Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சருமத்தை பாதிக்கும் 4 செயல்கள்!

ருமத்திற்கு எது நல்லது என்ற தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. உடலில் உள்ள எந்த ஒரு உறுப்பைக் காட்டிலும், அதிக முக்கியத்துவம் தரும் உறுப்பு என்றால் அது சருமம்தான். இந்த பழத்தை சாப்பிடலாமா, அந்த கிரீம்மை பூசலாமா என்று நாம் செய்யும் செயல்கள் அதிகம். நீர்ச்சத்து, ஊட்டச்சத்துள்ள உணவு எடுத்துக்கொள்வது சருமத்துக்கு பொலிவைத் தந்தாலும், சருமத்தை பாதிக்கும் விஷயங்கள் சில உள்ளன. இவற்றை புறக்கணிக்காமல் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் சருமம் பொலிவுடன் அழகாக இருக்கும்.

அலர்ஜி

சீரான சருமம் இல்லையெனில், உங்களின் சருமத்தில் என்ன பிரச்னை என்பதை கவனியுங்கள். பருக்கள், கருவளையம், எண்ணெய் வழிதல், வறண்ட சருமம் போன்ற அலர்ஜிகள் இருப்பின் அவற்றை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு பருவகாலநிலை மாற்றம்கூட அலர்ஜியை ஏற்படுத்தலாம். பூக்களின் மகரந்தம், தூசு, பறவைகளின் சிறகுகள் போன்றவற்றால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும். இதனால் கண்கள் சிவப்பாகுதல், நீர் வழிதல், கண்களின் கீழ் வீக்கம் போன்ற பாதிப்புகள் வரலாம். எதனால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை முதலில் கண்டறிந்து அதைத் தடுக்க வேண்டும். வெளியில் சென்றால் ஸ்கார்ஃப், மாஸ்க் போன்றவற்றை அணியலாம். வாரத்தில் இருமுறை படுக்கையின் பெட்ஷீட், தலையணை உறை, திரைசீலைகள் போன்றவற்றை மாற்ற வேண்டும்.

தாமதமாக தூங்கும் பழக்கம்

ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் இரவில் தாமதமாக தூங்கினால் பாதிப்புகள் பெரிதாக இருக்காது. ஆனால் தினமும் தாமதமாக தூங்கும் பழக்கம் இருந்தால், தோல் சுருக்கம், அஜீரண கோளாறுகள் போன்றவை வரும். அடுத்த நாள் சருமத்தில் எந்தவித புத்துணர்ச்சியும் இருக்காது. கண்கள் சோர்ந்துபோய், பொலிவின்றி இருக்கும். ரத்த ஒட்டம், ரத்த நாளங்கள் ஆகியவற்றின் இயக்கங்கள் பாதிக்க கூடும். இரவில் 9-10 மணிக்குள் தூங்க செல்வது நல்லது. தூங்கும் முன் கண்களில் ஐ பேட் கட்டிக் கொண்டு தூங்குங்கள். கண் குளிர்ச்சியடையும். மறுநாள் காலை கண்கள் பிரெஷ்ஷாக இருக்கும். சரும சுருக்கங்கள் வராமல் தவிர்க்க முடியும்.

குடி மற்றும் புகைபழக்கம்

குடி மற்றும் புகையால் உடலில் நச்சுக்கள் சேரும். சிலருக்கு உயிரையே குடிக்கும். நுரையீரலும், கல்லீரலும் அதிகமாக பாதிக்கும். கல்லீரல் பாதித்தால் முதலில் அவற்றின் அறிகுறியாக வெளிப்படுவது சருமத்தில் பிரச்னை. கண்கள் சிவந்து போகும், உதடு கருப்பாகும், முகத்தில் சோர்வு கூடிவிடும். இப்படி பல தரப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். எப்போதாவது ஒருமுறை என்று கூட இந்த பழக்கங்களை வைத்துக் கொள்ள கூடாது. இவற்றை மறக்கவும், இதிலிருந்து விடுபட மருத்துவரிடமிருந்து கவுன்சலிங் பெற்றுக் கொள்ளலாம்.  குடும்பத்தினருடன் நேரம் செலவழித்தல், இசையை ரசிப்பது, உடற்பயிற்சிகளை செய்வது போன்ற நற்பழக்கங்கள் கைக்கொடுக்கும்.

தவறான உணவு பழக்கம்

அதிக மசாலா மற்றும் எண்ணெய் சேர்த்த உணவுகள், சீனா உணவுகள் போன்றவை உடலை அதிகம் பாதிக்க கூடியவை. வெளிநாட்டு உணவு ரகங்கள் சுவைப்பதில் தவறில்லை ஆனால், அது ஸ்டீம் உணவுகளாக இருக்கும் பட்சத்தில் பிரச்னையில்லை. கிரில்டு, எண்ணெய்யில் பொரிப்பது, சாஸ் சேர்த்து சமைப்பது போன்றவற்றால் உடலில் அதிகளவு சோடியம் சேரும். கெட்டக் கொழுப்பு அதிகரிக்கும். முகத்தில் நீர் கோர்த்து இருப்பது போல மாறிவிடும். அதிகபடியான மசாலா உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் இது. சாலட், ஆவியால் வேக வைக்கப்பட்ட உணவுகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடுவதே நல்லது.

- ப்ரீத்தி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ