Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ்நாட்டின் பிரமாண்டமான ஜிம் எங்கிருக்கிறது தெரியுமா?

தமிழ்நாட்டின் பிரமாண்டமான ஜிம் எங்கிருக்கிறது? அதை எந்தக் கட்டடத்திலும் தேட வேண்டாம். ஓர் அதிகாலையில் எழுந்து மெரீனா பீச்சுக்கு வாருங்கள். அண்ணா சதுக்கத்தில் தொடங்கி கலங்கரை விளக்கம் வரைக்கும் எறும்பு மொய்ப்பது போல ஆயிரக்கணக்கான மனிதர்கள் விதம்விதமான உடற்பயிற்சிகளை செய்தபடியே இருக்கிறார்கள். இன்னதென்று யூகிக்க முடியாத ஏராளமான உடற்பயிற்சிகள்.

கும்பலாக சேர்ந்து காரணமே இல்லாமல் சிரிக்கிறார்கள். அது லாஃப்டர் தெரபி. வாய்விட்டு சிரித்து நோய்விட்டுப் போக வைக்கும் ஏற்பாடு. ‘எங்க, நீங்க சிரிங்க பார்ப்போம்’ என்று சொல்லி நாம் சிரித்துக் காட்டியதும், ‘உங்களுக்கு சிரிக்கவே தெரியலை. வேறும் உதட்டை மட்டும் திறந்து மூடுறீங்க. போங்க, போய் சிரிக்க ட்ரெயினிங் எடுத்துக்கிட்டு வாங்க...’ என்று கலாய்த்து வெடிச் சிரிப்பு சிரிக்கிறார் ஒருவர். கூச்சம் ஒதுக்கி, தயக்கம் தள்ளிவைத்து, வயது வித்தியாசம் மறந்து, ஆண்-பெண் வேறுபாடு துறந்து எல்லோரும் ஒவ்வொரு நாளும் ஒன்று சேர்ந்து, வட்டமாக நின்று மெகா சிரிப்பு சிரிக்கிறார்கள். அந்தக் காட்சிக்குப் புதியவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்கள் சிரிப்பொலி சேனலை லைவ்-வில் பார்ப்பதைப் போல வேடிக்கைப் பார்க்கின்றனர். ’யார் எதைப் பார்த்தா எங்களுக்கு என்ன? சிரிப்பது எங்கள் கடமை’ என்பதைப் போல அவர்களின் சிரிப்புச் சத்தம் ஒலிக்கிறது. 


சற்று நகர்ந்தால் நான்கைந்து பையன்கள் நின்ற இடத்தில் இருந்தே தலைகீழாய் குதிக்கிறார்கள். ’மெட்ராஸ்’ படப் பாடல்களில் ஒரு இளைஞர்கள் குழு, அப்படியே நின்ற இடத்தில் இருந்தே டைவ் அடித்து டான்ஸ் ஆடுவதைப் போல, இவர்கள் செய்வதைப் பார்க்க ஆச்சர்யமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. இவர்கள் ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுப்பவர்கள். மாஸ்டர் சகிதம் தினமும் ஆஜராகி, துவைத்து துணியை பிழிவதைப் போல உடம்பை முறுக்கி உத்வேகத்துடன் பயிற்சி எடுக்கிறார்கள்.
நான்கு இளைஞர்கள் கையில் க்ளவுஸுடன் பாக்ஸிங் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆச்சர்யம், அந்த நான்கு பேருக்குமான பயிற்சியாளர், ஒரு 80 வயது முதியவர். ஒரு காலத்தில் அவர் பாக்ஸிங் பிளேயராம். தன் உடல் தளர்ந்து நிலையில் புதிய ’பூலோகங்களை’ உற்பத்தி செய்யும் வேலையில் அவர் பிஸி. 

 யோகா, சூரிய நமஸ்காரம், மூச்சுப் பயிற்சி செய்யும் குழு அமைதியாக தங்கள் வேலையில் ஈடுபட்டிருக்கிறது. ஒரு இளைஞர்கள் குழு, மாரத்தான் பயிற்சியில் முழு வேகத்தில் ஈடுபட்டுள்ளனர். ’’மாரத்தானுக்கு பயிற்சி ரொம்ப முக்கியம் பாஸ். மாசக் கணக்கில ட்ரெயினிங் எடுத்தாதான் மாரத்தான்ல பங்கெடுக்கவே முடியும். சென்னையின் அடுத்த மாரத்தான் ஜூலையில் நடக்கும். அதுக்காகத்தான் நாங்க தயாராகிட்டு இருக்கோம்’’ என்கிறார்கள்.இவர்களைத் தாண்டி ஒரு க்ரூப் தலையில் ஹெல்மெட், சைக்கிளோடு வித்தியாசமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் சைக்கிளிங் செல்பவர்கள். ‘’சைக்கிளிங் என்பது ஸ்போர்ட்ஸ் என்பதைத் தாண்டி, அது ஒரு நல்ல ஸ்ட்ரெஸ் பஸ்டர், உடற்பயிற்சி. இரவு வேலை, தூக்கமின்மை என தவித்த எனக்கு சைக்கிளிங்தான் மருந்தாக இருந்தது. என்னை அதுதான் சீரமைத்தது’’ என்கிறார் ஒரு சைக்கிளிங் நபர். இவர்கள் ஒரு குழுவாக சேர்ந்துகொண்டு சென்னையை குறுக்கும், நெடுக்குமாக சைக்கிளிலேயே சென்று வருகிறார்கள். உசேன் போல்ட் மாதிரியான ஒரு கட்டுமஸ்தான இளைஞர் பின்னோக்கி நடந்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் வித்தியாசமாக செய்யப்படும் எதைப் பார்த்தாலும், ‘இது ஒரு வகையான உடற்பயிற்சிப் போலிருக்கிறது’ என நமக்கு நாமே நினைத்துக்கொள்கிறோம்.


கோடை வெப்பத்தின் வெயில் இன்னும் ஆரம்பிக்காத காலைக் காற்று. உடற்பயிற்சி செய்ய வருவோருக்கு விற்பனை செய்வதற்காக முளைகட்டியப் பயிறு முதல் அருகம்புல் ஜூஸ் வரை விதம்விதமான கடைகள் முளைத்திருக்கின்றன. பருத்திப்பால், சூப், ஹெர்பல் மிக்ஸ் என தேடி தேடி சாப்பிடுகிறார்கள்.

தன்னை நோக்கி வருவோருக்கு இதமான கடல் காற்றையும், வங்கக் கடலின் குளிரையும், நல்ல உடல் நிலையையும் பரிசாகத் தருகிறது மெரினா.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ