Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்லீரலை காக்க ஒரு இரவு நேர மாரத்தான்!

சென்னை:  கல்லீரல் நோய் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, சென்னையில் இரவு நேர மாரத்தான் ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலில், நவம்பர் 14-ம் தேதி இரவு 9 மணிக்குத் தொடங்கும் இந்த இரவு நேர மாரத்தான் போட்டியை, அப்போலோ மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்து கிறது.

கல்லீரல் நோய்கள் பற்றியும், உடல் உறுப்பு தானம் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த  இந்த போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டி மூலம் ஈட்டப்படும் பணம், கல்லீரல் நோய்கள் வராமல் தடுப்பதிலும், கல்லீரல் நோய்களை கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதிலும் கவனம் செலுத்தும் அமைப்பான LYLF அமைப்பிடம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாரத்தான் போட்டி குறித்த அறிவிப்பு நிகழ்ச்சியில், அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சை மையத்தின் இயக்குனரும், LYLF அமைப்பின் இயக்குனருமான மருத்துவர் ஆனந்த் கக்கர், ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் 3230 வின் கவர்னர் சி.ஆர். ராஜூ, தடகள வீரர் ஞானசேகரன், சென்னை ரன்னர்ஸ் அமைப்பைச் சேர்ந்த ஹரிசங்கர் மற்றும் விக்ரம் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர். ஆனந்த் கக்கர், "இந்த மாரத்தான் போட்டி, கல்லீரல் நோய் குறித்தும், உடல் உறுப்பு தானம் குறித்தும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறோம். இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் மூலமாக  அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் சென்றடையும்." என்றார்.

இந்த மாரத்தான் போட்டியில்  21, 10, 5, மற்றும் 3 கி.மீ என பல்வேறு தரப்பிற்கு ஏற்ற வகையில் நான்கு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கல்லீரல் மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும், சிறுவர்களுக்கும், சிறப்பு 1 கி.மீ மாரத்தான் ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், 4000 க்கும் அதிகமானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பங்கு பெற விரும்புவோர், www.lylfnightmarathon.com எனும் தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்" என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
 
நிகழ்ச்சியில், கல்லீரல் மாற்று சிகிச்சை செய்துகொண்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- ஜெ. விக்னேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ