Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்றே நாளில் இரண்டு அரிய அறுவை சிகிச்சை - அரசு மருத்துவமனை சாதனை!

திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றத்தை சேர்ந்தவர் 60 வயதான மண்ணாங்கட்டி. இவருக்கு திடீரென்று கழுத்து, கை மற்றும் கால் பகுதிகளில் நரம்புகள் செயலிழந்து விட்டன.

அவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில், மூளை தண்டுவடம் இணைப்புப் பகுதியில் 'அட்லஸ்' என்ற எலும்பு இடம் பெயர்ந்து இருப்பதையும், தண்டுவடம் பகுதியில் அழுத்தம் இருப்பதையும் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.



நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் ஜேக்கப் கிராண்ட், மருத்துவர் கோபிநாத் மற்றும் மயக்கவியல் துறை குமுதா ஆகியோரின் தலைமையில் அறுவை சிகிச்சை தொடங்கியது. முதல் கட்டமாக மண்ணாங்கட்டியின் மூக்கு வழியாக எண்டோஸ்கோப் கருவியைச் செலுத்தி முதல் எலும்பையும் இரண்டாம் எலும்பின் ஒரு பகுதியையும் நீக்கினர்.

முன்பக்கமாக அறுவை சிகிச்சை செய்து இந்த எலும்புகளை நீக்கியதால், கழுத்துப் பகுதியில் நிலைதன்மை பாதிக்கப்பட்டுத் தண்டுவடம் மீண்டும் அழுந்தக்கூடிய நிலை ஏற்படலாம் என்பதால் பிரத்யேக கருவி மூலம் கழுத்து பகுதி எலும்புகளை அசையாமல் இருக்குமாறு நோயாளி பாதுகாப்பாக வைக்கப்பட்டார். மூன்று தினம் கழித்து இரண்டாம் கட்டமாக நோயாளியை குப்புற படுக்க வைத்து மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தலையின் கீழ்ப்பகுதி கழுத்தையும், கழுத்தின் மேல் பகுதியையும் டைட்டானியம் கம்பி கொண்டு இனைக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு (Transnasal odondoidectomy with cranio cervical fusion) என்று பெயர்.
 


''அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி, கை கால் பகுதிகளில் பலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளார். அவரால் நல்ல முறையில் நடக்கமுடிகிறது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த அரிய வகையான அறுவை சிகிச்சையை மூன்றே நாளில் செய்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது" என்று மருத்துவமனை முதல்வர் அழ.மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.

-சே.சின்னதுரை
(மாணவ பத்திரிக்கையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close