Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரை வந்த 'மிஸ் போர்ச்சுக்கல்'... ஒரு விழிப்புஉணர்வு பயணம்!

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை அமெரிக்கத் தொண்டு நிறுவனமான 'ஸ்மைல் ட்ரைன்' உடன் இணைந்து, சில குறிப்பிட்ட நோய்களுக்கு  இலவச சிகிச்சை அளித்துவருகிறது. அதில், உதடு மற்றும் உள் அன்னப்பிளவு அறுவைசிகிச்சையும் ஒன்று.  இந்த அறுவைசிகிச்சைகளால் பயனடைந்த குழந்தைகளைக் காண்பதற்கும் , உதட்டுப்பிளவு மற்றும் அன்னப்பிளவுக்கான சிகிச்சை பற்றிய  விழிப்புஉணர்வு மக்களிடையே ஏற்படுத்தவும், 'மிஸ் போர்ச்சுக்கல்'  நிறுவன ஊழியர்களும், போர்ச்சுகல் சுற்றுலா அமைச்சக அலுவலர்களும் மதுரை மீனாட்சி மிஷன் வந்திருந்தனர். இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் 'இன்கிரடிப்ள் இந்தியா' திட்டத்திற்காக இவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் குழுவினருடன், 2016-ம் ஆண்டுக்கான 'மிஸ் போர்ச்சுக்கல்'  அழகி கிறிஸ்டினா வியானானும் ,  வனீஸா செளசா , சாரா சவேரி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ளனர். 


இவர்கள் வருகையின்போது, இரு நாட்டின் கலாச்சாரம், பண்பாடுகள் பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும், இதுபற்றி 'ஸ்மைல் ட்ரைன்'  இயக்குநர் லீலா இமாம் கூறுகையில், "தொடர்ந்து 17ஆண்டுகளாக  தற்போது வரை தமிழகத்தில் மட்டும் சுமார் 30,000 பேர் உதடு மற்றும் உள் அன்னப்பிளவு அறுவைசிகிச்சையால் பயனடைந்துள்ளனர். மேலும், இது போன்ற பிரச்னைகளோடு பிறக்கும் ஒவ்வொரு  குழந்தையையும் கண்டறிந்து சிகிச்சையும், மக்களிடையே இது குறித்த விழிப்புஉணர்வும் அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். பல லட்சம் குழந்தைகள் இவ்வாறு சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளனர் என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம். இந்த நிலையை முற்றிலுமாகப் போக்க முயற்சித்துவருகிறோம் . இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுதும் பல நாடுகளுக்குச் செல்ல உள்ளோம். இதற்கான விழிப்புஉணர்வுப் பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டுள்ள போர்ச்சுகல் அழகி கிறிஸ்டினா வியானா அவர்கள் தற்போது மதுரைக்கு வந்துள்ளது மிகவும் பெருமை அளிக்கிறது" என்றார் . 

அழகி கிறிஸ்டினா வியானா கூறுகையில் "நான் தற்போது பல குழந்தைகளைச் சந்தித்துவருகிறேன். மிகவும் பெருமையாக இருக்கிறது. என்னைக் காண்பதில் மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். அவர்களைக் காண்பதில் நானும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைகளின் உதடு, உள் அன்னப்பிளவு பிரச்னைகளைச் சாதரணமாக  எடுத்துக்கொள்ளாமல், அறுவைசிகிச்சை மூலம் சீராக்க வேண்டியது நம் கடமை. ஏனெனில், இது வெறும் தோற்றம் மற்றும் அழகு சார்ந்த விஷயம் மட்டும் அல்ல. இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், உணவு உண்ணும்போதும் பேசும்போதும் அவர்களுக்கு பலவித சிரமங்கள் உருவாகின்றன. மற்றவர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாகின்றனர். இதனால், அவர்களுக்கு தாழ்வுமனப்பான்மையும், மனஅழுத்தமும் ஏற்படுகின்றன. அதனால், இது குறித்து மக்களிடையே எடுத்துச்சொல்லி விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். மதுரைக்கு நான் வந்த உடன் எனக்கு மல்லிகைப் பூ மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இது, மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. மதுரை மக்கள் மிகுந்த அன்பானவர்கள். அவர்களுக்கு என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து பல நாடுகளுக்கும் சென்று குழந்தைகளைச் சந்திக்க உள்ளேன்" என்றார்.

- சே.சின்னதுரை
படங்கள்:  ஈ.ஜெ.நந்தகுமார் .

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ