Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பூக்களின் மகரந்தங்களால் கூட அலர்ஜி ஏற்படும்!

பிடிக்காத ஒன்றை வலுக்கட்டாயமாக செய்ய சொன்னாலோ அல்லது சாப்பிட சொன்னாலோ ‘அதெல்லாம் எனக்கு அலர்ஜி’ என எளிதாக எஸ்கேப் ஆகிற ஆசாமிகள் நாம். உண்மையில் அலர்ஜி என்றால் என்ன, அது ஏன் ஏற்படுகிறது எனத் தெரியுமா?

நம் உடலுக்கு சேராத சில பொருட்கள் உள் நுழையும்போது நம் உடல் காட்டும் இயற்கையான எதிர்ப்பைத்தான் அலர்ஜி என்கிறோம். தோல் அரிப்பு, தும்மல், இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், கண் எரிச்சல் போன்றவைதான் அலர்ஜயின் அறிகுறிகள். நாம் எடுத்துக்கொள்ளும் உணவு, நமது சுற்றுப்புறச்சூழலில் உருவாகும் மாசு, தட்பவெப்பம் மற்றும் இன்ன பிறவையும் அலர்ஜிக்கான காரணிகளாக இருக்கின்றன.

மலரின் மகரந்தம், செல்லப் பிராணிகளான நாய், பூனை ஆகியவற்றின் முடி ஆகியவற்றாலும் அலர்ஜி ஏற்படலாம்.  பூ பூக்கும் காலத்தில் பூக்களின் மகரந்தங்கள் காற்றில் பரவும். இதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும். மகரந்தங்களால் அலர்ஜி ஏற்படும் பிரச்சனை உள்ளவர்கள் மரங்கள் பூக்கும் அந்த சீசனில் அதிகம் வெளியே போகாமல் தவிர்ப்பது நலம் அல்லது வீட்டின் அருகிலேயே இதுபோன்ற மரங்கள் இருந்தால் அலர்ஜியிலிருந்து தப்பிக்க ஜன்னல்களை மூடி வைப்பது உங்களுக்கு சேஃப். 

இதை தவிர தூசு, சிலவகைப் பூச்சிகள் மூலமும் சிலருக்கு அலர்ஜி ஏற்படும். அத்தகைய அலர்ஜி உள்ளவர்கள் வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்வது பாதுகாப்பானது. மகரந்த அலர்ஜியிலிருந்து தப்பவும் மாஸ்க் உதவும்.

வீடுகளில் ஏசி பயன்படுத்துபவர்கள்  அதன் வடிகட்டும் வலையை அடிக்கடி மாற்றுங்கள்.  பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வாரத்திற்கு ஒரு முறையேனும் பாய், தலையணை மற்றும் மெத்தை உறைகளை மாற்றலாம் அல்லது துவைத்து பயன்படுத்த வேண்டும்.

சமையலறை மற்றும் குளியலறையில் காற்றை வெளியேற்றும் கருவி பொருத்துவது அவசியம். உரோமம் நிறைந்த நாய், பூனை மற்றும் கிளி, புறா போன்ற பறவைகள் ஆகியவற்றை செல்ல பிராணிகளாக  நம்மில் பெரும்பாலோனோர் வளர்த்து வருகிறோம். செல்லப்பிராணிகளை முறையாக பராமரித்தல் வேண்டும். அவற்றுக்கு வாரம் ஒரு முறை சோப்பு போட்டு குளிப்பாட்டுதல், மருத்துவரின் ஆலோசனையின்படி பராமரிப்பது ஆகியவை அலர்ஜியை தவிர்க்கும் வழிகளாகும்.  

இவற்றையெல்லாம் விட நமக்கு ஒவ்வாத உணவுகள், குளிர்பானங்கள் போன்றவற்றாலும் அலர்ஜி ஏற்படும். அலர்ஜி வந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி அதற்கேற்ற வழிமுறைகளை பின்பற்றுதல் நன்மை பயக்கும்.

- ச. ஆனந்தப்பிரியா
(மாணவப் பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ