Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தோல்' கொடுப்பான் தோழன்....மண்ணில் தொலையும் தோலை மனிதருக்கு கொடுத்தால் என்ன?

தோல் தானம் குறித்த விழிப்பு உணர்வு குறைவாக உள்ள நிலையில், குஜராத் மாநிலத்தில் 100 வயதை கடந்த பவாய் என்ற பெண் தனது தோல்களை தானமாக கொடுத்துள்ளார். கடந்த மே 27-ம் தேதி அவர் மரணமடைந்ததையடுத்து அவரது உறவினர்கள் கூறியதன் அடிப்படையில் பவாயின் உடல் தோல்களை அவரது மகன் தானம் செய்துள்ளார். இந்த பெண்மணிதான் அதிக வயதில் தோல் நன்கொடை செய்த ஒரே நபர். இதற்கு முன் தோல் தானம் செய்த 92 பெண்களில் இவர்தான் வயதில் மிகவும் மூத்தவர்.

இந்தியாவில் தற்போதுதான் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வு உருவாகி வருகிறது. இப்போது பலரும் உடல் உறுப்புக்களை தானம் செய்ய பதிவு செய்கிறார்கள். உடல் உறுப்பு தானத்துக்கு உள்ள விழிப்புணர்வுகூட தோல் தானத்துக்கு இல்லை. விழிப்பு உணர்வு இல்லாத காரணத்தினால் பல நூறு பேர் ஒவ்வொரு வருடமும் தோல் தானம் பெற முடியாமல் மரணம் அடைகிறார்கள்.

தோல் தானத்தின் அவசியம் குறித்து சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தோல் துறையின் தலைவர் மற்றும் போராசிரியர் டாக்டர் ஜி.ஆர்.ரத்தினவேலிடம் பேசினோம் ,

''தமிழகத்தில் தோல் தானம் குறித்த விழிப்பு உணர்வு மிககுறைவாக உள்ளது. தோல்தானே என பலரும் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். தோல் மட்டும் இருந்தால் பலநூறு உயிர்களை காப்பாற்ற முடியும். அதாவது தீக்காயம் ஏற்பட்டு ஒவ்வொரு வருடமும் பலர் இறக்கிறார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை, ஒருவரின் உடலில் 30 சதவிகிதம் தீக் காயம் ஏற்பட்டவர்களை மட்டும்தான் காப்பாற்ற முடியும். அதற்கு அதிகமாக காயம் இருந்தால் அவரை காப்பாற்றுவது மிகவும் கடினம். ஆனால் அமெரிக்காவில் உடலில் 50 சதவிகிதம் பாதிக்கப்பட்டவர்களைகூட காப்பாற்ற முடிகிறது. காரணம் அங்கு தோல் குறித்த விழிப்பு உணர்வு அதிகமாக உள்ளது. தோல் தானம் இரண்டு வகையாக பெறப்படுகிறது. அதாவது உயிருடன் இருப்பவரின் உடலில் இருந்து பெறப்படும் தோல், இறந்தவரின் உடலில் இருந்து பெறப்படும் தோல் என இரண்டு வகையாக தோல் பெறப்படுகிறது.

இதில், உயிருடன் இருப்பவரின் தோலைப் பெறும்போது அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, செல்கள் அனைத்தும் அப்படியே இருக்கும். இதனால் சில சிக்கல்கள் வரக்கூடும். அதே நேரத்தில், இறந்தவரின் உடலில் இருந்து பெறப்படும் தோலில் இந்த சிக்கலுக்கு வாய்ப்பில்லை. தோல் தானம் கொடுப்பவர்களுக்கு ஏதாவது நோய் இருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், எய்ட்ஸ் தொற்று நோய்க் கிருமி, வைரஸ் கிருமி, வேறு ஏதாவது தோல் நோய்கள், ஹெபடைடிஸ் பி மற்றும் சி, பால்வினை நோய்கள், தோல் புற்றுநோய் உள்ளவர்களின் தோல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் தோல் தானம் செய்யலாம்.

ஒருவர் இறந்த 6 மணி நேரத்துக்குள் தோல்களை உடலிருந்து எடுத்து பதப்பப்படுத்தி வைக்க வேண்டும். அதிகபட்சமாக 5 வருடங்கள் வரை அந்த தோலை பதப்படுத்தி வைத்திருந்து பயன்படுத்த முடியும். தீக் காயம், சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது புண் ஏற்பட்டு அந்த இடத்தில் தோல் மூடாமல் இருப்பவர்கள், விபத்தில் சிக்கி தோல்களை இழந்தவர்கள் ஆகியவர்களுக்கு தோல் தேவைப்படும். இப்படி ஏதாவது ஒரு காரணத்தினால் பாதிக்கப்பட்டு, தோலை இழந்தவர்களுக்கு அந்த இடத்தில் தானமாக பெற்ற தோலை வைத்து ஒட்டி விடுவோம்.

அந்த தோல், காயம் ஏற்பட்ட இடத்துக்கு ஒரு பாதுகாப்பு வளையமாக இருக்கும். காயம் ஏற்பட்ட இடத்தில் ஒட்டிய தோல், 15 நாட்களில் உதிர்ந்துவிடும். அந்த 15 நாட்களுக்குள் காயம் ஏற்பட்ட இடத்தில் புதிய தோல் வளர்ந்துவிடும். தீக் காயம், வேறு வகையான காயம் ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு புதிய தோல் வருவதற்கு அங்கு கிருமிகளின் தாக்குதல் ஏற்பட்டு, உயிரிழிக்க நேரிடுகிறது. தோல் அதிகமாக கிடைக்கும்போது, அப்படிப்பட்ட உயிரிழப்புக்களை தடுக்க முடியும்.

தோல் வங்கிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே உள்ளன. சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் மட்டும்தான் தோல் வங்கிகள் உள்ளன. சென்னையில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் தோல் வங்கி உள்ளது. இன்னும் சில தினங்களில் ஸ்டான்லி மருத்துவமனையிலும் ஆரம்பிக்க இருக்கிறார்கள். தோல் வங்கியில் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்துக் கொடுத்து பதிவு செய்துக் கொண்டாலே தோல் தானம் கொடுக்க போதும். இறந்த பிறகு கருகி எரியும் அல்லது மண்ணுக்கு அடியில் மட்கி அழுகும் தோலை, தானமாக கொடுத்து பலரை வாழ வைக்க முடியும் என்றால் அதை செய்யலாமே" என்றார்.

தோள் கொடுப்பான் தோழன் என்பார்கள்......இறந்தபின் அழியும் தோலைக் கொடுத்து ஏன் தோல் கொடுத்த தோழனாகக் கூடாது நாம் !

- இரா.ரூபாவதி

எடிட்டர் சாய்ஸ்