Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு நிஜ ‘தெறி’ போலீஸ்!

எடுப்பான உடை, கம்பீரமான நடை, கட்டுமஸ்தான உடல்... ‘தெறி’க்கவிடுகிறார் ஆவின் லஞ்ச ஒழிப்பு துறை ஐ.ஜி., ரவி. ’’ஹாய்’’ என கை கொடுக்கும்போதே நம் உள்ளங்கை இறுக்கத்தில் அவரது ஃபிட்னெஸை உணர முடிகிறது. துறுதுறுப்பு, சுறுசுறுப்பு, உற்சாகம், உத்வேகம் என அவரிடம் பேச ஆரம்பித்தால் அந்த எனர்ஜி நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

’’ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வெரியப்பூர் கிராமம்தான் என் சொந்த ஊர். விவசாய நிலங்களுடன் கூடிய பண்ணை வீடு எங்களுடையது. எங்கள் அப்பா ஒரு குதிரை வளர்த்தார். எனக்கு 6 வயது இருக்கும்போதே அந்த குதிரை மீது ஏறி விளையாடுவேன். படித்தப் பள்ளிக்கூடங்களிலும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இயல்பாகவே எனக்கு உடல்நிலை மீது அதிக அக்கறை உண்டு. இப்போது, ஜிம்மில் வொர்க் அவுட் செய்வதற்கு முன்பு வார்ம் அப், ஸ்ட்ரெச் செய்துவிட்டு கார்டியோ எக்சர்சைஸ், வெயிட் டிரைனிங்,  டம்பெல்ஸ், அயன்மேன் போன்றவற்றை செய்வேன்.  இரவு ஒரு மணி நேரம் ஷெட்டில் விளையாடுவேன். நேரம் இல்லை என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் வேலை. நம் உடம்பைக் கவனிக்க ஒதுக்க முடியாத நேரத்தை வேறு எதற்குப் பயன்படுத்தப் போகிறோம்? சாப்பிடுவது, குளிப்பது போல உடற்பயிற்சியையும் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.’’

உங்களின் ஒரு நாள் மெனு?

’’காலை 5 மணிக்கு விழித்துக் கொள்ளுவேன். வெறும் வயிற்றில் 1 லிட்டர் தண்ணீர் குடிப்பேன். குடித்த  தண்ணீர் வியர்வையாக வெளியேறும் வகையில் 1 மணி நேரம் வாக்கிங், ஜிம் எக்சர்சைஸ் செய்வேன். பிறகு இளநீர், இஞ்சி, தேன் கலந்து ஒரு மணி நேரம் வைத்திருந்த பானத்தை அருந்துவேன். காலை உணவு பப்பாளி, கிவி, அத்தி, அன்னாச்சி (அல்லது) மாதுளை கலந்த ஃபுரூட் சாலட். அத்தோடு 4 முட்டையின் வெள்ளைக்கரு , ஒரு முட்டையின் மஞ்சள் கரு என மொத்தம் 5 முட்டைகள் சாப்பிடுவேன். இவற்றுக்கு சைட் டிஷ்ஸாக கருவேப்பில்லை, கொத்தமல்லி, வல்லாரை சேர்த்து அரைக்கப்பட்ட சட்டினி. இதுதான் என் காலை உணவு.

மதியம் ஒரு கப் அரிசி சாதம். இரண்டு கப் காய்கறிகள், கீரை. கட்டாயம் தயிர் இருக்கும். மாலை சுமார் 4 மணிக்கு ட்ரை ஃபுரூட்ஸ், அத்தோடு 2 முட்டை. இரவு 2 சப்பாத்தி அல்லது தோசை. இதற்கு பருப்பு குழம்பு. வாரத்தில் 2 நாட்கள் அசைவம் சாப்பிடுவேன். ஒரு நாளைக்கு 5 லிட்டர் தண்ணீர் குடிப்பேன். இதுதான் என்னுடைய ஒரு நாள் மெனு. கலோரி வாட்ச் கட்டி இருக்கிறேன். கலோரி பேலன்ஸ்டாகதான் சாப்பிடுவேன்’’


ஒரு போலீஸ் எப்படி இருக்க வேண்டும்?

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கம்பீரமாகவும், எப்போதும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும். சோம்பல் இருக்கக்கூடாது.

ஆனால் பெரும்பாலான போலீஸார் தொப்பையோடு இருக்கிறார்களே?

’’காவல்துறையினருக்கு 24 மணி நேர வேலை என்பதால் பேலன்ஸ்ட் டயட் கடைபிடிக்க முடிவதில்லை.  கிடைக்கும் இடைவெளியில் அருகில் கிடைக்கும் ஃபாஸ்ட் ஃபுட் உணவை வாங்கி சாப்பிடுகிறார்கள். தொப்பைக்கு இது முக்கியக் காரணம்’’ 


ஐ.ஜி-யின் ஃபிட்னெஸ் டிப்ஸ்...

* டயட் என்பது பட்டினி அல்ல. சரியான உணவை, சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிடுவது தான் டயட்.

* தேங்காய் எண்ணை மிகச் சிறந்தது. அமெரிக்காவில் தேங்காய் எண்ணையை கேப்சூலாக அடைத்து, காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுகிறார்கள்.

* உடலுக்கு தேவையான பாதி கொழுப்பை கல்லீரல் உற்பத்தி செய்கிறது. இன்னொரு பாதி நாம் சாப்பிடுவதின் மூலம் கிடைக்கிறது. நாம் கொழுப்பு உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாதபோது கல்லீரலே அதிக அளவு கொழுப்பை உறுப்பத்தி செய்கிறது. இதனால்தான் உடல் பருமன் ஏற்படுகிறது.

* வாரம் 21 முறை சாப்பிடுகிறோம். அதில் 20 முறை பேலன்ஸ்ட் டயட்-ஆகவும், 1 முறை ஃபுல் கட்டும் கட்டலாம்.

* ஃபிட்னெஸில் கிங் என்பது வாக்கிங். குயின் என்பது ஸ்விம்மிங்.

 


அஜீத், விஜய், சூர்யா இவர்களில் யாருக்கு போலீஸ் கெட்டப் பொருத்தமாக இருக்கிறது?

’’மூன்று பேருக்குமே போலீஸ் கெட்டப் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் சூர்யாவுக்குதான் போலீஸ் யூனிஃபாம் நச் என்று பொருந்துகிறது. என் மார்க் அவருக்குதான்’’ 

சினிமா ஹீரோக்கள் போலீஸ் கேரக்டரில் நடிப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

’’வரவேற்கதக்கதுதான். ஆனால்  எந்த பதவிக்கு என்ன ஸ்டார் அணிவது என்று தெரியாமல்  மாற்றி மாற்றி அணிந்துக்  கொள்ளுகிறார்கள். உதாரணத்திற்கு ஒரு டி.எஸ்.பி., அணிய வேண்டிய ஸ்டார் இன்ஸ்பெக்டர்களுக்கும், இன்ஸ்பெக்டர் அணிய வேண்டிய ஸ்டார் எஸ்.பி.-க்கும் இருக்கும். இதை நான் சந்திக்கும் டைரக்டர்களிடம் சொல்லியும் வருகிறேன்"

-வீ.கே.ரமேஷ்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன். 

எடிட்டர் சாய்ஸ்