Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10 ரூபாய்க்கு மருத்துவம்: ஆச்சர்யமூட்டும் மருத்துவர் ராமசாமி!

'10 ரூபாய்க்கு என்ன கிடைக்கும்?' ஒரு சோப், ஒரு கிலோ காய்கறி வாங்குவது கூட இன்று சாத்தியமில்லை. ஆனால், தென்காசி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 10 ரூபாயில் தரமான மருத்துவ உதவியே கிடைத்து விடுகிறது. 5 நிமிடம் பார்க்கவே, 500 ரூபாய் வசூலிக்கும் மருத்துவர்களிடையே, சேவை மனப்பான்மையோடு, அனைத்து நோயாளிகளுக்கும் மனம் கோணாமல் சிகிச்சை அளிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ராமசாமி. ‘இவரிடம் சென்றால், நோய் குணமாகிறது’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும், ‘ராசியான மருத்துவர்’என்ற பட்டப் பெயரையும் பெற்று வருகிறார்.

தென்காசி, வாய்க்காப்பாலம் அருகில் உள்ள அவரது கிளினிக்குக்குச் சென்றோம். இரண்டு சிறிய அறைகள். தென்காசி அரசு மருத்துவமனையில் அவர் பணிபுரிந்த காலத்தில் இருந்து, சுமார் 32 வருடங்களாக, இதே இடத்தில்தான் மருத்துவம் பார்க்கிறார். ஒரு நாளைக்குச் சுமார் 50 முதல் 100 நோயாளிகள் வந்து கொண்டே இருக்கின்றனர். தொடர்ந்து வரும் நோயாளிகளை மிகுந்த சிரத்தையுடன் அணுகுகிறார்.

‘வணக்கம் டாக்டர்’ என்று நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், ''என்னைத் தேடி நோயாளிகள்தான் வருவாங்க... நோய்க்கு மருத்துவம் சொல்ற டாக்டர் விகடனே... என்னைப் பார்க்க வந்திருக்கிறதை நினைச்சா ரொம்பச் சந்தோஷமா இருக்கு. ஆனா, கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணனும்... ஆரோக்கியமானவங்க... காத்திருக்கலாம். நோயாளிகளைக் காக்க வைக்கக்கூடாது இல்லையா” என்றார். காத்திருந்து அவரிடம் பேசினோம்.

“நான் டாக்டர் ஆவேன்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. விவசாயக் கல்லூரியில் சேர்ந்து, படிப்புல நிறைய மார்க் எடுத்தேன். மருத்துவப் படிப்புக்குச் சீட் கிடைச்சது. மேற்படிப்பு படிக்க ஆர்வம் இருந்ததால் படிச்சேன். பால்வினை நோய் சிறப்பு மருத்துவர் ஆனேன். பெரிய நகரங்கள் அளவுக்கு, பால்வினை நோய் பற்றி, இந்த ஊர்ல யாரும் வெளியில் சொல்றதில்லை. தெரிஞ்சு வர்றவங்க கொஞ்சம் பேர்தான். அவங்களுக்கும் பார்க்கிறேன். அதனால, எல்லாருக்குமே பொதுமருத்துவம்தான்.

இந்த மக்களிடம் சிகிச்சை அளிக்கிறப்ப, ஒரு பின்னடைவு ஏற்படுகிறது. அதுக்கு, மக்களோட அறியாமைதான் காரணம். தொக்கம் எடுக்கிறது, பார்வை பார்க்கிறது, குழந்தைக்குக் குளிப்பாட்டும்போது சளி எடுப்பது, இதெல்லாம் எதுவும் மாறவே இல்லை. நேற்றுகூடப் புதுசா ஒருநோயாளி வந்தார், அவருக்குத் தையல் போட முடியாத அளவுக்குப் பெரிய காயம். அந்தக் காயத்துக்குத் தையல்போடவும்கூடாது. நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கலை. எனக்குத் தெரியாமலேயே, மருந்து கடைக்குப் போய்த் தையல் போட சொல்லிருக்கார். அவங்க முடியாதுன்னு சொல்லவும் வேற இடத்துக்குப் போயிட்டார்.

அதேபோல, மஞ்சள் காமாலை வந்தால் இந்தப் பகுதி மக்கள் காரையாறுக்குதான் முதல்ல போவாங்க. அப்புறம்தான் டாக்டர் கிட்டயே வருவாங்க. அறியாமை என்பது ரத்தத்துலேயே ஊறிப்போயிருக்கு.
என் கிட்ட வர்ற பேஷண்டுக்கு மேற்சிகிச்சை தேவைப்பட்ட்டால், அவர்களின் பாக்கெட்டை கடிக்காத அளவுக்கு, நானே பேசி, சிறந்த டாக்டர்கிட்ட அனுப்புவேன்" என்கிறார் டாக்டர்.

மேலும், டாக்டர் ராமசாமி, தென்காசியில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிய போது, 40 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் எனச் சரியாக யூகித்து, திருநெல்வெலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறார்.

ஊரில் பரவும் நோயை கட்டுப்படுத்துவதிலும், நோயாளியின் நோயை சரியாக யூகித்து, முறையான சிகிச்சைஅளிப்பது என ஒரு திறமையான மருத்துவராக மட்டுமில்லாமல் நோயாளியின் மனதை புரிந்து கொள்ளும் மன நல ஆலோசகராகவும் திகழ்கிறார். இந்தக் காலத்தில் 10 ரூபாய்க்கு மருத்துவம் எப்படிச் சாத்தியம்? என்று கேட்டால்...

''சாப்பாட்டுக்குகூட வழியில்லாத சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் வளர்ந்தேன். என்னைப்போல இருக்குறவங்களுக்கு உதவனும்னு நினைசேன். 10 ரூபாயே அதிகம் தான். 1, 2, 5 ரூபாய்கூட வாங்கிட்டு இருந்தேன். நான் இலவச மருத்துவம் பார்க்கவும் தயார். ஆனால், எனக்குக் கீழே வேலை பார்க்கிறவங்களையும், அப்படி இருக்கச் சொல்ல முடியாதே. கட்டட வாடகை, மின்சாரக் கட்டணம், எனக்கு உதவியா இருக்கிறவங்களுக்குச் சம்பளம்னு எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டி இருக்கறதால 10 ரூபாய் வாங்கறேன். ஒரு மருத்துவமனை கட்டி அதுல 1 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கனும், மருந்தெல்லாம் நியாயமான விலையில் கொடுக்கனும்னு ஆசை. அது முடியாத காரியங்கிறதால, என்னால முடிஞ்சதை பண்ணிட்டு இருக்கேன். நிறைய நல்ல மனிதர்களைச் சம்பாதிச்சிருக்கேன். ரொம்பத் திருப்தியா சந்தோஷமா இருக்கேன்'' என்றார்.

இங்குள்ள பலராலும் சொல்லப்படும் கருத்து, “இவர் எங்க குடும்ப மருத்துவர். எங்க குடும்பத்துல யாருக்கு என்ன பிரச்னைன்னு வந்தாலும் உடனே, இவர்கிட்ட தான் ஓடிவருவோம். சட்டுன்னு சரியாயிடும். எங்க தென்காசி ஊர் ஜனங்க அத்தனை பேருக்குமே டாக்டர் ராமசாமிதான் குடும்ப டாக்டர்" - மக்களின் மனதில் 67 வயது ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார் டாக்டர்.ராமசாமி.

-பா.சிதம்பர பிரியா
(மாணவப் பத்திரிகையாளர்)

படங்கள்: எல்.ராஜேந்திரன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close