Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹை பிட்ச் சத்தம் தொண்டைக்கு சிக்கல்!

''தொண்டத் தண்ணி வத்தக் கத்திட்டிருக்கேன்... கேக்கறாங்களா பாரு!’’ என்று வீட்டில் அம்மாவும், என்னதான் கத்தினாலும் உங்க மண்டையிலே ஏறவே ஏறாதா?’’ என்று பள்ளியில் ஆசிரியரும் புலம்புவதைக் கேட்டிருப்போம். இப்படி அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம். ஆனால், அவற்றிலும் உண்மை இல்லாமல் இல்லை. அதிகமாகவோ, தொடர்ந்தோ கத்திக்கொண்டே இருந்தால், தொண்டையும், குரல்நாணும் மோசமாகப் பாதிக்கப்படுவது நிஜம்.

'சின்னச் சின்ன ஆசை' பாடலின் மூலம் புகழின் உச்சியைத் தொட்ட பிரபலப் பின்னணிப் பாடகி மின்மினி, தற்போது கொச்சினில் இசைப்பள்ளி ஒன்றை நடத்திவருகிறார். தேனொழுகும் குரலால், தமிழ் திரையுலக ரசிகர்களை உற்சாகப்படுத்திய மின்மினிக்கு, திடீரென்று ஒருநாள் குரல் வராமல் போனது. கணவர் துணையுடன், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்களிடம் காட்டியும் எந்த பிரயோஜனமும் இல்லை. ஆனால், திடீரென்று ஒருநாள் குரல் எப்படிப் போனதோ, அதே போல எந்தவிதமான பிரயத்தனமும் இன்றி, மீண்டும் திரும்ப வந்தது.

''ஒரு பயங்கரமானக் கனவு மாதிரிதான் இருக்கு. ரஹ்மான் சார் இசையில் 'பச்சைக்கிளி பாடும் பாட்டு' பாடல்தான் என்னோட கடைசிப் பாடடு. 1992ல் லண்டன்ல ஒரு மேடை நிகழ்ச்சியில் பாடிட்டிருந்தப்ப, திடீரென என்னால பாட முடியாமப் போச்சு. அதுக்கப்புறம் ஆறு மாசம் வாழ்க்கையே வெறுமைதான். எனக்கு எந்த நோயோ, அறிகுறியோ இல்லை. ஆனா, திடீர்னு ஏன் பேச முடியாமப் போச்சுன்னு இப்ப வரைக்கும் தெரியலை. எக்கச்சக்க ட்ரீட்மென்ட்.

அமைதியில் கழிந்த அந்த வருஷங்களில் வாழ்க்கையைப் பத்தி நிறையப் புரிஞ்சுக்கவும், யோசிக்கவும் முடிஞ்சது. ஓர் அற்புதம் போல, 1995ல் திரும்பவும் பேச்சு வந்தது. குரலுக்குன்னு தனிக் கவனிப்பு இல்லேன்னாலும், குரல் போறதுக்கு முன்னாடியும் சரி, இப்பவும் சரி... ஐஸ்கிரீம், ஐஸ் வாட்டர் மாதிரி குளிர்ச்சியான பொருட்களைத் தொடுறது இல்லை’’ என்றார் மின்மினி.

தொண்டையின் மையப்பகுதியில் அமைந்து இருக்கும் உறுப்பு, குரல்வளை. ஒருவரின் அடையாளங்களுள் ஒன்றாக இருப்பது குரல். பாடகர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், அறிவிப்பாளர்கள் போன்றவர்களுக்கு மூலதனமும் அதுதான். தொடர்ந்து குரலை அதிக அளவில் உபயோகிப்பவர்களுக்கு குரல் நாண் (Vocal cord) பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

‘‘ஒருவருக்குக் குரல் நாணில் முடிச்சு வந்தால், குரல் கரகரப்பாகி, பேசுவதற்கு சிரமமாக இருக்குமே தவிர, மின்மினிக்கு போனதுபோல ஒரேயடியாகக் குரல் போய்விடாது. மின்மினிக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. நரம்பியல்ரீதியான பிரச்னையாகக்கூட இருக்கலாம். ஆனால், குரலுக்கு அதிகம் வேலை கொடுப்பவர்கள் குரல் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நம் ஒவ்வொருவருக்குமே குரலில், ஒரு குறிப்பிட்ட அலைவரிசை உள்ளது. அந்த அலைவரிசை ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. ஒரு விநாடிக்கு எத்தனை அலைவரிசை என்பதைப் பொறுத்துதான், நம்முடைய 'சுருதி’ (Pitch) அமையும். குரல்நாணின் முன்பகுதியும், பின்பகுதியும் இணையும் இடம்தான் மிகவும் முக்கியம். ஆபத்தான இடமும் அதுதான். எளிதில் பாதிப்படையக்கூடிய பகுதி. குரல் உயர்த்திக் கத்தும்போது, குரல்நாண் பாதிக்கப்படும்.

குரல் நாண் பாதிப்புக்கு உள்ளாகும்போது, முதலில் லேசாக ரத்தக்கசிவு இருக்கும். இது வெளியே தெரியாது. உள்ளேயே ரத்தக் கசிவு ஏற்படும். கசியும் ரத்தம், துளித்துளியாகச் சேர்ந்து ஒரு முடிச்சு (nodule) போல் உருவாகும். குரலை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு வரும் இந்தப் பிரச்னையை, 'டீச்சர்ஸ் நாடியூல்' மற்றும் 'சிங்கர்ஸ் நாடியூல்' என்று அழைப்பார்கள். இந்த முடிச்சு உருவானால், குரல் கரகரப்பாகும். அதுதான் முதல் அறிகுறி.

குரல் கரகரப்பு வந்த முதல் நாளிலேயே வித்தியாசத்தை உணர்ந்து, உடனே குரலுக்கு ஓய்வு கொடுத்துவிட வேண்டும் (Voice rest). அப்படியே கவனிக்காமல் ஒரு வாரம், 10 நாட்களுக்கு விட்டுவிட்டால், பேசவே சிரமம் ஆகி மருத்துவரிடம் போக வேண்டியதுதான்.  சிலருக்கு ஏதேனும் நோய்த்தொற்று அல்லது ஒவ்வாமை இருந்தாலும், குரல்நாண் தடித்துவிடும். மழைக்காலத்தில் நிலவும் சீதோஷ்ணமும் ஜில்லென்ற உணவுப்பொருட்கள் பானங்களாலும்கூட குரல்நாண் பாதிக்கப்படும்” என்கிறார் மூத்த ஈ.என்.டி. நிபுணர் டாக்டர் பாலகுமார்.

குரலைப் பாதுகாக்க....

* கத்திப் பேசக் கூடாது. மௌனத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

* சளிப் பிரச்னை ஏற்படாதவாறு உடலைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* அதிகக் காரமான, மசாலா நிரம்பிய, அதிகம் குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

* சந்தடி மிகுந்த  இடங்களில் பேசுவது தொண்டைக்குக் கூடுதல் அழுத்தத்தைத் தரும். கூச்சலிடுவது, அலறுவது அனைத்துமே தொண்டையைப் பாதிக்கும் செயல்தான்.

* தொண்டை கமறும்போது, கனைக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, தண்ணீர் குடிக்கலாம். தொண்டை பாதிக்கப்பட்டிருக்கும்போது, வெதுவெதுப்பான நீரை அடிக்கடி அருந்த வேண்டும். தண்ணீரில் சீரகம் போட்டுக் கொதிக்கவைத்து, இளஞ்சூட்டில் அருந்துவது நல்லது.

* மிகவும் குளிரூட்டப்பட்ட இடங்களில் இருப்பதோ, வெப்பமான சூழலில்  இருப்பதோ, தொண்டையைப் பாதிக்கும்.

* தொண்டை பாதிக்கப்பட்டவர்கள், 'சத்தமாகத்தானே பேசக் கூடாது... மெதுவாகப் பேசினா என்ன?’ என்று நினைத்து, தொண்டை பாதிக்கப்பட்ட சிலர், குரலைத் தாழ்த்தி, கிசுகிசுப்பாகப் பேசுவார்கள். அது, இன்னும் மோசமான பாதிப்பைத்தான் தரும். 'வாய்ஸ் ரெஸ்ட்’ என்றால், முழுமையான ஓய்வு தேவை.

டென்ஷன் ஆகிக் கத்துறதை கொஞ்சம் குறைச்சுக்குங்க பாஸ்!

- பிரேமா நாராயணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close