Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோடைக்கு எதிரி ஐஸ்!

சுட்டெரிக்கும் வெயிலில் வெளியில் தலைக்காட்ட முடியவில்லை என்று ஒவ்வொரும் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆந்திரா, தெலங்கானாவில் கோடை வெயிலுக்கு 500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதால் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்று அம்மாநில எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம். இதன்காரணமாக சாலையிலும், தெருக்களிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
 

கோடை வெயிலை சமாளிக்க குளிர்ச்சியான உணவு வகைகள் மீது மக்களின் பார்வை உள்ளது. இயற்கை அருளிய கொடையான இளநீரில், சோடியம், கால்சியம், குளுக்கோஸ், புரதம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இளநீரைக் குடித்தால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு பசியைத் தூண்டும். மேலும் உடல் சூட்டைக் குறைத்து குளிர்ச்சியைத் தரும். குடல் புழுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. சிறுநீர் கல்களை கரைக்க உதவும். உடல் எடையைக் குறைக்கும். மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலிக்கு இது சிறந்த மருந்து. இளநீரை தொடர்ந்து நுங்கு, முலாம்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவகள் உள்ளன.

இளநீர், பனை நுங்கு, முலாம்பழம் போனறவற்றைப் பகல் உணவுக்குப் பின் ஓரிரு மணி நேரம் கழித்துச் சாப்பிடுவது நல்லது. காலை வேளையிலும், நல்ல பசி வேளையிலும் இரைப்பை உணவை எதிர்பார்த்துக் கதகதப்புடன் இருக்கும். அப்போது குளிர்ச்சி நிறைந்த இளநீர் முதலியவை நேரிடையாகச் சேரும்போது,  பித்தமும் குளிர்ச்சியும் கலப்பதன் காரணமாக பசி மந்தம், புளித்த ஏப்பம், வயிற்றில் வேக்காளம், பேதி, தலைச்சுற்றல் முதலியவை ஏற்படக் கூடும். வெயிலில் அலைந்து திரும்பியவுடன் வியர்வையும், தாகமும் அடங்கச் சிறிது நேரம் ஓய்வெடுத்து, கைகால்கள் அலம்பி, வாய் கொப்பளித்துப் பின் இவற்றை அளவு மீறாமல் சாப்பிடுவதே சரியான முறை.
 

வெள்ளரிப் பிஞ்சுடன், மிளகும் உப்பும் சேர்த்தால் அதன் குளிர்ச்சி குடலைப் பாதிக்காது. வெயிலிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் வியர்வை அடங்காமல் குளிர்ந்த நீரில் குளித்தால் சளி பிடிக்கும். உடல் கனக்கும். உடல் சூடு குறைந்து, குளிக்கும் போது இளம் பனைநுங்கை மேல் தோல் நீக்கி உடலின் மேல் தேய்த்துக் குளிக்க, தோல் எரிச்சல், கடைக்கட்டி, அரிப்பு, வியர்க்குரு முதலியவை மறையும்.

கோடைக்காலத்தில் மலச்சிக்கல் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். விடியற்காலை வேளையில் நீராகாரத்தை உப்பும், சீரகத் தூளும் சேர்த்துச் சாப்பிடுவதால் மலச் சிக்கல் ஏற்படாது. கோடைக்காலத்தில் நாவறட்சிக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் போதாது. வயிறு உப்புமே தவிர நாவறட்சி அடங்காது. விளாமிச்சை வேர் போட்டு ஊறிய பானை தண்ணீரைச் சிறிது சிறிதாக ருசித்துப் பருகுவதும், அடிக்கடி வாயில் தண்ணீர் விட்டுக் கொப்பளிப்பதும், கை, கால், முகம் தண்ணீர் விட்டு அலம்பிக் கொள்வதும் நல்லது.

நாவறட்சியை ஏற்படுத்தும் எண்ணெயில் பொரித்தவை, காரம், புளிப்பு, உப்புச்சுவை, மசாலா, கேழ்வரகு, கொள்ளு, தயிர், காரசாரமான மாமிசம் போன்றவை தவிர்த்து இனிப்புச்சுவை, உளுந்து, பயறு, கோதுமை, அரிசி, கிழங்குகள், காய்கள், கீரைகள், பழங்களில் மா, பலா, திராட்சை, வாழைப்பழம் நல்லது.

வெயிலில் அலைந்து வந்தவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடிப்பதை பலர் வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். இவ்வாறு குளிர்ச்சியான தண்ணீரை பருகும் போது பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே கோடைக்காலத்தில் ஐஸ் கலந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீரை பருகுவதையும் தவிர்க்க வேண்டும். கோடை வெயில் காரணமாக தமிழகத்தில் குளிர்பானங்களின் விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளன.

சாலைஓரங்களில் கரும்பு ஜூஸ், எலும்பிச்சை ஜூஸ், தர்பூசணி ஜூஸ், பழச்சாறு உள்ளிட்டவைகளை விற்கும் தள்ளுவண்டி கடைகளும் அதிகளவில் முளைத்து இருக்கின்றன. இங்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் பாதுகாப்பானதா என்பது கேள்விக்குறி. ஆனாலும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் இந்த தள்ளுவண்டி கடைகளில் ஜூஸ்களை பருகுபவர்கள் அதிகம். கரும்புச்சாறு கடைகளில் ஜூஸை விட ஐஸ் தண்ணீர் அதிகம் சேர்க்கப்படுகின்றன.

இத்தகைய குளிர்பானங்கள் அப்போதைக்கு மட்டுமே குளிர்ச்சியைத் தந்தாலும் அதன்பிறகு அதை பருகுபவர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றன. எனவே கோடை வெயிலை இயற்கை அருளிய பானத்தை பருகி சமாளிப்பதே புத்திசாலித்தனம்.

-எஸ்.மகேஷ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ