Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் டாக்டரின் உணவு மெனு!

ம் உடல்நிலை ஆரோக்கியத்திற்காக மருத்துவரை அணுகும்போது, நீங்கள் அந்த வகையான உணவுகளை தவிர்த்தல் நல்லது, இந்த உணவுகளை சாப்பிடுவது சிறந்தது, இதுபோன்ற வழிமுறைகளை கடைப்பிடிப்பது ஆரோக்கியத்தைத் தரும் என டாக்டர்கள் ஆலோசனைகளைக் கூறுவார்கள். ஆனால், டாக்டர்கள் எத்தகைய உணவு முறைகளையும், பழக்க வழக்கங்களையும் கடைபிடிக்கிறார்கள் என பிரபல இதயநோய் நிபுணரான டாக்டர் சிவகடாட்சத்தை சந்தித்தோம்.

''ஒரு மருத்துவராக இருப்பதால, மத்தவங்க உடல்நிலை குறித்த எண்ணம்தான் எனக்கு அதிகமா இருக்கும். இருந்தாலும் குடும்பத்துக்கான நேரத்தை சரியா ஒதுக்குவதிலும் நான் சரியாகவே செயல்படுறேன். தினமும் காலையில வாக்கிங், ஆரோக்கியமான உணவுகள், போதுமான தூக்கம்னு என்னோட உடல்நிலை மேல என் மனைவி சாந்தகுமாரிதான் அதிகமான கவனம் செலுத்துறாங்க'' என புன்னகைக்கிறார், டாக்டர் சிவகடாட்சம். ‘‘நோயாளிகளோட உடல்நிலை அவருக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல அவரோட உடல்நிலையும், மன அமைதியும் எனக்கு முக்கியம் என கணவரின் உடல்நிலையின் முக்கியத்தை விளக்குகிறார், சாந்தகுமாரி சிவகடாட்சம்.

''ஹாஸ்பிட்டல்ல இருக்குற வேலைகளைப் பொறுத்து ஒவ்வொரு நாள் இரவும், அவர் வீட்டுக்கு வரும் நேரம் மாறுபடும். சராசரியாக 6 - 7 மணி நேரம் தூங்குவார். விடுமுறை நாளான சன்டே மட்டும் 8 மணிநேரம் தூங்குவார். தினமும் காலை எழுந்து பல் துலக்கியதும் டிக்காஸன் காபி குடிச்சுட்டு, அரை மணி நேரம் பேப்பர் படிப்பாரு. தொடர்ந்து 30 - 40 நிமிடம் வெளியில வாக்கிங் போயிட்டு வருவாரு.

வாக்கிங் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்த உடனே குளிச்சுட்டு, காலை உணவு சாப்பிட்டுட்டு உடனே ஆஸ்பிட்டல் கிளம்பிடுவாரு. ஆஸ்பிட்டல்ல பசி எடுத்தால் மட்டும் ஒரு டீ, ரெண்டு பிஸ்கட் சாப்பிடுவாரு. சில நாட்கள்ல சூப் கொடுத்து அனுப்புவேன். மதியம் 2.30 - 3 மணிக்குள்ள வீட்டுக்கு வந்து சாப்பிடுவாரு.

மதிய உணவு முடிச்சுட்டு, அரை மணியிலிருந்து ஒரு மணிநேரம் வரை தூங்குவாரு. பின்னர் காபி அல்லது டீக்கூட இரண்டு பிஸ்கட் அல்லது கொஞ்சம் மிக்சர் கலவையை சாப்பிட்டுட்டு ஆஸ்பிட்டல் கிளம்பிவிடுவார். ஆஸ்பிட்டலில் பசி வந்தா மட்டும் ஒரு டீ அல்லது காபி குடிப்பார். இரவு 9 - 10 மணிக்கு வீட்டிற்கு வருவார்.

இரவு நேரத்துல குடும்பத்தோடு சாப்பிட்டு முடித்து, எல்லாரும் பேசிட்டு இருப்போம். பேத்திக்கூட கொஞ்ச நேரம் சிரிச்சுப்பேசி விளையாடிட்டு, தூங்கப் போயிடுவாரு.

நாங்க டாக்டர் ஃபேமிலிங்கிறதால ரொம்ப டயட்டை கடைபிடிக்கிறது, உணவுகள்ல ஆயில் சேர்க்காம, இனிப்பு, ஸ்நேக்ஸ் சாப்பிடாம இருக்குறதுங்கிற மாதிரியெல்லாம் செய்ய மாட்டோம். நாங்களும் எல்லா உணவு வகைகளையும் சாப்பிடுவோம். ஆனா, அந்த உணவுகளால உடலுக்கு எந்த பிரச்னையும் வராத அளவுக்கு, போதிய சத்துகள் இருக்கிறதான்னும் பார்த்துதான் சாப்பிடுவோம்'' எனக்கூறும் சாந்தகுமாரி, டாக்டர் சிவகடாட்சத்தின் ஒருநாள் மெனுவை பட்டியலிடுகிறார்.

''காலை:
வேகவைத்த முளைக்கட்டிய தானியக் கலவை - ஒரு கப்
2 டோஸ்டட் பிரட்டுக்கு நடுவில் வெள்ளைக் கரு முட்டை ஆம்லெட் வைத்தது
ஃப்ரூட்ஸ் கலவை - ஒரு கப்

மதியம்:
வெள்ளை சாதம்
பருப்பு சாம்பார்
இண்டு வகை பொறியல்
எலுமிச்சை ரசம்
தயிர்
எதாவது ஒரு சேலட் பச்சடி

இரவு:
வெள்ளை முள்ளங்கி சப்பாத்தி - 3
வெஜிடபுள் குருமா
ஆப்பிள் - அரை

வாரத்தில் ஒரு நாள் மதியம் மட்டும் மீன் ரெண்டு துண்டு, மற்றொரு நாள் சிக்கன் ரெண்டு துண்டு அல்லது ஒரு லெக் பீஸ் சாப்பிடுவார். மாதத்தில் இரண்டு நாள் மதியத்தில் மட்டும் மட்டன் தலா ரெண்டு துண்டுகள் சாப்பிடுவார். வாரத்தில் ஒருநாள் ஈவுனிங் டீ நேரத்தில் மட்டும் எதாவது ஒரு காய்கறி சூப் அல்லது ஒரு வடை அல்லது ஒரு முறுக்கு போன்ற ஆயில் ஸ்நேக்ஸ் சாப்பிடுவார். எப்போதாவது பாதி இனிப்பு ஸ்வீட் சாப்பிடுவார். மாதத்தில் ஒருநாள் ஒருவேளை மட்டும்  3 பூரியும், மாதத்தில் ஒருவேளை மட்டும் ஜங்க் புட் சாப்பிடுவார். பொட்டேட்டோ ஃபிரை, பிட்டல், முறுக்கு, குடைமிளகாய் கூட்டு, வெந்தயக்குழம்பு, பிரான்ஸ் தொக்கு, வேர்க்கடலை பருப்பி ஆகிய உணவு வகைகளும் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.

அவரோட பிசி ஷெட்யூலுக்கு நடுவில் கிச்சன் பக்கமே வரமாட்டார். இந்த உலகத்துல மாரடைப்பால உயிரிழக்குறவங்க எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுது. என் கணவர் இருதய நோய் நிபுணர் என்பதால அவர்கிட்ட வர்ற நோயாளிங்கக்கிட்ட உங்களுடைய பிள்ளை, பேரக் குழந்தைங்களுக்கு நேரம் ஒதுக்கி சந்தோஷமா சிரிச்சுப் பேசி, விளையாடி மகிழுங்க. உங்களுக்கு எல்லா டென்ஷனும், பிரச்னையும் குறைஞ்சிடும்னு சொல்லுவாரு. அதேமாதிரி, அவருக்கு கிடைக்கிற ஓய்வு நேரங்கள்ல எங்களுடைய பேத்திக்கூட விளையாடி பொழுதைக் கழிப்பாரு.

வாரத்தில் ஒரு நாள் சினிமாவுக்குப் போயிட்டு, அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்டு வருவோம். வருஷத்துல சிலநாட்கள் சுற்றுலா போயிட்டுவருவதால், தொடர்ந்து அவரால் ஆக்டிவாக மருத்துவ சேவையை செய்ய முடிகிறது'' என புன்னகையுடன் தெரிவிக்கிறார், சாந்தகுமாரி.

- கு.ஆனந்தராஜ்

படங்கள் : எம்.உசேன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ