Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நமீதாவே குறைச்சிட்டாங்க... நாமும் குறைக்கலாம்...!' - எடை குறைப்பும்... எச்சரிக்கையும்!

டிகை நமீதா உடல் எடையைக் குறைத்து ‘சிக்’கென வலம்வர ஆரம்பித்திருக்கிறார். இதைப் பார்த்ததுமே, 'அட அவ்வளவு குண்டான நமீதாவே எடையைக் குறைச்சுட்டாங்களா... நாமளும் எடையைக் குறைக்கணும்!’ என்று களத்தில் இறங்க பலரும் தயாராகி இருப்பார்கள்.

ஆனால், அதற்காக விளம்பரங்களை நம்பி கண்மூடித்தனமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல், உணவை இஷ்டத்துக்கும் குறைத்தல், இஷ்டம்போல உடற்பயிற்சி எடுத்தல் என்று இறங்கினால்... அது ஆபத்துதான்.

சரி.. அப்புறம் எப்படித்தான் எடையை குறைப்பதாம்? என்று கேட்பவர்களுக்கு உதவும் வகையில், எடைக் குறைப்புப் பற்றி மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் இங்கே பேசுகிறார்கள்...

இடுப்பளவை சரிபாருங்கள் ப்ளீஸ்!

சுசிலா, மகளிர் மற்றும் பொதுநல மருத்துவர் - சென்னை:

''முதலில் உங்களின் உடல் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு இடுப்பளவை சரிபார்த்தல் அவசியம். ஆண்கள் 40 இன்ச், பெண்கள் 35 இன்ச் இடுப்பளவு மற்றும் அதற்கு மேற்பட்டு இருந்தால் ஆபத்துதான். அதேபோல உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறீர்களா என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்வது முக்கியம். ஒன்றிரண்டு கிலோ கூடுதலாகவோ, குறைவாகவே இருக்கலாம். இதற்கு மேல் அதிகரித்தால், பிரச்னைதான்’’ என்ற டாக்டர், ஒரு சில விஷயங்களை முக்கியமாகக் குறித்துக் கொள்ளச் சொன்னார். அவை..

* சிலருக்கு வயிறு, பின்புறம், தொடை, கை என குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அதிக எடை கூடியிருக்கும். அவர்கள், அந்த இடங்களுக்கு அதிக வேலை கொடுக்கும் பிரத்யேக உடற்பயிற்சியாக, ஃபிஸியோதெரபிஸ்ட் அல்லது ஜிம் டிரெயினரிடம் கேட்டுச் செய்யலாம்.

* தோட்ட வேலை போன்ற அன்றாட வேலைகளில் இருந்து ஃப்ளோர் எக்சர்சைஸ்கள் வரை வீட்டிலேயே கலோரியை எரிக்கும் வகையிலான எளிய பயிற்சிகளை தொடர்ந்து செய்யலாம். ஜாக்கிங், வாக்கிங், ஸ்விம்மிங் என்று விரும்பும் பயிற்சியை செய்யலாம்.

* 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, தைராய்டு போன்ற பாதிப்புகளுக்கு வாய்ப்பிருக்கலாம் என்பதால், இவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்றே பயிற்சிகள் செய்ய வேண்டும்.

'ஈட் வெல்; பர்ன் வெல்!'

சில்வியாகுமாரி, சரும சிறப்பு மருத்துவர் - சென்னை:

''பலருக்கும் எடை குறைப்புக்குப் பிறகு, உடலின் சில பாகங்களில் மட்டும் வெள்ளை நிறக் கோடுகள் (ஒயிட் லைன்ஸ்) விழும். கர்ப்பகாலத்தில் பெரிதாகும் வயிறு, பிரசவத்துக்குப் பின் இயல்புக்குத் திரும்பும்போது ஏற்படும் கோடுகள் போல. இவற்றைத் தவிர்க்க உடற்பயிற்சி எடுத்துக்கொள்வதற்கு முன்பே ஆலிவ் ஆயில் அல்லது விட்டமின் ஈ அடங்கிய ஈவியான் கிரீம் பயன்படுத்தலாம். உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும், செய்த பின்னும் அரை மணி நேரம் ஆலிவ் ஆயில் அல்லது ஈவியான் கிரீம் உபயோகிக்கலாம். விளக்கெண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் இவை இரண்டையும் கலக்கிகூட அந்த இடத்தில் தடவலாம். காணாமல் போய்விடும்’’ என்று சொல்லும் சில்வியாகுமாரி,

''எடை குறைப்புக்கான ஈஸி ஃபார்முலா இதுதான்... ஈட் வெல்; பர்ன் வெல்! அதாவது, நன்றாகச் சாப்பிடுங்கள், சாப்பிட்ட கலோரிகளை அதற்குத் தகுந்த உடற்பயிற்சி, உடல் உழைப்பின் மூலம் எரித்துவிடுங்கள்!’’ என்றார் எளிதாக!

சரியான எடைக்கு சரிவிகித உணவு!

ஷீலா பால், சீனியர் டயட்டீஷியன் - சென்னை:

''உடல் எடைக்குறைப்பை,  மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு கிலோ எனப் படிப்படியாகத்தான் குறைக்க வேண்டும். ஒரேயடியாக 10, 20 என்று குறைத்தால் அது பிரச்னைக்குரியது. கண்களைச் சுற்றிக் கருவளையம், பப்ளிமாஸ் கன்னம் இளைத்து முகத்தில் கோடுகள் விழுவது, தாடைப் பகுதி தொங்கிப்போவது என்று வயதான தோற்றம் ஏற்படும். எடை குறைப்பு முயற்சியாக, சாப்பிட்டு வரும் உணவு வகைகளை திடீரென ஒரேயடியாக நிறுத்திவிடக் கூடாது. முக்கியமாக நம் உடலுக்கு கொழுப்பு கண்டிப்பாக தேவை. எனவே முற்றிலுமாக இவற்றைத் தவிர்த்துவிட வேண்டாம்’’ என்ற ஷீலா, சில விஷயங்களை அடிக்கோடிட்டுச் சொன்னார். அவை..

* தினமும் முட்டை சாப்பிட்டு வந்தவர்கள், அதை வாரத்துக்கு இரண்டு முறை என்று சுருக்கிக் கொள்ளலாம். அசைவப் பிரியர்கள் வாரத்துக்கு ஒரு முறையாவது மீன் மற்றும் தோல் நீக்கிய சிக்கனில் குழம்பு செய்து சாப்பிடலாம்.

* புரோட்டீன் பவுடர், ஹெல்த் டிரிங் என மார்க்கெட்டில் எடை குறைப்புக்கு என்று சொல்லி விளம்பரப்படுத்தப்படும் உணவுப் பொருட்கள் பரிந்துரைக்கத் தக்கவையல்ல. ஒருவேளை அறுவை சிகிச்சை முடித்த பிறகு, தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படியே எடுத்துக் கொள்ளலாம். மருந்து, ஊசி போன்ற முயற்சிகள் கூடவே கூடாது.

* இன்னும் சிலர் சுத்தமாக உணவில் எண்ணெயைத் தவிர்த்து விடுவார்கள். நம் உடலுக்கு ஆயிலும் தேவை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். நாளொன்றுக்கு 10 முதல் 15 மில்லி லிட்டர் மட்டுமே உணவில் எண்ணெயைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

* அதிகளவு சர்க்கரை, உப்பு, ஸ்வீட்ஸ் இவற்றை பயன்படுத்தாமல் இருந்தாலே எடையானது தன்னால் குறையும். எடையை அதிகரிக்கும் வாழைப்பழம் மற்றும் பேரீட்சையை வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடலாம்.

* குறிப்பாக, பீட்ஸா, பர்கர், ஃப்ரைடு ஃபுட்கள் போன்றவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

* ஒரேமாதிரியான உணவு வகைகளைத் தொடர்ந்து எடுக்காமல் சரிவிகித உணவாக எடுத்துக் கொள்வதுதான் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

எடை குறைக்க... என்ன உணவு?

நீர்ச்சத்து அதிகமுள்ள வெண்பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவை சாப்பிடலாம். காலையில் பல் துலக்கிய பின் வெறும் வயிற்றில் வெந்நீரில் எலுமிச்சைச் சாறு, சிறிதளவு உப்பு சேர்த்துக் குடிக்கலாம். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனில் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்கவும். அதேபோல நாள் முழுவதும் வெந்நீராகவே பருகினால், உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவும். மாவுச்சத்து அதிகமுள்ள அரிசி சாதம், இட்லி, தோசை போன்றவற்றைக் குறைத்து, சப்பாத்தி மற்றும் காய்கறி உணவாக எடுத்துக் கொள்ளலாம். வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

அரிசியைத் தொடாத நமீதா!

20 கிலோ எடை குறைத்து ஸ்லிம்மாக காட்சி தரும் நடிகை நமீதா, ''எப்படியாவது எடையைக் குறைத்தாக வேண்டும் என்கிற  சூழலில்தான் எடைக்குறைப்பு பயிற்சியை எடுத்துக்கொண்டேன். முன்றே மாதங்களில் சுமார் 20 கிலோ எடை குறைந்துவிட்டது. சிகிச்சை, பயிற்சி, உணவு முறை இவற்றை எனக்கு பயிற்சி அளித்தவர்கள் சரிவர பார்த்துக் கொண்டார்கள். நம்பிக்கையையும் ஊக்கமும் கொடுத்தார்கள். இப்போது நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

என்னை இப்போது பார்ப்பவர்கள் என் உணவு பற்றியே கேட்கிறார்கள். அரிசி உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டேன். காபி, டீ, கிடையாது. நான் ஒரு பீட்சா பிரியை. பீட்சா கடையில் மெம்பர் நான். அந்த அளவுக்கு பீட்சா சாப்பிடுவேன். இப்போது மாதம் ஒன்றுதான் சாப்பிடுகிறேன்’’ என்கிறார், சிரித்தபடியே!

இதுக்குமேல இடுப்பு கூடாது!

ஆண்களின் இடுப்பளவு 103 செ.மீட்டர் (40 இன்ச்) அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் இருந்தால்... உடல் பருமன் பிரச்னை என்று அர்த்தம். பெண்களைப் பொறுத்தவரை 88 செ.மீட்டர் (35 இன்ச்) அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் இருந்தால் ஆபத்துதான்.

உங்களின் உயரத்தை செ.மீட்டரில் கணக்கிட்டு, அதிலிருந்து 100-ஐ கழிக்க வேண்டும். உயரம் 157 செ.மீ எனில், 157 - 100 = 57. உயரத்துக்கு ஏற்ற எடை 57 கிலோ. இதிலிருந்து ஒன்றிரண்டு கிலோ கூடுதலாக, குறைவாக இருக்கலாம். இதற்கு மேல் அதிகரித்தால், உடல் பருமன் பிரச்னைதான்!

- வே.கிருஷ்ணவேணி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ