Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘நாட்டு மாடுகளும் பயோ-டைவர்சிட்டியின் ஒரு அங்கம்தான்’

சுற்றுச்சூழல், பல்லுயிரினப்பெருக்கம்(பயோ-டைவர்சிட்டி) என்று எல்லோரும் பேஷனாக பேசி வருகிறார்கள். ஆனால் அதோட ஆழத்தைப் யாரும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

இயற்கை விவசாயத்தின் அடிப்படை கருத்தே சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும், மனிதனுக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாக ஒரு வேளாண் வழிமுறை. அதைத் துடைத்தெறிந்துவிட்டு கெமிக்கல் உரங்களை கொட்டு, விதவிதமான பூச்சிக்கொல்லிகளை தெளிங்க என்று ஆலோசனைகளை சொல்வதையே கடமையாக செய்து வருகிறார்கள் அரசு வேளாண் அதிகாரிகள். இன்னொரு பக்கம் சமவெளிகள், வனங்களில் பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன என்று கூப்பாடு போடுகிறோம்.

இதற்கு ஆண்டுவாக்கில் பல ஆயிரம் கோடிகளை கொட்டியும் செலவழித்து வருகிறோம். குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் கணக்காக மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடுகள் பல்லுயிரினப் பெருக்கத்தில் இருந்து வருகின்றன. இப்போது கூப்பாடு போகிறோம், இன்னும் 50 ஆண்டுகள் போனால் ஒப்பாரி வைக்கும் நிலைமைதான் ஏற்படும்.இந்நிலையில் பல்லுயிர்கள் பெருக்கத்தை மையமாக கொண்டு இந்திய பயோ- டைவர்சிட்டி காங்கிரஸ் கருத்தரங்கு சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்கி 20&ம் தேதி வரை நடைபெற உள்ளது. மூன்று நாள் நடைபெறும் இக்கருத்தரங்கில் பல்லுயிரினப்பெருக்க ஆய்வாளர்கள், நிபுணர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் துவக்கவிழாவில் கலந்துகொண்டனர்.

ஆளுநர் ரோசய்யா கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியபோது,"இந்தியாவில் அழியும் நிலையில் உள்ள இனங்கள் பற்றிய பட்டியலை ஐயுசிஎன் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இதன்படி 94 பாலூட்டி வகைகள், 78 பறவையினங்கள், 66 நீர்நில வாழ்வினங்கள், 30 ஊர்வன இனங்கள், 122 மீன் இனங்கள், 113 பூச்சியினங்கள், 255 தாவர இனங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

வேகமாக மாறிவரும் சுற்றுச்சூழலால் பல்வேறு இனங்கள் அழிந்து வருகின்றன. பூமியின் வரலாற்றில் 5 முறை மாபெரும் வெளியேற்றம்(பிரளயம்) நடைபெறுவதாக சொல்கிறார்கள். 65 மில்லியன் ஆடுகளுக்கு முன்பு இதுபோன்று ஒரு வெளியேற்றம் நடைபெற்றதாக ஆராய்ச்சி தகவல்கள் சொல்கின்றன. அப்போது காணாமல் போனவைதான் டைனோசர் போன்ற பெரிய விலங்குகள். நம்மிடையே உள்ள பல்லுயிர்களை காக்கவேண்டிய கடமையில் தற்போது இருக்கிறோம்" என்றார்.தமிழ்நாடு பல்லுயிரினப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டத்தின் தலைமை திட்ட இயக்குனர் ஓஜா பேசும்போது, "1970லிருந்தே எரிவாயுவிற்காக மரக்கட்டைகளை வெட்டுவது தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்டது. காடுகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு மாநிலம் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக காடுகளில் உள்ள இயற்கை வளங்களை காப்பாற்றி வருகிறோம். இரண்டு ஆண்டுகளாக காடுகளில் உள்ள அழியும் நிலையில் உள்ள இனங்களை கண்டறியும் ஆராய்ச்சி பணிகளையும் செய்து வருகிறோம். இதில் அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகளும் இந்த பணிகளில் பங்கேற்றன. இதோடு பல்வேறு காடுகளில் உள்ள அழியும் நிலையில் உள்ள 650 இனங்களின் இருப்பிடங்கள் இதுவரை ஆவணப்படுத்தப்பட்டு¢ உள்ளது" என்றார்.

துவக்க விழா நாளன்று முதல்நாள் அமர்வில் உணவு மற்றும் வர்த்தக கொள்கை ஆய்வாளர் தேவேந்திர சர்மா பேசும்போது, "உலகளவில் போதுமான உணவு கிடைத்துக் கொண்டு இருக்கிறது. இருந்தும் விவசாயத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரவேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறோம். பல்லுயிரினப் பெருக்கம் என்பதை அழகியலோடு பார்க்கிறோமே ஒழிய அதன் அவசியத்தை யாரும் உணரவில்லை. பல்லுயிரினப் பெருக்கத்துக்கு என்ன மாதிரியான கொள்கைகளை அரசு வகுத்துள்ளது. அதேபோல அதில் மக்களின் பங்களிப்பு என்ன என்பது பற்றியும் கொள்கைகள் இல்லை. இதனைதான் முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். சாதாரண மக்களுக்கும் புரிகிற மாதிரி பல்லுயுரினப் பெருக்க பாதுகாப்பு குறித்து ஒரு மாதிரியை கொண்டு வரவேண்டும்.

இந்தியாவில் 37 வகையான நாட்டு மாட்டினங்கள் இருக்கின்றன. இவையெல்லாம் நம் பல்லுயிரினப்பெருக்கத்தின் ஒரு அங்கம்தான். ஆனால் அவற்றை ஒழித்துவிட்டு ஜெர்சி, எச்எஃப் என்கிற கலப்பினங்களின் பாலை பயன்படுத்தி வருகிறோம். இவ்வளவுக்கும் அதிக புரோட்டீன், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பது, கொழுப்பை கட்டுப்பாட்டில் வைப்பது என அன்றாட நோய்களை கட்டுப்பாட்டில் வைப்பதில் பல நன்மைகள் இருந்தும் நாட்டு மாட்டின் பாலை இரண்டாம் இடத்தில்தான் வைத்திருக்கிறோம். இதற்கு முதல் தர இடத்தை கொடுத்து பலரும் உபயோகிக்க முன்வந்தால் மட்டுமே பல்லுயிரினப்பெருக்க பாதுகாப்பு சாத்தியப்படும். உலகம் சுருங்கி வருகிறது. பல நாடுகள் வேண்டாம் என்று சொல்லிவிட்ட மரபணுமாற்று பயிர்களை இந்தியாவில் நுழையாமல் கட்டுப்படுத்த வேண்டும். அப்படியே பயன்படுத்தினாலும் 10 வருடத்தில் என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் உணரவில்லை" என்றார்.


 
நடிகை சுஹாசினி பேசும்போது, "ஒரு விமானத்தில் பறக்கும்போதுதான் மனிதன் எவ்வளவு பெரிய அறிவாளி என்று தெரிகிறது. கட்டடங்கள், சாலைகள், நதிகள் என்று ஒவ்வொன்றிலும் மனிதனின் பங்களிப்பை பார்க்கும்போது பிரமிப்பா இருக்கு. அதே சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரெயிலில் செல்லுங்கள் சுற்றிலும் ரெயில் தண்டவாளங்களின் ரெண்டு பக்கமும் பிளாஸ்டிக், காகிதக் குப்பைகள் இருப்பதை பார்க்க முடியும். எந்தளவுக்கு உருவாக்குகிறோமோ அந்தளவுக்கு அழித்துக் கொண்டும் இருக்கிறோம். இங்கேதான் நம்முடைய அறிவுத்தனமெல்லாம் முட்டாள்தனமாக மாறி விடுகிறது. எது சரி.. எது தப்பு என்பதே தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

இயற்கை விவசாயம் செய்வது, மரபணு மாற்று பயிர்களை தவிர்ப்பது, பூச்சிக்கொல்லிகளை தவிர்ப்பது எல்லாம் பல்லுயிரினப்பெருக்கத்தின் ஒரு அங்கமே. கடைகளில் அழகான காய்கறிகள், பழங்களை பார்த்தால் உடனே வாங்கி விடுகிறோம். ஆனால் அதை எப்படி பயிர் செய்து கொண்டு வருகிறார்கள் என்பதை அறிவதில்லை. கொச்சின், திருவனந்தபுரத்தில் இயற்கைக் காய்கறிகள், பழங்கள் கிடைக்கிறது. அதைச் சாப்பிடுவர்களோட உடல்நலம் நன்றாக இருக்கிறது. எல்லோரும் அதைப் போன்று தங்கள் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பல்லுயிரினப்பெருக்கம் தானாகவே நடக்கும்" என்றார்.

சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி நிலையத்தின் இயக்குனர் நந்திதா கிருஷ்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

மூன்று நாள் கருத்தரங்கின் ஒருபகுதியாக கண்காட்சியும் நடைபெற்று வருகின்றன. இயற்கையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள், பறவைகள், விலங்குகள் பற்றிய கண்ணைக் கவரும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டு மாடுகளின் சிறப்புகளை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு நாட்டு மாட்டின் சிறப்பு, அதன் பூர்வீகம் பற்றிய தகவல்களோடு அட்டைப் படங்களும் வைக்கப்பட்டுள்ளன.

த.ஜெயகுமார்


படங்கள்: அ.பார்த்திபன் (மாணவ பத்திரிகையாளர்)
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close