Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாய்வழிச் சுகாதாரம் - விழிப்புஉணர்வு மாநாடு!

                                                              

அடுத்த மாதம், சென்னையில் இரு முக்கிய மருத்துவ மாநாடுகள் நடைபெற இருக்கின்றன. ஒன்று, வாய்வழி நோய்க்குறியியல் மற்றும் மருந்து குறித்த 18-வது சர்வதேச மாநாடு (International Association of Oral Pathologists - ஐஏஓபி). இன்னொன்று, மேல்தாடை மற்றும் முகம் சார்ந்த நோய்க்குறியியல் மருத்துவர்கள் இந்திய சங்கத்தின் 25-வது மாநாடு (Indian Association of Oral and Maxilofacial Pathologists - ஐஏஓஎம்பி). இரண்டுமே, சென்னை, ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில், வரும் செப்டம்பர் 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடக்க இருக்கின்றன. சுமார் 700 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டின் மூலம் புற்றுநோய், முன்புற்றுநோய், ஹெச்ஐவி தொற்று ஆகியவற்றுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான பல்வேறு முறைகள் குறித்து மருத்துவர்கள் தங்களை அப்டேட் செய்துகொள்ளலாம். அதாவது, இந்த முக்கிய நோய்களுக்கான சிகிச்சைகளைப் பயிற்றுவிப்பதற்கு, நோய்களைக் கையாளுவதற்கு உலகம் முழுவதும் உள்ள வாய்வழி நோய்க்குறியியல் மருத்துவர்களுக்கு ஐஏஓபி மற்றும் ஐஏஓஎம்பி ஆகிய இரண்டும் உதவி புரியும்.

இந்திய வாய்வழி நோய்க்குறியியல் சங்கத் தலைவர் கே.ரங்கநாதன். இவர், சென்னை, ராகாஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவ நிபுணர். ``சென்னையில் ஐஏஓபி மற்றும் ஐஏஓஎம்பி மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்துவதும், வாய்வழி நோய்க் குறியியல் மருத்துவர்களின் சர்வதேச சங்கத்துடன் இணைந்து செயல்படுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாய்வழி நோய் கண்டறிதல் மற்றும் மேலாண்மையில், உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு இந்த மாநாடு முன்னோடியாக அமையும். இந்தக் கருத்தரங்க நடவடிக்கைகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட விரிவுரைகளின் சுருக்கங்களும் ஒரு சர்வதேச இதழில் வெளியிடப்படும். ஐசிஎம்ஆர் (மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில்) மற்றும் என்ஏபிஎல் (பரிசோதனை மற்றும் அளவீட்டு ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகாரக் குழு) ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார்கள்’’ என்கிறார் அவர்.

இந்த மாநாட்டின் அமைப்புச் செயலாளர் உமாதேவி கே.ராவ். ``வாய் வழிச் சுகாதார நலம் சிகிச்சையில் ஈடுபட்டிருப்பவர்களை ஒருங்கிணைப்பதற்காக, எங்களுடைய குழு அசாதாரண முயற்சி எடுத்திருக்கிறது. இந்த மாநாட்டு வேலைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மற்றொருபுறம், ராகாஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையால் இன்னொரு முக்கிய செயல்பாடும் நடந்துள்ளது. அது, `பள்ளிக்கூட வாய்வழிச் சுகாதாரத் திட்டம்.’ சென்னையில், 8 முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான திட்டம் அது. அதாவது, வாய்வழிச் சுகாதாரம் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடையே விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறோம்’’ என்றார் அவர்.

வாய்வழி நோய்க் குறியியல் மருத்துவர்கள் சர்வதேசச் சங்கம், 1981-ம் ஆண்டு நிறுவப்பட்டது. வாய் நோயியலில் ஆர்வமுள்ள எந்த ஒரு தனிநபரும் இதில் சேரலாம். இந்தச் சங்கத்தின் தொழில்முறை சார்ந்த நெறிமுறைகள், விதிகள் சிலவற்றுக்கு அவர்கள் உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்தச் சங்கம், உலகம் முழுக்க இருக்கும், 540 நோய்க்குறியியலாளர்கள், வாய்வழி நோய்க்குறியியல் கல்வியில் தனித்துவம் பெறவும், நிபுணராகவும் உதவுகிறது. தற்போது, இதன் இந்திய சங்கத்தில் 2,000 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், 700 - 800 பேர் செயல் உறுப்பினர்கள்.

மேலும் தகவல்களுக்கு... http://www.iaop.com/ மற்றும் http://www.iaomfp.org/

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ