Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் குழந்தையின் காது பராமரிக்க டிப்ஸ்

                                                                                  

 

உங்கள் குட்டீஸின் காதுகளைப் பாதுகாக்கும் டிப்ஸினை வழங்குகிறார் மதுரையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை நல மருத்துவர் நாகராஜ குருமூர்த்தி.

* காதுகளைச் சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் குழந்தையின் காதுகளில் பட்ஸ், ஊக்கு போன்றவற்றை நுழைக்காதீர்கள். காதுகளைப் பராமரிக்க இயல்பாகவே சிபம் என்ற மெழுகு போன்ற திரவம் காதுகளில் சுரக்கும். அதனை அழுக்கு என்று தவறாக புரிந்துகொண்டு சுத்தபடுத்தி விடாதீர்கள். காதுகளின் வெளிப்புறத்தைமட்டும் மாதம் ஒருமுறை தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்துவது நல்லது.

* குழந்தையின் காதுகளில் ஏதேனும் சிறிய பூச்சி சென்றுவிட்டால், சுத்தமான எண்ணெய்யை அவர்களின் காதுகளில் ஊற்றி, முதலில் அந்தப் பூச்சியைச் செயலிழக்கச் செய்யுங்கள். அதன் பின்னர் காது-மூக்கு-தொண்டை சார்ந்த மருத்துவரை அணுகி, பூச்சியினை எடுத்துவிடுவது நல்லது. எக்காரணம் கொண்டும் சூடான எண்ணெய், தண்ணீரை காதில் ஊற்றாதீர்கள்.

* குழந்தைகள் காதில் பட்டாணி, காய்கறிகள் போன்று எளிதில் நீரில் ஊறக்கூடிய பொருளை நுழைத்துவிட்டால், எக்காரணம் கொண்டும் காதுகளில் தண்ணீர் ஊற்றாதீர்கள். அவை தண்ணீரில் ஊறி வெளியே எடுக்க முடியாத நிலைக்கு போய்விடலாம். எனவே உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது. அதேபோல காதில் சீழ் வடிவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்

* குழந்தைகள் பாடல் கேட்க அல்லது போனில் பேச என இயர் போனைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். தவிர்க்க முடியாத சூழலில்கூட இயர் போனுக்கு பதில் ஹெட் போன்களைப் பயன்படுத்தலாம்.

* குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஆசாரிகளிடம் இருக்கும் காது குத்தும் ஊசியை ஒரு முறை ஆண்ட்டி செப்டிக் மருந்தில் முக்கி எடுக்க வேண்டியது அவசியம். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜியை தடுக்கலாம்.

* பச்சிளம் குழந்தைகளின் காது தசைகள் மிகவும் மென்மையானவை எனவே அவர்கள் காதினைச் சுத்தம் செய்யும்போது மிதமான சூட்டில் இருக்கும் நீரில் சுத்தமான காட்டன் துணியை நனைத்து மெதுவாக வெளிப்புறம் மட்டும்  துடைத்து எடுக்கலாம்.

* பயணத்தின்போது பாடல்கள் கேட்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பயணக்கும் வாகனத்தின் சத்தம் மற்றும் பிற சத்தங்கள் கேட்காமல் இருக்க அதை விட அதிக ஒலியில் பாடல்களை வைத்து கேட்க ஆரம்பிப்பார்கள். இதனால் காது நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும்.

* காது நரம்புகள் தொண்டைக் குழாய்களுடன் சம்பந்தப்பட்டவை. எனவே குழந்தைகள் தூங்கச்செல்லும் முன் இனிப்பான அல்லது குளிர்ச்சியான பொருட்களைச் சாப்பிட கொடுத்தால் உடனே வாயை கொப்பளிக்கச்செய்வது நல்லது. இதனால் தொண்டையில் கிருமிகள் பரவுவதையும், அதன்மூலம் காது சவ்வுகளில் கிருமிகள் பரவுவதையும் தவிர்க்கலாம்.

* இனிய ஒலியை நமக்குத் தரும் காதுகளைப் பாதுகாப்போம்.

    - சு.சூர்யா கோமதி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ