Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மலேரியாவுக்கு முடிவு கட்டுவோம்!

 

ஏப்ரல் 25: உலக மலேரியா தினம்

ஒவ்வொரு ஆண்டும் மலேரியா நோயை தடுக்க, தடுப்பு மருந்து வழங்க, நோய் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க என்று இந்தியா செலவிடும் தொகை 11,640 கோடி ரூபாய் என்கிறது உலக சுகாதார நிறுவன புள்ளிவிவரம். ஒவ்வொரு ஆண்டும் 6.6 லட்சம் பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருப்பது இதுதான். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டு மக்கள் தொகை 33 கோடி. இதில் ஒவ்வொரு ஆண்டும் 7.5 பேருக்கு மலேரியா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாகவும், 8 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும் தேசிய புள்ளிவிவரம் கூறுகிறது. உலக மலேரியா ஆய்வறிக்கை 2014 படி, இந்திய மக்கள் தொகையில் 22 சதவிகிதம் பேர் மிக அதிக அளவில் மலேரியா பாதிப்புக்கு ஆளாகும் பகுதியில் வசிப்பதாகவும், வெறும் 11 சதவிகிதம் பேர்தான் மலோரியா தொற்று பாதிப்பு இல்லாத பகுதியில் வசிப்பதாகவும் தெரிவிக்கிறது.

பொதுவாக, மிகவும் பின்தங்கிய, குடிசை மற்றும் வறுமையில் வாடும் மக்கள் வசிக்கும் பகுதியில்தான் மலேரியாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் மலேரியாவால் உயிரிழப்பு இல்லை என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் மலேரியா காய்ச்சல் தொற்று பாதிப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில், 354 பேருக்கு மலேரியா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தேசிய பூச்சிகள் மூலம் பரவும் நோய் தடுப்புத் திட்ட இயக்குநரக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
மலேரியா என்பது கொசுக்கள் மூலம் பரவும் ஒரு ஒட்டுண்ணி. இதற்கு பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் (plasmodium vivax) என்று பெயர். இந்த ஒட்டுண்ணியை பரப்பும் கொசுவுக்கு அனோபிலஸ் (Anopheles) என்று பெயர்.



அறிகுறிகள்

 தொற்றுள்ள கொசு கடித்த, 10-15 நாளில் நோய் வெளிப்படும். நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக உள்ளவர்களுக்கு 7 நாளில் கூட வெளிப்படலாம்.


 மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாக வெளிப்படும். முதல் கட்டத்தில் நோயாளிக்கு லேசான காய்ச்சல், தலை வலி, உடல் வலி, வாந்தி, சோர்வு இருக்கும். இதனைத் தொடர்ந்து குளிர்க் காய்ச்சல் ஏற்படும். உடல் நடுக்கம் எடுக்கும். இது சுமார் அரை மணி நேரம் நீடிக்கும்.


 இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகும். உடல் அனலாகக் கொதிக்கும். இது சுமார் ஆறு மணி நேரம் நீடிக்கும்.

 

 

 மூன்றாவது கட்டத்தில் காய்ச்சல் குறைந்து, வியர்வை கொட்டும். உடல் ஐஸ்போல குளிர்ந்துவிடும். இப்போது நோயாளி சாதாரணமாகக் காணப்படுவார். பிறகு, இதே காய்ச்சல் மறுநாளோ ஒரு நாள்விட்டு ஒரு நாளோ அல்லது மூன்று, நான்கு நாட்களுக்கு ஒரு முறையோ மீண்டும் வரும்.

 இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

பரிசோதனை

எளிய ரத்த பரிசோதனை மூலம் மலோரியா காய்ச்சலை கண்டறியலாம். மேலும், எந்த வகையான ஒட்டுண்ணி, மருந்துக்கு எதிராக செயல்படும் தன்மையைப் பெற்றுள்ளதா, ஏதேனும் உள் உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்பதை இதன் மூலம் கண்டறியலாம்.

தடுக்க...

 மலேரியா பரவக் காரணம் கொசுதான். எனவே, கொசு ஒழிப்பு மட்டுமே மலேரியா காய்ச்சலை குறைக்க ஒரே வழி. கொசுக்களை ஒழிக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்வதன் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களின் அபாயம் பெருமளவு குறைக்கப்படும்.



 கொசு உற்பத்தியைத் தடுக்க வேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, தண்ணீர் தேங்கியிருந்தால் அதில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பது போன்றவற்றைச் செய்யலாம். வீட்டில், கொசுக்கள் அடைவதைத் தடுக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் கொசுக்களை விரட்டலாம். இரவில் கொசுவலை பயன்படுத்துவதன் மூலம் மலோரியா பாதிப்பைத் தவிர்க்க முடியும்.

 வீட்டுச் சுவர்கள் மீது ‘டி.டி.டி.’ மருந்தை தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் ‘டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளிக்க, கொசுக்கள் மடியும்.

 சுத்தமான தண்ணீரில் மலேரியா கொசுக்கள் உற்பத்தி ஆவதால், வீட்டின் மேல்நிலைத் தொட்டிகளையும்  கீழ்நிலைத் தொட்டிகளையும் நன்றாக மூடிவைக்க வேண்டும்.

 வீட்டில் உள்ள நீர்த் தொட்டிகளை வாரம் ஒரு முறை சுத்தம்செய்து, குறைந்தது இரண்டு மணி நேரம் காயவைப்பதன் மூலமும் கொசு உற்பத்தியைத் தடுக்கலாம்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ