Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

6 பேக் கூலித் தொழிலாளி!

இணையத்தில் வேறு எதையோ தேடிக் கொண்டிருந்தபோது இந்தப் புகைப்படம் கண்ணில் சிக்கியது. முரளி கிருஷ்ணா என்ற புகைப்படக்காரர் 2014-ம் ஆண்டு எடுத்தது.

''கேமராவுடன் என்னைப் பார்த்ததும், கோயம்பேடு காய்கறி மார்கெட்டின் இந்த கூலித் தொழிலாளி என்னை ஈர்க்க பல வழிகளிலும் முயற்சித்தார்'' என்று புகைப்படத்துக்கான குறிப்பைத் தந்திருக்கிறார் முரளி கிருஷ்ணா.

அதை பார்த்ததில் இருந்து கண்களை எடுக்க முடியவில்லை. அந்தத் தொழிலாளியின் உடலும், முகமும், வெளிப்படுத்தும் உணர்ச்சிகளும்... பல விவரிக்க முடியாத மன எழுச்சிகளுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.


 

கண்ணாடிக்கு அந்தப் பக்கம் இருந்து எட்டிப் பார்க்கும் கண்கள், நம்மை பல கேள்விகளைக் கேட்கின்றன. அவர் தன் உடம்பின் வலுவை யாரை நோக்கி நிரூபிக்க முயற்சிக்கிறார்? யாரோ ஒரு முகம் அறியா புகைப்படக்காரரின் கேமராவுக்கு எதற்காக அவர் இத்தனை பிரயாசையுடன் போஸ் கொடுக்க வேண்டும்? அந்தப் புகைப்படத்தை அவர் ஒருபோதும் பார்க்கப் போவது இல்லை. இணையத்தில் தன் படம் சுற்றிவரும் என்றோ, பலர் லைக் செய்வார்கள் என்றோ அவருக்குத் தெரியாது. இருப்பினும், யாரோ ஒருவரிடம் தன் உடலை இறுக்கிக் காட்டுகிறார். அதுகுறித்த தயக்கமோ, கூச்சமோ அவருக்கு இல்லை. அதன் மூலம் அவர் மனம் கிளர்ச்சி அடைகிறது. சொற்களால் விவரிக்க இயலாத ஓர் இளைப்பாறுதலை அவர் பெறுகிறார். 

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை,  நம் கண்களை ஒரு கணம் பார்த்துவிட்டு பறந்துவிடுகிறது. அந்தப் பறவை நம்மை ஒரு பொருட்டாக மதித்துப் பார்த்ததா? நம்மைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கம் இருந்ததா? ஏன் அது பார்த்தது? தெரியவில்லை. ஆனால், அது பார்த்தது; நாமும் பார்த்தோம். அதைப்போல அவர் அந்த கேமராவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். காலத்தின் இடைவிடாத இயக்கத்தில் தன்னை ஓர் ஒளிப்படமாக பதிவு செய்துவைத்துவிட்டு அவர் வெங்காய மூட்டையையோ, அவரைக்காய் மூட்டையையோ தூக்கிக் கொண்டிருக்கிறார்.

அந்த மனிதரின் உடல் வலிமை, வைரம் பாய்ந்த மரமாய் மாறியிருக்கும் தன்மை... என இந்தப் புகைப்படம் romanticise செய்து புரிந்துகொள்ளக்கூடிய தன்மையையும் கொண்டிருக்கிறதுதான். பொருந்தாத,  இடுப்பில் நிற்காத பேண்ட்டும், உழைப்பால் சுரண்டப்பட்ட உடலும் அவர் மீது பரிதாபத்தையும் கோருகிறதுதான். இவை இரண்டையும் காட்டிலும் நட்ட நடு வீதியில், எத்தனையோ கண்கள் பார்த்திருக்க... ஒரு முகமறியா மனிதரின் முன்னால் தன் உடலை ஒப்புக்கொடுப்பதன் மூலம் அவருக்கு ஏதோ ஒன்று கிடைக்கிறது. ஏதோ ஒன்று நிறைவு செய்யப்படுகிறது. 

- சிராஜ்

புகைப்படம்: முரளி கிருஷ்ணா

https://www.flickr.com/photos/muralikanakatla/14124828440

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ