Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காலை தூக்கம் கெடுதலா?

விடியகாலை எழுந்து, வாக்கிங் போகனும் என்று அலாரம் செட் பண்ணி வைப்போம். ஆனால், அலாரம் அடித்தாலும், அதன் மண்டையில் ஒரு போடு போட்டுவிட்டு, ஏசி அறையில் இழுத்து போர்த்தி தூங்குவோம். எட்டு மணிக்கு மேல் எழுந்திருந்து, காக்கா குளியலை போட்டு, கிடைச்சதை வாயில் அடைத்துக் கொண்டு, அரக்க பரக்க ஆபீஸ் ஓடுவதே வேலையாக வைத்திருக்கிறோம். இரவை விட பகலில் ஏன் அதிக தூக்கம் வருகிறது. காலை தூக்கம் கெடுதலா? விளக்குகிறார் காரைக்குடி பொது மருத்துவரும், சர்க்கரை நோய்க்கான சிறப்பு மருத்துவருமான டாக்டர் எம்.மணிவண்ணன்.
 
காலை தூக்கம் ஏன் வருகிறது?

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவது நடுநிசியில்தான். நிறைய பிசினஸ் மீட்டிங்களும் இரவில் தான் நடைபெறுகின்றன. இதுவே ஒரு தேவையற்ற சோர்வை உடலுக்கு அளித்து விடுகிறது.  ஒவ்வொரு மனிதனும் சராசரியாக தினமும் 8 மணி நேரம் தூங்க வேண்டும். அந்த தூக்கம் இரவில் இல்லாத போது, உடலானது அந்தத் தூக்கத்தை காலையிலும் தொடர நினைக்கிறது. இதனால் தான் இரவு போதிய தூக்கமில்லாதபோது, காலை தூக்கம் கண்ணை தழுவுகிறது.

இரவில் சரியான தூக்கம் இல்லாமல் போவதற்கு உணவும் ஒரு காரணம். இரவு நேரங்களில், எளிதில் செரிக்கக்கூடிய உணவை எடுத்துக்கொள்ளததும், இரவில் சரியான தூக்கம் இல்லாமல் போவதற்கு மிக முக்கிய காரணம்.

உதாரணமாக, வயிற்றை அடைப்பது போல், அதிக எண்ணெய் சேர்த்த, மைதாவில் செய்யப்பட்ட கடின உணவையும், அர்த்த ராத்திரியில்  சாப்பிடுவது, மறுநாள், நீண்ட நெடிய காலைத் தூக்கத்துக்கு காரணமாகிறது.
 
தூக்க நிலைகள்

மனிதனுடைய தூக்கத்தை இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம். 1) REM -RAPID EYE MOVEMENT SLEEP - தூங்க ஆரம்பித்து அரை மணி நேரத்திலிருந்து 1 மணி நேரத்துக்குள் சின்ன சப்தம் கேட்டால் கூட விழிப்பு வந்துவிடும் 'விளிம்பு நிலைத்தூக்கம்'. இந்த விளிம்பு நிலைத்தூக்கத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே, அன்று கண்டவிஷயங்கள் 'புலம்பலாக' வெளிவருகின்றன.

2. NREM - NON RAPID EYE MOVEMENT SLEEP - வீட்டில் பண்டபாத்திரங்களைத் திருடன் வந்து உருட்டினாலும் காதுக்கு கேட்காத அளவுக்கு 'ஆழ்ந்த நிலைத்தூக்கம்'. ஆழ்நிலைத்தூக்கத்தில் இருப்பவர்களுக்கு கனவுகளும் வருகின்றன.  சிலர் காலை நேரக்கனவை கெடுத்துவிட்டாயே என்றால்... அவன் அப்போது தான் ஆழ்ந்த நிலை தூக்கத்தில் இருக்கிறான் என்று அர்த்தம்.
 
யார்க்கெல்லாம் பகல் நேர தூக்கம் பலனைத் தரும்?

காலையில் 9 மணி முதல் இரவு 7 மணி வரை, 10 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு தூக்கம் அவசியமாக இருக்காது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், குடும்பத்தலைவிகளுக்கு தேவையில்லை. ஆனால், ஒருநாளைக்கு 12 மணி நேரத்திலிருந்து 14 மணி நேரம் மூளை சார்ந்தோ அல்லது உடல் சார்ந்தோ தொடர்ச்சியாக வேலைப்பார்த்தால், மதிய வேளையில் தூங்குவது தப்பில்லை. அதைத் தவிர்த்து விட்டு, முழுக்க முழுக்க பகலிலும் தூங்கிவிட்டு, இரவிலும் சீக்கிரமாகத் தூங்க நினைப்பவர்களுக்கு, இரவுத் தூக்கம் தாமதம் ஆகும்.

பகல் தூக்கத்தால் ஏற்படும் பாதிப்பு / தீர்வு

குறிப்பாக இரவில் நைட் ஷிஃப்ட் வேலைப்பார்த்து விட்டு பகலில் தூங்குபவர்கள், காலை, மதியம் உணவை சாப்பிட்டுவிட்டு மீண்டும் உறங்குவதும், இரவில் உணவை உண்டுவிட்டு உறங்காமல் வேலைக்குச்செல்வதும், உடலில் உள்ள சமநிலையை கெடுத்து விடுகிறது. இப்படி வேலைக்குச் செல்பவர்கள் அதிகபட்சமாக பகல் நேர உணவுகளைத் தவிர்த்துவிட்டு, நீண்ட நெடிய உறக்கத்தை மேற்கொள்ளலாம். இரவில் 3 முதல் 4 மணி நேர இடைவெளி விட்டு, உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

அடிக்கடி ஷிஃப்ட் முறையில் வேலைகள் மாறிக்கொண்டேயிருந்தால், திடீரென்று உணவுப் பழக்கமும், தூக்கமும் மாற்றிக் கொண்டே இருக்கவேண்டிய நிலை ஏற்படும்.  இது, உடலில் தேவையில்லாத  உஷ்ண நோய்களை உண்டாக்கி விடும். முடிந்தவரை இரவு நேர வேலைகளை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.

காலை, மதியம் சாப்பிட்ட உணவைவிட, குறைந்த கலோரி அளவிலான எளிதில் செரிக்கக்கூடிய உணவை இரவில் உட்கொள்ளவேண்டும். மாவுச்சத்து, மாவும், புரதமும் கலந்த சரிவிகித உணவாக அது இருக்கட்டும். முடிந்தவரை இரவு வேளையில்  ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டில் சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவதே சிறந்த தீர்வு.

காலை நேரத் தூக்கத்தையும் சேர்த்து ஒருவர் 8 மணி நேரம் தூங்கி  விட்டால் பிரச்னை இல்லை. காலையில் சீக்கிரமே எழாதபோது, நம் உடல் சூரிய ஒளி படாதபோது, நம் உடலில் வைட்டமின்கள் குறைவதற்கான வாய்ப்பாகவும் அமைந்துவிடும்.  தாமதமாக எழும்போது தேவையில்லாத மனச்சோர்வும், பதற்றமும் தொடரும். தொடர்ச்சியான பதற்ற நிலை, சிலருக்கு நெஞ்சு வலியைக்கூட உண்டாக்கலாம்.

-ம.மாரிமுத்து (மாணவ பத்திரிகையாளர்)

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close