Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எலிக்கு செயற்கைக் கருமுட்டை... விஞ்ஞானமா விபரீதமா?

இன்றைய மருத்துவத்துறையின் அபாரமான வளர்ச்சி மனிதகுலத்துக்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்வது ஒருபக்கம் என்றால், மனிதகுலத்துக்கு நல்லதா கெட்டதா என்று சந்தேகம் ஏற்படுத்தும் அதிரடியான கண்டுபிடிப்புகளும் மறுபக்கம் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. அதிலும், ‘ஜெனிடிக் சயின்ஸ்’ என்ற மரபியல்துறையில் நாளுக்கு நாள் ஏற்படும் புரட்சிகர மாற்றங்களில் பல அதிரடியானவை. இதோ இப்போது, செயற்கைக் கருமுட்டையை (Pseudo embryo) உருவாக்கிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள், ஐரோப்பாவின் பாத் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். இந்தக் கண்டுபிடிப்பு மேலும் வளர்ந்து, எதிர்காலத்தில் நடைமுறைக்கு வந்தால், பெண்ணின் துணை இல்லாமலேயே குழந்தையை உருவாக்க முடியும் என்பதுதான் அதிரடி!

ஐரோப்பாவின் ‘ஜர்னல் நேச்சர்’ என்ற மருத்துவ அறிவியல் இதழில், இதைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயற்கைக் கருமுட்டை உண்மையான கருமுட்டையைப் போலவே செயல்படும் என்கிறார்கள். முதல் கட்டமாக, இந்தச் செயற்கைக் கருமுட்டையில் ஓர் ஆண் எலியின் விந்துவை ஊசி மூலம் உள்ளே செலுத்தி, ஓர் எலிக்குஞ்சை உருவாக்கி உள்ளனர். இந்த எலி மற்ற எலிகளைப் போலவே ஆரோக்கியமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், இந்த ஆராய்ச்சியின் மூலமாக, கருமுட்டையில் விந்து துளைத்து உள்ளே சென்று வளர்வதால் மட்டுமே கரு உருவாகும் என்ற 200 வருட விஞ்ஞான நம்பிக்கையும் பொய்த்துவிட்டதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

கருமுட்டைக்குள் சென்ற விந்தணுவுக்குள் என்னென்ன வேதியியல் மாற்றங்கள் நடைபெறுகின்றன என்று இன்று வரை தெளிவாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. கருமுட்டைக்குள் செல்லும் விந்தணுவின் டி.என்.ஏ-க்கள் கலைக்கப்பட்டு, மீண்டும் ஒன்றாகச் சேர்க்கப்படுகின்றன. இந்த ஒன்றுசேர்க்கப்பட்ட டி.என்.ஏ-க்கள் கொண்ட விந்து, எவ்வாறு கருவாக உருமாற்றம் அடைகிறது என்ற குழப்பம் பல வருடங்களாக விஞ்ஞான உலகில் நீடித்து வருகிறது. இந்தச் சந்தேகத்தைத் தீர்க்க, கரு முட்டைக்குப் பதிலாக செயற்கைக் கருமுட்டையில் விந்தணுக்கள் செலுத்தப்பட்டு, இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இன்னும் இந்தச் சோதனை முழுமை பெறாத நிலையில், இதனை மனிதர்களிடம் சோதித்துப் பார்ப்பது முறையல்ல என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் பெர்ரி கூறுகையில், “இந்த ஆராய்ச்சி இன்னும் சோதனை நிலையில்தான் உள்ளது. ஒருவேளை இது வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் ஓர் ஆணின் ஒற்றை அணுவுடன் மற்றொரு ஆணின் விந்தணுவை இணைத்து ஃபெர்டிலைசேஷன் (Fertilization) மூலமாகக் கருவை உருவாக்கி, சோதனைக் குழாயில் வளர்க்கலாம். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தையின் தோற்றம், இருவரது சாயலையும் கொண்டிருக்கும். ஒரே ஆணின் ஒற்றை செல் மற்றும் விந்தணுவை எடுத்தும் கரு உருவாக்கலாம். ஆனால், அந்த ஆணுக்குப் பிறக்கும் குழந்தையின் சாயல், தோற்றம் க்ளோன் செய்யப்பட்டதுபோல அச்சு அசலாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. சில மாற்றங்கள் இருக்கலாம். ஏனெனில், இந்த முறைக்கும் க்ளோனிங் முறைக்கும் சம்பந்தம் இல்லை. மற்றபடி, இந்தச் செயற்கைக் கருமுட்டை ஆராய்ச்சியின் விளைவாக, எதிர்காலத்தில் பெண்ணின் உதவி இல்லாமலேயே ஆண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை உருவாகலாம்” என்றார்.

 

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ