Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மகிழ்ச்சி தரும் வயது எது... இருபதா, அறுபதா?


`20-களில் இருக்கும் இளைஞர்களைவிட, தாத்தாக்களும் பாட்டிகளும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.’ இப்படிச் சொன்னால் நம்ப முடிகிறதா? `ஆனால், அதுதான் உண்மை’ என்கிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஓர் ஆய்வு.  

முதுமை என்பது சாபம். சித்தார்த்தன் புத்தனானதற்கு முக்கியக் காரணங்கள் மூன்று... முதுமை, நோய், மரணம். அவற்றில் முக்கியமான ஒன்றான முதுமைப் பருவத்தில் இருப்பவர்கள், இளைஞர்களைவிட மனதளவில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள, கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், அது நிஜம்தான் என நிரூபித்திருக்கிறது, `தி ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் சைக்கியாட்ரி’ (The Journal of Clinical Psychiatry) இதழில் வெளிவந்திருக்கும் ஆய்வு முடிவு. கலிஃபோர்னியாவில் இருக்கும் சான் டியாகோவில், 21- 99 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,546 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் உடல்நலம், புரிதல் திறன், மனநலம் தொடர்பான பல கேள்விகளை முன்வைத்திருக்கிறார்கள், ஆய்வு நடத்தியவர்கள். வாழ்க்கையில் அவர்கள் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறார்களா, மனஅழுத்தம், கவலை, பதற்றம் இவற்றுக்கு ஆளாகிறார்களா என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்த ஆய்வின் தலைவர், டாக்டர் திலிப் வி.ஜெஸ்டே (Dilip V.Jeste), முதுமை மற்றும் மனநோய் மருத்துவர் (Geriatric psychiatry); சான் டியாகோவில் இருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில், சென்டர் ஆன் ஹெல்த்தி ஏஜிங் மையத்தின் இயக்குநர். அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்... `முதுமைப் பருவம் என்பது மிக மோசமானது, வயதானவர்களிடம் மனச்சோர்வு, மனஅழுத்தம், சிடுசிடுப்பு இவைதான் இருக்கும் என்கிற ஒரு கருத்து நிலவுகிறது. அதன் உண்மைத் தன்மையை ஆராய்வதற்காகவே இந்த ஆய்வை நடத்தினோம்.’

`உடலளவில் தளர்ச்சி, புரிந்துகொள்ளும் உணர்வில் குறைபாடு இவையெல்லாம் இளைஞர்களைவிட முதியவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இவை முதுமை காரணமாக இயற்கையாக ஏற்படும் குறைபாடுகள். ஆனால், மனநலத்தைப் பொறுத்தவரை இளைஞர்களைவிட ஆரோக்கியமாக இருப்பவர்கள் முதியோரே. 20-கள், 30-களில் இருக்கும் இளைஞர்களிடம் பதற்றம், மனஅழுத்தம், கவலை ஆகியவை அதிக அளவில் காணப்படுகின்றன. மகிழ்ச்சி, திருப்தி, நிறைவான வாழ்க்கை இவை குறைவாகக் காணப்படுகின்றன. ஆக, மகிழ்ச்சியாக இருப்பது முதியோரே’ என்கிறது ஆய்வு. 

வயதாகிவிட்டது என்கிற எண்ணம் வரும்போது, அவர்களுக்கு ஒரு முதிர்ச்சி வந்துவிடுகிறது. இனி எல்லாம் நல்லவிதமாக நடக்கும் என்கிற எதிர்பார்ப்பும், அவர்களின் மனநலமும் முன்னேற்றம் அடைகிறது. ஆனால், இளைஞர்களுக்கோ மனதளவில் குழப்பம்தான் மிஞ்சுகிறது. பணம், கல்வி, காதல், வேலை என வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல தேவைகளும் அந்த வயதில்தான் எழுகின்றன. கூடவே, மற்றவர்களோடு தம்மை ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லும், `நாம் அவர்களைப்போல வெற்றிபெறவில்லையோ, நமக்கு எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்தும் அதையெல்லாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையோ’ என்றெல்லாம் இளைஞர்களை யோசிக்கவைக்கும் பருவம் அது. முதியவர்களால் சின்னச்சின்ன மனஅழுத்தம் தரும் விஷயங்களை எளிதாக உதறித்தள்ளிவிட முடியும். காரணம், அவர்களுக்குக் கிடைத்திருக்கும் அனுபவமும் முதிர்ச்சியும். அதோடு எதற்கும் உணர்ச்சிவசப்படாதவர்களாக, சிறந்த முடிவுகளை எடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.

`முதியவர்களுக்கு இன்றைய வாழ்க்கை எளிதானதாக இருக்கிறது. 1998-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டுக்குள், முதியவர்களுக்கு மனஅழுத்தம் தரக்கூடிய அறிகுறிகள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன’ என்கிறது ஓர் ஆய்வு. வேறு சில ஆய்வுகளோ, `கடந்த சில பத்தாண்டுகளில் இளைஞர்களிடையே கவலையும் மனஅழுத்தமும் அதிகமாகக் காணப்படுகின்றன’ எனக் குறிப்பிடுகின்றன. உலகமயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சி, உயர்கல்வி பயில்வதில் அதிகரித்துவரும் போட்டி, கணிசமான சம்பளம் வேண்டும் என்கிற எண்ணம், சமுதாயத்தில் மாறிவரும் பெண்களின் பங்கு என பல காரணிகள் முதியோர்களைவிட, இளம் பெண்களையும் இளைஞர்களையும் அதிகம் பாதிக்கின்றன. இந்த மன அழுத்தம் முதியோருக்கு இல்லை என்பதுதான் ஆய்வின் முடிவாக இருக்கிறது. 

இந்தியாவிலும் பிள்ளைகள், பெற்றோர்களைக் கண்டுகொள்ளாமல் விடுவது நடக்கத்தான் செய்கிறது. உள்நாட்டிலேயே வசித்தாலும், பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும் இருக்கிறது. ஆனால், சில பத்தாண்டுகளுக்கு முன்னர் முதியோர் இல்லம் என்பதே இங்கே நடைமுறையில் இல்லை என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். இன்றைய பரபரப்பான நகர, சிறுநகர வாழ்க்கைச் சூழலில், பெற்றோரை, முதியவர்களை வீட்டில் வைத்து பராமரிப்பது என்பது அனைவருக்கும் சாத்தியமில்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதே நேரம் இன்றைய இளைய தலைமுறையினர் அளவுக்கு முதியோருக்கு மனஅழுத்தம் அதிகம் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 

- பாலு சத்யா 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ