Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் கூந்தல் எந்த வகை?

க அழகே, புற அழகு என்று சொல்வதில் உண்மை இருந்தாலும், சத்துள்ள உணவுகளை சாப்பிட்டாலும் வெளிப்புறத்தில் படிந்திருக்கும் மாசுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உணவை மட்டுமே நம்பியிருப்பது பலனளிக்காது. கூடுதலாக அழகு பராமரிப்பும் அவசியம்.

‘‘கூந்தலுக்கு பயன்படுத்தும் ஷாம்பூ முதல் பாத க்ரீம் வரை செயற்கை அழகை நாடி செல்பவரே அதிகம். அதனால்தான் அழகு பொருட்கள் வாங்குவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தினசரி பயன்படுத்தும் செயற்கை அழகிலிருந்து 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் நம் உடலில் சேருகின்றன. செயற்கை பொருட்களை அறவே தவிர்த்து, இயற்கை பொருட்களை கொண்டு பலனடைவதே சிறந்த வழி” - என்கிற சித்த மருத்துவர் நிஷா, தலைமுடி பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் பற்றி விளக்குகிறார்.

முடியில் மூன்று வகை

ஒவ்வொருவரும், தங்களுடையது எந்த வகை முடி என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

* ஸ்கால்ப்பும், முடியும் எண்ணெய் பிசுக்குடன் இருந்தால் எண்ணெய் பசை நிறைந்த கூந்தல்.

* ஸ்கால்ப்பும் முடியும் வறண்டு இருந்தால் வறண்ட கூந்தல்.

* ஸ்கால்ப் மட்டும் எண்ணெய் படர்ந்து முடி வறண்டு காணப்பட்டால், அது வறண்ட கூந்தலில் அடுத்த வகையான எண்ணெயும் வறட்சியும் சேர்ந்த கலவையான கூந்தல்.

எண்ணெய் பசை கூந்தல்

மரபியல் பிரச்னை, சுகாதாரமின்மை, ஹார்மோன் பிரச்னை, ஊட்டச்சத்து குறைவு, விட்டமின் பி2 குறைவு, போதிய ஃபேட்டி அமிலங்கள் இல்லாதது, ரிபோப்லோவின் குறைபாடு, பயன்படுத்தும் எண்ணெயின் எதிர்மறை விளைவுகள் போன்றவற்றால் எண்ணெய் அதிகமாக வழியும். ஹார்மோன் சம்பந்தப்பட்ட மருந்துகள், தைராய்டு, ஹைப்போ தைராய்டு மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள் கூட எண்ணெய் வழிதலுக்கு காரணமாகும். சில பெண்களுக்கு வயதுக்கு வரும் முன்னபே ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன் சுரப்பி அளவுகடந்து சுரப்பதால் எண்ணெய் பிசுக்கான கூந்தல், முகத்தில் பருக்கள், கால், கைகளில் எண்ணெய் பசை, முகம் மற்றும் மர்ம பகுதிகளில் மீசை தாடி என அதிகமாக முடி வளரும்.

இந்த வகை கூந்தல் உள்ளவர்களுக்கு ஸ்கால்பிலிருந்து அதிகமான சீபம் (sebum) வழிவதால் எண்ணெய் பிசுக்காக இருக்கும். உடலில் அதிகமாக சுரக்கும் சீபத்தை எண்ணெய் என்கிறோம். ஃபேட்டி அமிலங்களும் (Fatty acid), இறந்த செல்களும் சேர்ந்து சீபமாக உருவாகிறது. இப்படி உடலில் சீபம் அதிகரிப்பதால் பொடுகு, சிக்கு பிடித்த முடி, ஸ்கால்ப்பிலிருந்து துர்நாற்றம் அடிக்கும். தலையில் சீப்பை அழுத்தி வாருவதால் ஸ்கால்ப்பிலிருக்கும் எண்ணெய் தூண்டி மிக அதிகமாக எண்ணெய் சுரக்க தொடங்கிவிடும். இவர்களின் முடி பார்ப்பதற்கு மெலிதாக வளைவுகள் இல்லாமல் எண்ணெயுடன் காட்சியளிக்கும்.

கண்டிஷனரை பயன்படுத்தவே கூடாது. வாரத்தில் ஒரு முறை தலைகுளித்தால் போதும். தினமும் தலைக்கு குளிக்கக் கூடாது. ரசாயனங்களை தவிர்ப்பது நல்லது. ஆப்பிள் சிடர் வினிகர், தண்ணீர் (1:4) கலந்து 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரில் கூந்தலை அலசலாம். அதேபோல, எலுமிச்சை சாறுடன் தண்ணீர் (1 லெமன், 1 கப் நீர்) கலந்து குளிக்கலாம். இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் எண்ணெய் பசை நீங்கிவிடும். கீரின் டீ 2 ஸ்பூன், தண்ணீர் 1 கப் கலந்து குளித்து வந்தால் க்ரீன் டியில் உள்ள டேனிக் அமிலம் ஸ்கால்ப்பில் எண்ணெய் சுரப்பதை தடுக்கும். சோள மாவை உப்பு தூவும் டப்பாவில் போட்டு முடி முழுவதும் தலையில் தூவி பரவ செய்து, சீப்பால் தலைமுடியை வார வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து அலசலாம். முட்டையின் வெள்ளை கருவில் புரதம் இருப்பதால் இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது.

ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த ஆளிவிதை, வால்நட், மீன், கேரோட்டீன் நிறைந்த கறிவேப்பிலை, பொண்ணாங்கண்ணி கீரை, அயோடின் உணவுகளான யோகர்ட், பால், முட்டை, ஸ்டாபெர்ரி. கால்சியம் நிறைந்த எள்ளு, கீரை, பால், பாதாம், சிலிக்கான் அடங்கிய ப்ரவுன் அரிசி, பார்லி, வெள்ளரி, முள்ளங்கி, தக்காளி, வேர்க்கடலை. மெக்னீஷியம் சத்துக்கள் நிறைந்த பூசணி விதை, பசலை கீரை, சோயாபீன்ஸ், எள்ளு, முந்திரி, துத்தநாகம் நிறைந்த மட்டன், பயறுகள், மக்கா சோளம், கொட்டைகள், பால் பொருட்கள் போன்ற வகை உணவுகள் எல்லாம் முடி வளர்வதற்கும், மெதுவாக வளர்வதை தடுத்து வேகமாக வளர செய்யவும், புதிய செல்களை வளர்வதற்கும் உதவி புரிகின்றன. இவை அனைத்தும் எண்ணெய் பசையை நீக்கி இயற்கையான பளபளப்பை தரவல்லவை.

வறண்ட கூந்தல்

தலைமுடி படியாமல் எந்த ஹேர் ஸ்டைலுக்கும் பொருந்தாதவாறு பொலிவற்று இருக்கும். க்ளோரின் அதிகமாக சேர்க்கப்பட்ட தண்ணீரில் குளித்தல், சூரிய ஒளி நேரடியாக கூந்தலில் படுதல், அதிக காற்று மற்றும் மாசடைந்த காற்றில் கூந்தல் நேரடியாக படுதல், ரசாயன சிகிச்சைகளான ஸ்ட்ரெயிட்டனிங், பர்மிங், கலரிங் செய்து கொள்ளுதல், ஆல்கஹால் நிறைந்த சிகிச்சைகள் செய்து கொள்ளுதல் போன்ற காரணங்களால் கூந்தல் வறட்சியாக மாறிவிடுகிறது. சீப்பால் வாரும் போது முடி உடைவதும், அடி முடியில் பிளவுகள் ஏற்படுவதும் இதன் அறிகுறிகள். மேலும் உடலில் ‘ஹைப்போ பேராதைராய்டு’ பிரச்னை இருந்தாலும், அயோடின் குறைவதாலும் கூந்தல் வறண்டு போகலாம்.


செக்கில் ஆட்டி எடுக்கும் தேங்காய் எண்ணெய் வறண்ட கூந்தலுக்கு நல்ல பலனைத் தரும். கட்டாயமாக வாரம் இருமுறை தலைக்குளிப்பது நல்லது.

மூக்கூட்டு எண்ணெய் என்கிற பசு நெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சம அளவில் தலையில் தடவி தலைக்கு குளித்தால் கூந்தல் மிருதுவாகும். முட்டையில் உள்ள மஞ்சள் கருவை கூந்தலில் தடவினால், அதில் உள்ள ஃபேட்டி அமிலங்கள் தலைமுடியில் இயற்கையான எண்ணெயைச் சுரக்க செய்யும். அடிக்கடி தலைவாருவது நல்லது. ஆனால் இறுக்கி பிடித்த மாதிரி ஹேர் ஸ்டைலை செய்யக் கூடாது. இறுக்கி பிடித்தால் முடியில் வரக்கூடிய இயற்கையான எண்ணெயை தலைமுடி முழுவதும் பரவ செய்யாமல் தடுத்துவிடும்.

முட்டையின் மஞ்சளுடன் ஆலிவ் எண்ணெய்யை சம அளவு கலந்து 40 நிமிடம் கழித்து கூந்தலை அலசலாம். கற்றாழை சதை பகுதியும் தேங்காய் எண்ணெய்யும் சேர்த்து தடவும் போது தலைமுடியில் பளபளப்பு கூடும். சந்தன எண்ணெய்யை தடவி 40 நிமிடங்கள் கழித்து அலசலாம். அயோடின் உணவுகளான யோகர்ட், பால், முட்டை, ஸ்டாபெர்ரி. கால்சியம் நிறைந்த எள்ளு, கீரை, பால், பாதாம், ஒமேகா-3 நிறைந்த ஆளிவிதை, வால்நட், பீன்ஸ், மீன், ஆலிவ் எண்ணெய், முளை கட்டிய பயிர்கள் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மெண்மையான பளபளப்பான முடியாக மாறுவது உறுதி.

வறண்ட கூந்தலும் எண்ணெய் பசையான ஸ்கால்ப்பும்

சிலருக்கு எண்ணெய் வழிந்த ஸ்கால்ப்புடன், வறண்ட முடியும் இருக்கும். சீபம் சுரந்து தலைமுடி முழுவதும் பரவாமல் இருப்பதே இதற்கு காரணம். இதை ஹைபர் செப்போரியா (Hyperseborrhea) என்று சொல்வர். இது ஸ்கால்ப்புக்கும் முடிக்கும் இடையில் உள்ள இயக்கத்தின் குறைப்பாடாகும். வறண்ட கூந்தலுக்கு சொன்ன தீர்வுகளை இவர்களும் கடைப்பிடிக்கலாம்.

செயற்கை ஷாம்புகளை தவிர்த்து இயற்கையான முறையில் தலையை அலச வேண்டும். இயற்கையான முறையில் கூந்தலை பராமரிக்க, கரிசாலை, சந்தன சிராய், கிச்சலி கிழங்கு, பூங்கன் கொட்டை, பூந்திக் கொட்டை இவற்றை தலா 50 கிராம் எடுத்து, அதனுடன் சிகைக்காயை கூடுதலாக சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். இதை வைத்து தலைக்கு குளிக்கலாம். உணவில் கறிவேப்பிலை, வெந்தயம், பால், பருப்பு வகைகள், முட்டை, மீன், காளான், ஆரஞ்சு சேர்த்துக் கொள்வது ஸ்கால்ப்புக்கும் முடிக்கும் இடையில் உள்ள சமநிலையில்லாத பிரச்னையை சீராக்கும்.

உணவையும், பராமரிப்பும் முறையாக மேற்கொள்வது ஆரோக்கியத்தை, இயற்கை அழகையும் தரும்.

-ப்ரீத்தி,


படங்கள்: ர.சதானந்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ