Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஸ்டாலினும், நானும் வாக்கிங் பார்ட்னர்கள்!' - முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் சொல்லும் ரகசியம்!

காலில் அடிபட்டால் நீங்கள் மீண்டும் ஓட முடியும். ஏதாவது ஒரு சம்பவத்தில் உங்கள் கால் உடைந்து இருந்தால் நீங்கள் மீண்டும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஒரு விபத்தில் உங்கள் கால் முட்டி சுக்குநூறாக உடைந்து, பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு உங்களால் பழைய மாதிரி நடக்க முடியுமா? அப்படிப்பட்ட நிலையில் சிகிச்சைக்குப் பிறகு நீங்கள் ஓட முடியும் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா?  ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒருவர் மாரத்தான் ஓடிக்கொண்டிருக்கிறார். அப்படி ஓடி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றிருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை, சென்னையின் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்.

ஒரு காலை வேளையில் ஓட்டப்பயிற்சி முடித்து வந்தவரை அவரது வீட்டில் சந்தித்தோம்.

அரசியல்வாதிகள் காலையில் வாக்கிங், யோகா செய்வார்கள். நீங்கள் வித்தியாசமாக ஓடிக்கொண்டிருக்கிறீர்களே... ஏன்? அதற்கு எதாவது காரணம் இருக்கிறதா ?

'எனக்கு 15 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருக்கிறது. அதனால் அப்போதில் இருந்தே நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன். 2004-ம் ஆண்டு மதுரையில் கலைஞருக்கு செம்மொழி பாராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. அதற்காக சென்னையில் இருந்து காரில் சென்றோம். அப்போது பெரம்பலூர் அருகே நடந்த ஒரு விபத்தில் என் கால் முட்டு சுக்குநூறாக உடைந்தது. தலையில் பலமாக அடிபட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக திருச்சியிலும், சென்னையிலும் ஐ.சி.யூ.,வில் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றினார்கள். இரண்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு காலில் மாற்று மூட்டு பொருத்தப்பட்டது. இதனால் மருத்துவர்கள் என்னை வேகமாக நடக்ககூடாது, தரையில் சம்மணம் போட்டு உட்காரக்கூடாது, காலையில் வாக்கிங் போகும்போதும் குறைவான தூரமே நடக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதித்தார்கள். அதைக்கேட்ட எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, நடப்பதற்கு முயற்சி செய்தேன். இதற்காக தனியாக யோகா கற்றுக்கொண்டேன். அதன்மூலம் கொஞ்சமாக என்னை தயார்படுத்திக் கொண்டேன். வேகமாக நடக்க முடியாவிட்டாலும் ஒரு அளவிற்காவது நடக்க முடிந்தது. அப்படியே யோகாவின் மூலம் ஓட ஆரம்பித்தேன்'.



 

ஏகப்பட்ட மாரத்தான் ஓடி இருக்கிறீர்களே ? அந்த ஆர்வம் எப்படி வந்தது ? இதுவரை எத்தனை மாரத்தான்களில் கலந்து கொண்டிருக்கிறீர்கள் ?

' 2006ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயர் ஆனேன். யோகாவின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து இருந்ததால், மேயர் ஆனதும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் யோகாசனத்தை சொல்லித் தருவதற்கு ஏற்பாடு செய்தேன். பல பள்ளிகளில் நானே சென்று கூட செய்முறை விளக்கம் அளித்திருக்கிறேன். அதே சமயத்தில் காலில் அடிபட்டு இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க ஆரம்பித்து, மெதுவாக ஜாக்கிங் செல்ல ஆரம்பித்து இருந்தேன். அப்படியே ஓட முடியுமா என்று முயற்சி செய்துகொண்டிருந்தேன். முதலில் ஒரு கி.மீ., அடுத்து ஐந்து கி.மீ., என்று ஓட ஆரம்பித்து 10 கி.மீ., வரை ஓடினேன். அப்போது தான் மாரத்தான் ஓடும் எண்ணம் வந்தது. 2014ம் ஆண்டு பாண்டிச்சேரி ஆரோவிலில் நடந்த ஒரு மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டேன். அந்த முதல் மாரத்தான் போட்டியில் 21 கி.மீ.,யை இரண்டு மணி நேரம் 34 நிமிடத்தில் இடைவிடாமல் ஓடிக்கடந்தேன். அதற்கு அடுத்த மாதமே ஆஸ்திரேலியா சிட்னியில் நடந்த மாரத்தானில் 2 மணி நேரம் 32 நிமிடத்தில் ஓடினேன். இந்த ஒரு வருடத்தில் மட்டும் டெல்லி, மும்பை,புனே,சிம்லா, ஹைதராபாத், சென்னை, நெல்லை, கோவை என பல இடங்களில் நடந்த மாரத்தான்களில் கலந்துகொண்டு முழுமையாக ஓடி இருக்கிறேன். குறுகிய காலத்திற்குள் இந்தியர் ஒருவர்  50 வயதிற்கு மேல் 25 முறை மாரத்தானில் முழுமையாக ஓடிய பிரிவில் என்னை  'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அங்கீகரித்து இருக்கிறது. இது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இதற்கு அடுத்த 'ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதே எனது அடுத்த இலக்கு'.



நீங்கள் மேயராக இருந்தபோது சென்னை மாநகராட்சியில் என்னென்ன புதிய திட்டங்களை செயல்படுத்தினீர்கள் ?

'2006க்கு முன்பு வரை சென்னையில் மாநகராட்சி குப்பை லாரி, குடிநீர் லாரிகள் விபத்து ஏற்படுத்தி உயிர்சேதங்களும் அதிகரித்து இருந்தது. இதைத் தடுக்க என்ன வழி என்று யோசித்தபோது, லாரி ஓட்டுனர்களுக்கு ஏகப்பட்ட மன உளைச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால், அவர்களுக்கு யோகா கற்றுத் தர ஏற்பாடு செய்தோம். அன்றில் இருந்து இன்று வரை மாநகராட்சி லாரிகளால் ஏற்படும் விபத்துகள் குறைந்திருப்பதை நீங்களே அறிந்துகொள்ள முடியும். அதன்பிறகு மாநகராட்சி உறுப்பினர்கள், ஊழியர்களுக்கும் யோகா கற்றுத்தர ஏற்பாடு செய்தோம். சென்னையில் உள்ள பூங்காக்களில் மக்கள் அதிகமாகக் கூடும் 38 பூங்காக்களை தேர்ந்தெடுத்து அங்கு யோகாவிற்காக தனியாக இடம் ஒதுக்கி அதற்காக தனியாக யோகா பயிற்றுனர்களை நியமித்தோம். அதன்மூலம் காலையில் அங்கு வரும் மக்களுக்கு இலவசமாக யோகா கற்றுத் தர ஏற்பாடு செய்தோம். இன்றைக்கும் அந்த திட்டம் சிறந்த முறையில் பலருக்கும் பயன்பட்டு வருகிறது'.

இப்போதைய காலகட்டத்தில் பலரும்  உடற்பயிற்சி செய்வது இல்லை. அதற்கு பல காரணங்களும் சொல்கிறார்கள். நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள் ?

'உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லை, நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன் என்று சொல்வதெல்லாம் சும்மா. நீங்கள் உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தால், எல்லாம் நிச்சயமாக நடக்கும். எவ்வுளவு வேலை இருந்தாலும் காலை 5 மணியிலிருந்து 7 மணி வரை படுக்கையில் தான் இருப்பார்கள். அந்த சமயத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். நான் தினமும் காலையில் 4.45க்கு எழுந்து 10கி.மீ., ஓடுகிறேன். அப்படி ஓடி முடித்ததும் கால்வலி அதிகமாக இருக்கும். இருந்தும் நான் என் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது. சர்க்கரை நோய் இருந்தாலும், தினமும் ஓடுவதால் சர்க்கரையின் அளவு சரியாக இருக்கிறது. டயட் எல்லாம் வைத்துக்கொள்வது இல்லை. உடம்பு தான் நமக்கு மிக முக்கியமான ஆயுதம். அதை சரியாக வைத்துக் கொண்டால் எல்லாம் சரியாக இருக்கும். இளைஞர்கள் கண்டிப்பாக யோகா கற்றுக்கொள்ள வேண்டும். அதன் முக்கியத்துவத்தை என்னைப்போல் 56 வயதாகும்போது நீங்களும் உணர்வீர்கள்'.

 



சைதாப்பேட்டை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறீர்கள். இந்த நேரத்தில் எப்படி உணர்கிறீர்கள் ?

'நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி. ஐந்து ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துரைப்பேன். இந்த முறை நான் எனக்காக பிரசார  வேனை வடிவமைத்துக்கொள்ளவில்லை. காரணம், முழுக்க முழுக்க நடந்தே பிரச்சாரம் செய்யலாம் என்று இருக்கிறேன். வித்தியாசமாகவும் இருக்கும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்'.

நீங்களும் ஸ்டாலின் வாக்கிங் நண்பர்களாமே ?

'ஆம். நானும், தளபதி ஸ்டாலினும் பல ஆண்டுகளாக ஒன்றாக வாக்கிங் செல்கிறோம். அது எங்களுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்தி இருக்கிறது. தினமும் குறைந்தது 10 கி.மீ., இருவரும் நடப்போம். அதன்பிறகு யோகா, மூச்சுப்பயிற்சி செய்வோம். 'மா.சு எப்போதும் இளமையாக, எனர்ஜியாக இருக்கக் காரணம், ஓடிக்கிட்டே இருக்கிறது தான்' என்று அடிக்கடி தளபதி தொண்டர்களிடத்தில் சொல்லுவார். கடந்த மூன்று மாதங்களாக 'நமக்கு நாமே' பிரசாரப் பயணங்களில் இருப்பதால் அவர் நடைபயிற்சிக்கு வருவதில்லை. ஆனால், எந்த ஊரில் இருக்கிறாரோ அங்கு கண்டிப்பாக பயிற்சியில் ஈடுபடுவார்.'

-மா.அ.மோகன் பிரபாகரன்
படங்கள் & வீடியோ : தி.குமரகுருபரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ