிறைந்திருக்கின்றன. நிறங்கள் சாதாரணமாகப் படைக்கப்பட்டவை அல்ல. ஒவ்வொரு  நிறங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தன்மைகள் உள்ளன. மேலும் கோள்களில் பூமிக்கு மட்டுமே நிறங்கள் உண்டு. வண்ணங்கள் மனித உடலைத்   தூண்டுவதுடன் அமைதிப்படுத்தவும் உதவுகிறது. உடலின் ஒவ்வொரு பகுதியும் முறையாக இயங்க வண்ணங்களே காரணமாக இருக்கின்றன.

நிறச் சிகிச்சை

உடல், மனம், உணர்ச்சி அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட நிறங்கள் மிகவும் அவசியம். அந்த அடிப்படையில் உடலும் மனமும் சிறப்பாகச் செயல்பட இந்த நிற சிகிச்சை பயன்தரும். மருந்தில்லா மருத்துவமான இந்த சிகிச்சையில் சூரிய ஒளி முக்கியப் பங்கு வகிக்கிறது. வெளிப்பார்வைக்கு சூரிய ஒளி வெள்ளை நிறத்தில் காணப்பட்டாலும் அது எல்லா நிறங்களையும் தன்னுள் அடக்கி வைத்துள்ளது. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தன்மை உள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள நிறத்துக்கு அதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ஸ்தான் காரணம் என்பது முக்கியம். அதனதன் நிறத்துக்கு ஏற்ப அவை செயல்பாட்டைக் கொண்டுள்ளன.

'லைக்கோபீன்' என்ற பைட்டோ நியூட்ரியன்ஸ் இருப்பதால்தான் தக்காளி சிவப்பு நிறமாக உள்ளது. இது புத்துணர்ச்சி தருவதுடன் ரத்தத்தைச் சுத்திகரிக்கவும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் உதவுகிறது. வெள்ளைப்பூண்டு மற்றும் வெள்ளை வெங்காயத்தில் 'ஆந்த்ரோசைனன்' என்ற சத்து உள்ளது. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 

கேரட், ஆரஞ்சு போன்ற ஆரஞ்சு நிற உணவுப் பொருட்களில் பீட்டாகரோட்டின், வைட்டமின் `சி' அதிகம் உள்ளன. அவற்றைச் சாப்பிடுவதால்  பார்வைக் குறைபாடுகளைத் தடுக்கலாம். மேலும்  இது புற்றுநோய் வராமல் தடுக்கும். உடலில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தி சீராக வைக்க உதவும். மஞ்சள் நிறக் காய்கறிகள் மற்றும் பழங்களில் கரோட்டினாய்டு சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தின்போது வைட்டமின் `ஏ' வாக மாற்றப்படுகிறது. இது கண் பார்வையை மேம்படுத்த உதவும். துளசி, புதினா, கீரைகள் போன்ற பச்சை நிறத் தாவரங்களில் குளோரோபில் அதிகம் இருப்பதால் அவற்றை சாப்பிடுவதால் கழிவுகள் எளிதாக வெளியேறும். இதுபோல் ஒவ்வொரு நிறங்களிலும் உள்ள காய், கனிகளுக்கும் ஒவ்வொரு சத்து, ஒவ்வொரு தன்மை உள்ளது.

உடலானது எந்திரம் போன்றது. அதில் கோளாறு ஏற்பட்டால் அது ஏதாவது ஒருவகையில் வெளிப்படும். உடலில் கழிவுகள் அதிகமானால் சூடு அதிகரிக்கும். அதைத்தான் `காய்ச்சல்' என்கிறோம். அந்தச் சூழலில், மருந்துகள் எடுத்துக் கொள்வதால் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளேயே தங்கிவிடும். மாறாக, கழிவுத் தேக்கம் இல்லாதவர்களின் உடலில் எந்தப் பருவநிலை மாற்றமும் காய்ச்சலையோ சளியையோ ஏற்படுத்தப்போவதில்லை. ஆகவே, காய்ச்சல் வந்தால்  இயற்கை மருத்துவ முறையில் முதலில் கழிவுகள் அகற்றப்பட வேண்டும். அப்படிக் கழிவுகளை அகற்றினாலே காய்ச்சல் படிப்படியாகக் குறைந்துவிடும். ரத்தச்சோகை இருப்பவர்களுக்கு சிவப்பணுக்கள் குறைந்திருக்கும். அவர்களது நாக்கு, கண், நகம் போன்றவை வெளிறிக் காணப்படும். 

மஞ்சள்காமாலை நோய் பாதித்தவர்களின் நாக்கு, கண், தோல், நகம் போன்றவற்றில் மஞ்சள் நிறம் காணப்படும். இதையடுத்து சிறுநீரும் மஞ்சள் நிறமாக வெளியேறும். இதைத்தான் மஞ்சள் காமாலை என்கிறோம். ஆக ஒருவரின் நாக்கு, முகம், நகம் போன்ற உறுப்புகளைக் கண்காணிப்பதன் மூலம் அவருக்கு என்ன நோய் பாதித்திருக்கிறது என்று சொல்லிவிட முடியும். 

தூக்கமின்மை, மலச்சிக்கல், கொலஸ்ட்ரால் தொந்தரவு போன்ற பிரச்னைகளையும் இதுபோன்ற அறிகுறிகளை வைத்தே கண்டுபிடித்து விடுவோம். மாதவிடாய்க் கோளாறு இருந்தால் முகப்பரு, உடல் எடை அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். முகத்தில் முடி வளர்ந்தால் அவருக்கு ஹார்மோன் கோளாறு இருக்கிறது என்று பொருள்.  இதுபோன்று அறிகுறிகளை வைத்தே ஒருவருக்கு என்ன நோய் பாதித்திருக்கிறது என்று சொல்லிவிட முடியும். முடியாதபட்சத்தில் நாடி பார்த்துச் சொல்வோம். அதன்பிறகு நோய்க்க்கேற்ப சிகிச்சை அளிப்போம்.

நிற சிகிச்சை

 

நிற சிகிச்சையில் சூரிய சக்தி பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள், சிவப்பு என பல்வேறு வண்ணங்கள் கொண்ட கண்ணாடி பாட்டில்களில் நீர் நிரப்பி சூரிய ஒளி படும்படி வைப்போம். அப்போது சூரிய சக்தி பாய்ச்சப்பட்ட அந்த பாட்டில்களின் நிறத்துக்கு ஏற்ப அவற்றின் தன்மை மாறுபடும்.  சிவப்பு நிற பாட்டில் தண்ணீரை அருந்துவதால்  ரத்த ஓட்டம் சீராகும், உடல் வலிகளைப் போக்கும்.  நீல நிற பாட்டில் தண்ணீரை அருந்தினால் ரத்தக் கொதிப்பு சீராவதுடன் வெப்பநிலை இயல்பு நிலைக்கு வரும். இதுபோன்று ஒவ்வொரு பாட்டிலின் நிறத்துக்கு ஏற்ப அதன் தன்மை மாறுபடும்.

பச்சை நிற பாட்டில் தண்ணீரைக் குடித்தால் கபம் வெளியேறி சளித்தொல்லைகள் நீங்கும். மஞ்சள் நிற பாட்டில் தண்ணீரைக் குடித்தால் எளிதாக மலம் வெளியேறும். ஆனால் இதை மருத்துவரின் பரிந்துரையின் பேரிலேயே செய்ய வேண்டும். மேலும் சூரிய ஒளியில் இத்தனை மணி நேரம் வைத்திருந்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஒரு நியதி உள்ளது. அதைப் பின்பற்றினால்தான் உரிய பலன் கிடைக்கும். நிறம் பொருந்திய பாட்டில்களில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயை ஊற்றி சூரியக்கதிர்கள் படும்படி வைத்து எடுக்க வேண்டும். அந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால் வலி போன்ற பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும். 

ஒற்றைத் தலைவலி இருந்தால் நாடி பிடித்துப் பார்த்து அதற்கேற்ற நிறங்களைப் பார்க்கச் சொல்வோம். இல்லையென்றால் கண்களை மூடிக்கொண்டு அந்த நிறத்தை நினைத்துப் பார்க்கச் சொல்வதுடன் மூச்சுப்பயிற்சி செய்யச் சொல்வோம். இதனால் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும். 

நிறச் சிகிச்சை

நிற சக்ரா தியானம் மூலமும் நோய்களில் இருந்து விடுதலை பெறலாம். நமது உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு நிறத்தில் இருக்கும். யாருக்கு எந்த நிறம் பொருந்துகிறதோ அதைக் கொண்டு அவர்களது பிரச்னையை சரி செய்வோம். ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ளவர்களை ஆரஞ்சு நிற சக்கரத்தைக் கொண்டு தியானம் செய்யச் சொல்வோம். 

நிற சிகிச்சையில் மனோரீதியாகவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடி பிடித்துப் பார்த்து அவர்களது  மன நிலை  மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களைக் கண்டறிவோம். பலருக்கு தங்களது எதிர்மறை குணங்கள் தெரியாது. அதற்கேற்ப கலர் கவுன்சிலிங் கொடுப்போம். உதாரணமாக ஒழுங்காகப் படிக்காதக் குழந்தைகளை மஞ்சள் நிற உடை உடுத்தச் சொல்வதன்மூலம் அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவோம். தொழிற்சாலைகளில் ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று சொல்வார்கள். அதுபோன்ற சூழலில் அவர்களை நீல நிற உடை உடுத்தச் சொல்லி அவர்களிடம் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

சிலருக்கு சிவப்பு நிறம் பிடிக்கும்; அப்படிப்பட்டவர்களிடம் பாசிட்டிவ் எனர்ஜி, சுறுசுறுப்பு காணப்படும். ஆனால் அவர்கள் திடீரென கோபப்படுவதுடன் மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள். மனதில் பட்டதை உடனே வெளிப்படுத்தி விடுவார்கள். எவருக்கும் பயப்பட மாட்டார்கள். அவர்களை நிறத்தை மாற்றும்படி சொல்வதன்மூலம் அவர்களது எதிர்மறை குணங்களை மாற்றச் செய்வோம். ஊதா, பச்சை என சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றச் சொல்வோம். இதன்மூலம் அவர்களது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மன அழுத்தம் உள்ளவர்களுக்கு கறுப்பு நிறம் பிடிக்கும். அதிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வர அவர்கள் வாழும் சூழல், இடம், பொருள் போன்றவற்றை மாற்றும்படி செய்து அவர்களது மன அழுத்தத்தைப் போக்குவோம்'' என்றார்.

இதுபோன்று எளிய நிற சிகிச்சையின் மூலம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த முடியும். அதேவேளையில் இயற்கை மருத்துவத்தின் மற்ற முறைகளையும் சேர்த்துக் கொண்டால் சிறப்பான பலன் கிடைக்கும்..." என்கிறார் அவர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close